செவ்வாய், 23 டிசம்பர், 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யு என் பி தலைமையை விட்டுக்கொடுக்க தயார்

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு திறமையில்லையேல் நாடே அழியும்: ரணில் விசேட  அறிக்கை - Murasu.lk

 வீரகேசரி : நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட இந்த அரசாங்கம், ரணில் என்ற தனி மனிதனைக் கண்டு இந்தளவு அச்சமடைந்து, அவரை அரசியலில் இருந்து நீக்குவதற்கு ஏன் இவ்வளவு முயற்சிக்கிறது என்பதற்கான காரணங்கள் இப்போது மிகத் தெளிவாக வெளிப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தில் இருப்பவர்களின் பேச்சைப் போலவே அவர்களது செயல்களும் இருக்கும் என்று இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நினைத்ததுடன், அதனைத் தலைமேல் வைத்து நம்பினார்கள்.
நாட்டின் கையிருப்பு பூச்சியமாக வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை பொறுப்பேற்று கண்முன்னே அதைக் கட்டியெழுப்பிய மனிதனைப் புறக்கணித்துவிட்டு, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள், இன்று வீதிச் சந்திகளிலும் கடைகளிலும் நின்று அரசாங்கத்தைத் திட்டித் தீர்க்கின்றனர் என தலத்தா அத்துகோரல குறிப்பிட்டார்.



எப்படியிருப்பினும், யானைச் சின்ன கட்சியின் தலைவரான ரணில், தனது யானைப் படையை திரட்டுவதற்கான பணிகளை மீண்டும் மெதுவாக ஆரம்பித்துள்ளார்.

இது அடுத்த ஆண்டு முதல் அதிவேகப் பயணமொன்றை தொடங்குவதற்காகவே ஆகும். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கடந்த புதன்கிழமை சிறிகொத்தாவில் ரணில் தலைமையில் கூடியது. இதன்போது, ரணில் ஒரு விசேட விடயத்தைச் செயற்குழுவிற்கு அறிவித்தார்.

அதாவது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் இணைவிற்குத் தான் ஒரு தடையாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து கூட விலகத் தயார் என்பதே செயற்குழுவிடம் தெரிவித்த அந்த விடயமாகும்.

இதனைச் செயற்குழுவிடம் அறிவித்ததும், அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் முகத்தோடு முகம் பார்த்துக் கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்துழைப்பு பேச்சுகள் தற்போது நடைபெற்று வருவதுடன், அதற்காக பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலத்தா அத்துகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க உட்பட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச நேரடியாகவே தலையிட்டு வருகிறார்.

‘இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தைகளை இரு பக்கமும் இழுத்து கொண்டிருக்க முடியாது.

விரைவில் முடித்துவிட்டு ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். பேச்சுவார்த்தைகளை மந்தகதியில் இழுத்தடிக்க வேண்டிய காலம் இதுவல்ல’ என ரணில் விக்கிரமசிங்க நெற்றியைச் சுருக்கியபடி செயற்குழுவிடம் கூறினார்.

‘சார், நாங்கள் விரைவில் ஒரு தீர்மானத்திற்கு வருவோம். எப்படியும் அரசாங்கத்தின் செல்வாக்கு மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது.

மத்திய மலைநாட்டில் மண்சரிவு ஏற்படுவதை விடவும் வேகமாக அரசாங்கத்தின் செல்வாக்குச் சரிவடையத் தொடங்கியுள்ளது’ என வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

‘அடுத்த ஆண்டு முதல் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பலமான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும்.

அந்த மக்கள் சக்தி ஏற்கனவே உருவாகத் தொடங்கியுள்ளது. நாம் செய்ய வேண்டியது அந்த மக்கள் சக்தியை ஒருங்கிணைப்பது மாத்திரமே’ என ரணில் பதிலளித்தார்.

‘சார், நீங்கள் இந்த நாட்டின் தோல்வியடைந்த தலைவரல்ல. சமீபத்திய யுகத்தில் மிகவும் வெற்றிகரமான ஜனாதிபதியாக இருந்தவர் நீங்கள். அப்படி இருக்கையில் ஏன் பதவியை வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு விலக வேண்டும்?’ என ரணில் கூறியதற்குப் பதிலாகச் செயற்குழு உறுப்பினர்கள் இதன் போது கருத்துத் தெரிவித்தனர்.

‘நான் கட்சித் தலைவராக நீண்ட காலம் இருந்துவிட்டேன். நாட்டின் ஜனாதிபதியாக இருந்தேன். அடையக்கூடிய உச்சபட்ச இடத்திற்குச் சென்றுவிட்டேன்.

அதேபோல், நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது அதனைப் பொறுப்பேற்று கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தேன். எனவே, இந்த விட்டுக்கொடுத்தல் எனக்கு ஒரு பிரச்சினையல்ல.

ஆனால், இதனை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் எனப் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டால், அதற்கு நீங்கள் விருப்பமென்றால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இந்த இரு கட்சிகளும் இணைவதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன்.

அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, நான் தலைமையிலிருந்து விலகி சஜித்திடம் அல்லது வேறு ஒருவருக்குத் தலைமையை வழங்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு, அதற்கு நீங்கள் விருப்பமென்றால் அதற்கும் எனது எதிர்ப்பில்லை.

அத்தகைய ஒரு இணைப்பிற்காக எந்த நேரத்திலும் தலைமையிலிருந்து விலக நான் தயார்’ என ரணில் மிகவும் உறுதியான தொனியில் செயற்குழு கூட்டத்தில் கூறினார்.

பிறந்த நாளில் அரசியல் கிசு கிசு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்வாரம் இடம்பெற்றது.

அந்த விருந்தில் கௌரவ விருந்தினராக ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். திகாம்பரம், காவிந்த ஜயவர்தன, மன்சில், சாகல ரத்நாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் நிமல்கா பெர்னாண்டோ உட்பட பல முக்கியஸ்தர்கள் அங்கு சமூகமளித்திருந்தனர்.

இதன் போது சமகால அரசியல் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் ஏகோபித்த கருத்தாக இருந்தது.

‘உண்மையில், சஜித்திடம் எந்தவொரு கொள்கையும் இல்லை என்பதை ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள அனைவரும் தற்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

என்ன செய்ய வேண்டும். எப்படி இணைவது? இது எதுவுமே அவருக்கு தெரியாது’ என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ரணிலிடம் தெரிவித்தார்.

‘நான் விலகினால் உங்களால் இணைய முடியுமா? உண்மையில் அப்படி இணைய முடியும் என்றால் சொல்லுங்கள். அதுவும் நடக்காது தானே’ என ரணில் இதன் போது அவரிடம் கேட்டார்.

ரணில் கூறிய அந்த வார்த்தைகளுக்கு, அங்கிருந்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதில் ஏதும் கூறாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

வியாழக்கிழமை சந்திப்பு

பாராளுமன்றக் குழுவினர் மற்றும் ரணிலின் அரசியல் சகாக்களுக்கு இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை இடம்பெற்ற போது, அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக பின்வருமாறு கூறினார்,

‘ நாட்டில் தற்போது சிறுபிள்ளைத்தனமான அரசியல் தலைவர்களுக்கு அல்ல, ரணில் போன்ற ஒரு ஆளுமைக்கான தேவையே நிலவுகிறது.

களமிறங்கி, சவால்களை ஏற்று, வேலை செய்து காட்டிய ஒரு தரலவரும் அவர் தான்’ என கூற, அங்கிருந்த அனைவரும் தலை அசைத்து அதனை ஆமோதித்தனர்.

‘டொலர் மீண்டும் 312 ரூபாய் வரை அதிகரித்துள்ளது அல்லவா? மீண்டும் மெல்ல மெல்ல கோட்டபாய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தை நோக்கிப் பயணிக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது’ என அங்கிருந்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியதுடன்,

‘நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்வதற்காக முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல போன்ற நாடகங்களை அரசாங்கமே முன்னெடுக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும்’ அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

‘வீடும் காணியும் போனால் மறுபேச்சின்றி ஒரு கோடி தருவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறினார். அந்த போலி வாக்குறுதியை மாற்றுவதற்காக தற்போது ஒரு கோடி சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இதைத்தான் காலத்தின் கோலம் என்று சொல்வது’ என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கூறினார்.

களைகளாக மாறிய மலர்ச் செடிகள்

‘எப்படியிருப்பினும், அசோக ரன்வலவின் பிரச்சினையால் அரசாங்கத்தின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து,

அவர்களின் உண்மையான முகம் தெரிய ஆரம்பித்துள்ளது. சட்டத்தின் ஆட்சி தங்களைச் சார்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே மாதிரியாகச் செயல்படுகிறதா அல்லது வேறுபட்டதா என்பதை மக்கள் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்’ என அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

‘எப்படியிருப்பினும், இவ்வளவு விரைவாக மலர்ச் செடிகள் களைகளாக மாறும் என்று அநுரகுமார திசாநாயக்க கூட நினைத்திருக்க மாட்டார். டிரம்பை விடவும் மார்பை விரித்துக்கொண்டு திருகோணமலை கடற்படை நிகழ்வில் நடப்பதைப் பார்த்தேன்.

அந்த நாடகத்தைப் பார்த்த போது, சிறு வயதில் நான் படித்த தவளையின் கதைதான் எனக்கு நினைவுக்கு வந்தது’ என ராஜித சேனாரத்ன சிரித்து கொண்டே கூறினார்.

‘தித்வா பேரழிவிற்கு பிறகு, தரவுகள் இல்லாத இந்த அரசாங்கம் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளதாகத் தெரிகிறது.

தரவுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசாங்கத்தின் போக்கு ‘கேட்கிறது ஒன்று சொல்வது இன்னொன்று’ என்ற கதையாக இருப்பதை நாட்டின் தொண்ணூறு சதவீதமான மக்கள் இப்போது நன்கு உணர்ந்துள்ளனர்.

இழப்பீடு வழங்குவதும் வெறும் வாய் வார்த்தை வாக்குறுதியாகவே மாறியுள்ளது.

அந்த இழப்பீடு இவ்வளவுதான் என்று சரியாகக் கணக்கிட முடியாது. நீதிமன்றத்திற்குச் சென்றால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகையை விட அதிக இழப்பீட்டை வழங்க உத்தரவிட கூடும். ஏனெனில், இங்கே அரசாங்கம் சரியான முறையில் முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை’ என ரணில் இழப்பீடு குறித்துக் கூறினார்.

ரணில் பாராளுமன்றம் வருவாரா?

‘சார். நீங்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரப்போவதாக சமூக ஊடகத்தளங்களில் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன. அந்தச் செய்தியில் உண்மை இருக்கிறதா?’ என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ரணில் தலையை ஆட்டியபடி வேறு பக்கம் பார்த்தாரே தவிர எதுவும் கூறவில்லை.

‘அடுத்த ஆண்டு முதல் எதிர்க்கட்சியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்கத்துடன் செயற்படுவதைக் காண்பதே ரணிலின் எதிர்பார்ப்பாகும். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எதிர்க்கட்சிகளை அணிதிரட்ட வேண்டும்.

அடுத்த மூன்று மாதங்கள் அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால், நோக்கம் வெற்றியடையும்’ என தினித் சிந்தக இதன் போது கூறினார்.

(லியோ நிரோஷ தர்ஷன்)

கருத்துகள் இல்லை: