திங்கள், 3 ஜனவரி, 2022

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் டெல்லியின் வலைப்பின்னல்! பேராசிரியர் ஜெயரஞ்சன் விலாவாரியாக விளக்கம்

தமிழக  நிர்வாகத்தில் டெல்லியின் வலைப்பின்னல்: போட்டுடைத்த ஜெயரஞ்சன்

மின்னம்பலம் : புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும் தமிழ்நாடு - இந்திய அரசியலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. புத்தகங்களில் இருக்கும் தகவல்களை விட அதிக அதிர்ச்சியான பரபரப்பான தகவல்கள் புத்தக வெளியீட்டு விழாக்களில் எதேச்சையாக வெளிப்பட்டு விடுவதுண்டு.
சென்னைப் புத்தகக் காட்சி ஒமிக்ரான் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டாலும், புத்தக வெளியீடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் தமுமுகவின் பொறுப்புப் பொதுச் செயலாளரும், பேராசிரியருமான கவிஞர் ஆரூர் புதியவன் என்கிற ஹாஜா கனியின், ‘சூடு’ கவிதைத் தொகுப்பு நேற்று (ஜனவரி 2) சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்பட்டது.


மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் நடந்த விழாவில், திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

கவிக்கோ மன்ற நிறுவனர் சிங்கப்பூர் முஸ்தபாவின் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், ஆடியோ வழியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பி நவாஸ் கனி, ஊடகவியலாளர் செந்தில்வேல், கவிஞர் யுகபாரதி, கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இவர்களில் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவரும், பொருளாதார ஆய்வாளரும், மின்னம்பலம் வாசக நேயர்களுக்கு நன்கு பரிச்சயமானவருமான முனைவர் ஜெயரஞ்சனின் உரை அதிர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

தமிழகத்தின் மாநிலத் திட்டக்குழு என்பதை மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவாக கடந்த ஜூன் மாதம் மறு சீரமைப்பு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது தலைமையிலான இந்தக் குழுவின் துணைத் தலைவராக, பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சனை நியமித்தார்.

தமிழக வளர்ச்சிக்கான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு செய்து வருகிறது.

இதன் துணைத் தலைவரான ஜெயரஞ்சன் , ‘சூடு’ வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில்,

“நான் ஆராய்ச்சி செய்து புள்ளி விவரங்களோடு எழுதும் கட்டுரைகளில் சொல்லும் விஷயங்களை சில வரிகளில் கவிதை மூலமாக சொல்லிவிடுகிறார் ஹாஜா கனி. ஜிஎஸ்டி, பண மதிப்பழிப்பு பற்றியெல்லாம் நான் அறுபது கட்டுரைகளில் எழுதியதை நான்கு வரிகளில் கொண்டுபோய் சேர்த்து விடுவதுதான் ஹாஜாகனி கவிதையின் சிறப்பு.

இன்ஸ்டிட்யூஷன் டெஸ்ட்ராய் எனப்படும் நிறுவனச் சிதைவு பற்றி இங்கே பலரும் பேசினார்கள். பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பேசும்போது எதிரிகள் வெளியே இருந்து வரவேண்டுமென்பதல்ல உள்ளேயே இருக்கிறார்கள் என்றார். நான் கடந்த ஆறு மாதமாக நிர்வாகத்துக்குள் இருந்து வரும் நிலையில் அதை உணர்கிறேன். இதுபற்றி விரிவாக உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால், அது உண்மை.

அவர்களின் பிடியில் இருந்து மீள்வதற்கு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்களும் மீளலாம் என்று என்னென்னமோ செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் குழிகளை வெட்டிக் கொண்டே இருக்கிறான். ஒரு ஸ்டெப் எடுத்து வச்சோம்னா அடுத்து எங்க குழிவெட்டிருக்கான்னு தெரியமாட்டேங்குது. இந்த பத்து வருடங்களில் அவர்களின் வலை அந்த அளவுக்கு நுட்பமாகவும், ஆழமாகவும் விரிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்க அது தெரிவதே இல்லை. அந்த வலையை அறுக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் அது சாமானியமல்ல. ஏன் அப்படினு கேட்டீங்கன்னா, நமக்குனு இருக்கும் அதிகாரம் ரொம்பக் குறைவு. இப்ப தமிழ்நாட்டுல மட்டும் நமக்கு அதிகாரம் ஓரளவுக்கு இருக்கு.

ஆனா, இந்த அதிகாரத்தின் இன்னொரு பகுதி, பல அங்கங்கள் அவர்களிடம் இருக்கிறது, டெல்லியில் செகரட்டரியேட் என்று ஒன்று இருக்கிறது. அவர்களோடு சேர்ந்துதான் நாம் இத்தனை வேலைகளை செய்ய வேண்டியிருக்கு. நாம் இங்கே வேலை செய்யும்போது அவர்கள் அங்கிருந்து போடக் கூடிய உத்தரவுகள், திட்டங்களை எல்லாம் எதிர்த்து இடைவிடாது போராடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

எல்லா உயர் கல்வி நிறுவனங்களையும் அவர்கள் கைப்பற்றிக்கொண்டுவிட்டார்கள், அதுமட்டுமல்ல... முன்பெல்லாம் அவர்களின் கொள்கைகளை மறைமுகமாக திணிப்பதாகக் கருதினோம். இப்போது மறைமுகமெல்லாம் கிடையாது, ஓப்பனா,நேரடியா இதைதான் செய்யணும்னு சொல்கிறார்கள். ரிவ்யூக்கு வர்ற அதிகாரிகளாக யாரை அனுப்புகிறார்கள்னு கேட்டீங்கன்னா சாஸ்திரிகளையும் மேஸ்திரிகளையும் அனுப்பறாங்க. அவர்கள் என்ன கேட்கிறாங்கன்னா, ‘பெரியார் பத்தியும் தமிழ் பத்தியும் எதுக்கு ஆராய்ச்சி பண்றீங்க. இதெல்லாம் நாட்டுக்குத் தேவையா? அர்த்த சாஸ்திரம் பத்தி ரிசர்ச் பண்ணுங்கனு நேரடியாம நம்ம ஊருக்கே வந்து சொல்றாங்க. அந்த அளவுக்கு மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இப்படி பல்கலைக்கழகங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள், பாடத் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். நிதித் திட்டங்களில் வேர் விட முயற்சி செய்கிறார்கள். இப்படி பல தளங்களில் அவர்கள் வேர் விட முயற்சி செய்கிறார்கள். இவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கு மக்களிடையே இது போன்ற கவிதைத் தொகுப்புகளையெல்லாம் நாம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு சூடு என்ற இந்த கவிதைத் தொகுப்பு பெரிய அளவில் உதவும்” என்று பேசினார் பொருளாதார ஆய்வாளரான ஜெயரஞ்சன்.

சூடு கவிதை நூல் வெளியிட்டு விழாவில் தமிழ்நாடு அரசின் முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் வெளியிட்ட இந்தத் தகவல் சூடானது.

-ஆரா

கருத்துகள் இல்லை: