வாழ்வியல் சிந்தனைகள் – 64 – ராதா மனோகர்
நாம் யார்? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன?
இதில் எந்த கேள்வி உதித்தாலும் உடனடியாக ஒரு ஆயத்த ஆடைகள் போன்ற பதில்களை தர சகல சமயங்களும் வழிகாட்டிகளும் குருமார்களும் காத்திருக்கிறார்கள்!
எமது கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் தித்திப்பான ஒரு காரியமாக அவர்கள் எதிர்கொள்கின்றனர். எமது கேள்விகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.
அவர்களை பின்பற்றுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாக நம்பிக்கை அளிக்கின்றனர்
நாம் அவர்களின் பதில்களில் இருந்து தற்காலிகமான போதை உணர்வுகளை பெறுகிறோம்.
ஆனால் அறிவை பெறுகிறோமா என்றால் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அவர்களிடமே இல்லாத அறிவை அவர்கள் எப்படி எமக்கு தரமுடியும்?
நம்மை தங்கள் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளப்பண்ணியே எம்மை ஆட்டு மந்தைகளாக்கி விட்டார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படியே நம்பி பின்னால் சென்றததனால் எதையுமே சுயமாக சிந்திக்க முடியாதவர்களாகி விட்டோம்.
சதா நம்புவதற்கு ஏதாவது ஒரு தூண் நமக்கு தேவை படுகிறது.
சாமி சமயம் அல்லது கலாசாரம் மேலும் அரசியல் தலைவர் அல்லது சினிமா நடிகர் போன்று ஏதாவது ஒன்று நம்பிக்கை கொள்வதற்கு தேவை படுகிறது.
இந்த நம்பிக்கை என்பது மருந்து மாதிரி தவிர்க்க முடியாததாகிவிட்டது.
தேவை ஏற்படும்போது ஏதோ ஒரு தெரபி என்று கண்டுக்காமல் இருந்து விடலாம்.
ஆனால் இங்கே நடப்பது என்ன?
மருந்தையே சாப்பாடாக எண்ணி சாப்பிட்டு சாப்பிட்டு எல்லோரும் விசித்திர நோயாளிகளாக மாறிவிட்டனர் அல்லவா?
தனக்கு தானே படைப்பாளி என்ற அற்புத சிருஷ்டி தத்துவத்தை அடியோடு மறந்தவர்களாக வெறும் வெறுமையான மனிதர்களாக உருமாறி விட்டனர்.
இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி.
மனிதர்கள் தான் ஒரு சிருஷ்டியாளன் என்பதை உணராமல்,
எதோ ஒரு சக்தி அல்லது யாரோ ஒருவர் எதோ ஒரு விதமாக தன வாழ்வை தீர்மானிக்கிறார் என்றல்லவா கருதுகிறாரக்ள்?
ஏதோவொரு இருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து இறந்து விடுகிறார்கள்.
தன் வாழ்வை தான் வாழ்வது தான் வாழ்க்கை.
யாரோ ஒருவரது வாழ்வை தான் வாழ்வது வாழ்வே அல்ல.
சுயமாக சிந்திப்பதற்கு இவர்களை தடுப்பது இவர்களின் மனதில் ஏற்கனவே பதிந்து விட்ட நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளாகும்
அந்த நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் மனிதர்களின் கண்களை மூடிவிட்டன என்றே கூறலாம்
கண்ணை மூடிக்கொண்டு பின்னால் செல்வதையே ஒரு வாழ்வியலாக கொண்டுவிட்டனர்..
அது புண்ணியம் என்றுவேறு எண்ணிக்கொள்கிறார்கள்.
கண் முன்னே நிரூபணமாக தெரியும் உண்மைகளை கூட நம்புவதற்கு இவர்களுக்கு ஏதாவது ஒரு பழைய கோட்பாடு தேவைபடுகிறது.
நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஏதோ ஒரு பாபகாரியம் என்றல்லவா எண்ணுகிறார்கள்?
சுயசிந்தனை என்றால் ஒரு தீண்டத்தகாத விடயமாக அல்லவா கருதுகிறார்கள்.
ஏதாவது ஒரு நம்பிக்கையில் தங்கி இருக்க வேண்டும் என்ற கோட்பாடு ஆழமாக வேருன்றி விட்டது.
இதன் காரணமாக இவர்களால் எதையுமே உண்மையில் காண முடியாத மனிதர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு தூரம் இந்த நம்பிக்கை என்ற சமாசாரத்தை விமர்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதற்கு காரணம் அறிவியலுக்கு இந்த நம்பிக்கை தான் முதல் எதிரியாக தெரிவதுதான்.
அறிவியல் உண்மைகளுக்கு கூட நம்பிக்கை முலாம் பூசவேண்டி இருக்கிறது.
நம்பிக்கை முலாம் பூசாத பொருளை விற்பது கஷ்டமாக இருக்கிறது.
நம்பிக்கை கோட்பாடுள்ளவர்களின் முரட்டு பின்பற்றுதல் வியாதி ஒருபுறம் என்றால் இந்த கடவுள் மறுப்பாளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் என்போரும் தங்கள் பார்வையை சற்று விசாலமாக்க வேண்டியது அவசியமாகிறது.
இவர்கள் பாரம்பரிய விஞ்ஞான பௌதிக கோட்பாடுகளை விட்டு கொஞ்சம் மேலே நகர மறுக்கிறார்கள்
இவர்களும் சற்று வெளியே வரவேண்டியது மிக மிக அவசியமானது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக