புதன், 8 ஆகஸ்ட், 2018

கண்ணீர் கடலில் இறுதிப் பயணம்! அண்ணா சாலை வழியாக ,,

கண்ணீர் கடலில் இறுதிப் பயணம்!
மின்னம்பலம் :அண்ணாவின் அருகில் துயில்கொள்வதற்காக திமுக தலைவர் கலைஞரின் இறுதிப் பயணம் அண்ணா சாலை வழியாகவே சென்று அண்ணா சதுக்கத்தை அடைந்தது.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக் குறைவால் நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். ராஜாஜி அரங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 8) அதிகாலை வைக்கப்பட்ட கலைஞரின் உடலுக்கு தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்க, சற்று தொலைவிலிருந்து தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்திவந்தனர்.
கலைஞரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காக காவல் தடுப்புகளை தகர்த்த தொண்டர்கள், படிகள் மேலேறிச் சென்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாததாலும், இதனால் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவது தாமதமானதாலும் குறித்த நேரத்தில் இறுதி ஊர்வலம் புறப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

ஆனால் திட்டமிட்டபடி ஊர்வலம் நடைபெற வேண்டும் என்பதால், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொண்டர்களை நோக்கி மைக்கில், “தீர்ப்பு நமக்கு சாதமாக வந்தபோதே, ஆட்சியாளர்கள் கலவரத்தை உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார்கள். அமைதியாக, கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கலைந்து சென்றால்தான் 4 மணிக்கு தலைவரின் இறுதி பயணம் நடைபெறும். படியேறி மேலே வரும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து தொண்டர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
மாலை 3.30 மணிக்கு ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறைவடைந்ததையடுத்து, இறுதி ஊர்வலத்திற்காக கலைஞரின் உடலை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனமும் அங்கு வந்தது.ராணுவ வாகனத்திற்கு கலைஞர் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையை ராணுவ வீரர்கள், எடுத்துச் சென்றபோது திரண்டிருந்த தொண்டர்கள் கண்ணீர் மல்க முழக்கமிட்டனர்.
லட்சக்கணக்கான தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்து, மாலை 4மணியளவில் வங்கக் கடலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது கலைஞரின் உடல். சிவானந்தா சாலை வழியாக புறப்பட்டு பெரியார் சிலையைக் கடந்து அண்ணாவின் அருகே துயில்கொள்வதற்காக அண்ணா சாலை வழியாகவே சென்றது அவரது அன்புத் தம்பியான கலைஞரின் உடல். ஏறத்தாழ 2கிமி தூரம் மட்டுமே கொண்ட இந்த பகுதிகளை ராணுவ வாகனம் கடக்க சுமார் இரண்டு மணி நேரமானது.
ராணுவ வாகனத்தின் நாற்புறங்களையும் சூழ்ந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ”வாழ்க வாழ்க வாழ்கவே டாக்டர் கலைஞர் புகழ் வாழ்கவே” என்று உணர்சிப்பிழம்பு வெடிக்க முழக்கமிட்டபடி கண்ணீரோடு பின் தொடர்ந்தனர். வாகனத்திற்கு முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நடந்து சென்றன

கருத்துகள் இல்லை: