மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : கோவை பீளமேடு பகுதியில் ஹோட்டல் முன்பு , பார்ட்டி ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை முன்விரோதம் காரணமாக தாக்கிய ஈரோடு பா.ஜ.க பிரமுகர் உட்பட 9 பேரை இன்று (டிசம்பர் 25) பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு கார்கள் மற்றும் இரு அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் ரெஸ்ட்ரோபார்களில் மதுபானத்துடன் நடன நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யும் நிறுவனம் பிரபல பிக்டாடி . இந்த நிறுவனம் கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் கடந்த 20 ம் தேதி நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பிக்டாடி நிறுவனத்தை சேர்ந்த சூர்யா ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு பா.ஜ.க வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகு சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் உதய தீபன், சூர்யகுமார், அபிஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
மது போதையில் நடனமாடும் போது அருகில் உள்ள நபர்களுடன் ரகு சூர்யாவின் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிகழ்ச்சியை நடத்திய சூர்யாவும் அவரது ஆட்களும் சேர்ந்து பாஜக பிரமுகர் ரகுசூர்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிக் டாடி நிறுவனத்தினர், பீளமேடு பகுதியில் உள்ள விஜய் எலன்சா என்ற ஹோட்டலில் உள்ள ரெஸ்ட்ரோ பாரில் நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர். இதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்த ஈரோடு பா.ஜ.க வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகு சூர்யா, தனது நண்பர்களுடன் வந்து ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தார்.
இதையடுத்து நடன நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிக் டாடி நிறுவன ஊழியர்கள் சூர்யா மற்றும் தேவராஜ் ஆகியோர் விஜய் எலன்சா என்ற ஹோட்டலில் இருந்து வெளியே வந்த போது அவர்கள் மீது கத்தி, கற்கள் மற்றும் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் சூர்யா மற்றும் தேவராஜ் வந்த காரையும் அடித்து சேதப்படுத்தினர். இதில் சூர்யா, தேவராஜ் ஆகிய இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து காயம் அடைந்த சூர்யா மற்றும் தேவராஜ் ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் இன்று பா.ஜ.க ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரகு சூர்யா, ரிச்சர்ட், ஸ்ரீமன் தீபக், சூரியகுமார், வேதநாயகம், வினோத் குமார், முகமது உமர் மற்றும் உதயதீபன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள் மற்றும் இரண்டு கார்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக