minnambalam.com - Kavi : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால்
கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
குறிப்பாக அதிமுகவை பொறுத்தவரை தற்போது பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. அதேசமயம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் ஒன்றிணைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது என தமிழக அரசியலில் பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது.
இந்தசூழலில் தேர்தலையொட்டி இன்று (டிசம்பர் 23) அதிமுகவினரும் பாஜகவினரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதன்பின் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “என்.டி.ஏ கூட்டணி ஒரே குடும்பமாக இந்த தேர்தலை எதிர்கொள்ளும். திமுகவை வீழ்த்துவதற்கு இன்று ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளோம்” என்று கூறினர்.
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இருவரும் பதிலளிக்கவில்லை.
ஆனால், பியூஸ் கோயல் நடத்திய ஆலோசனையின் போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸையும், டிடிவி தினகரனையும் என்.டி.ஏ.வில் இணைக்க ஈபிஎஸ் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன. அதாவது கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தலில் பாஜக அதிமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்கவிருப்பதாகவும், அதில் சில தொகுதிகளை ஓபிஎஸுக்கும் டிடிவி தினகரனுக்கும் கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஆரம்பக்கட்ட ஆலோசனை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.
இந்தசூழலில் கடைசியாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில், எல்லோரும் ஒன்றாக இருப்பது, அதாவது ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் ஒன்றாக இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று எடப்பாடி ஒத்துக்கொண்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தரப்பு கூறுகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.
இந்தசூழலில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் அதிமுக 170, பாஜக -23, பாமக -23, ஓபிஎஸ் அணிக்கு 3, டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் என குறிப்பிட்டு தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு நயினார் நாகேந்திரன், தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை. இன்று அதுமாதிரியான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலை ஒப்பிட்டு ஆலோசனை நடத்தினோம் ” என்றார்.
தேமுதிக, பாமக உடனான கூட்டணி நிலை குறித்த கேள்விக்கு, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார்.
அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை… நிரந்தர நண்பர்களும் இல்லை என்று சூசகமாக பதிலளித்தார்.
ஓ.பன்னீர் செல்வத்தை என்.டி.ஏ கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக தகவல்கள் வரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவினருடன் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இன்றைய தகவலின் படி, ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, பாஜக, பாமக என கூட்டணி அமைந்தால் அது திமுக கூட்டணிக்கு டஃப் பைட்டாக இருக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக