ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

ஐ ஜி பொன் மாணிக்கவேல் சீருடையில் உள்ள ஒரு கிரிமினல் ,,, அறநிலையத் துறை இணை ஆணையர் கைது – உண்மை என்ன ?


Naachiyar : அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை பொன்.மாணிக்கவேல் கைது செய்திருப்பது அறநிலையத்துறை உள்வட்டாரங்களை நன்கு அறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் மூலவர் ஒன்று இருக்கிறது. இதற்கு, ஒரு உற்சவர் இருப்பதுதான் ஆகம விதி. ஆனால், தொன்மையான உற்சவர், 2009-ல் காஞ்சி மடத்தால் செய்து தரப்பட்ட உற்சவர் 2015ம் ஆண்டு முத்தையா ஸ்தபதி, கூடுதல் ஆணையர் கவிதா மற்றும் ஆணையர் ஆகியோரின் மேற்பார்வையில் செய்யப்பட்ட ஒரு உற்சவர் என்று தற்சமயம் 3 உற்சவர் சிலைகள் தற்போது இருக்கின்றன. 93-ம் ஆண்டு இத்திருக்கோயிலில் தொன்மையான சோமாஸ்கந்தர் சிலையிலிருந்த சிறிய கந்தர் சிலை மட்டும் களவாடப்பட்டுள்ளது. சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கண்டுபிடிக்க முடியவில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கந்தர் சிலை எங்குள்ளது, எந்த வெளிநாட்டு மியூசியத்துக்குக் கடத்தப்பட்டுள்ளது என்பதை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தற்போது கண்டறிந்துள்ளது. அந்தச் சிலையைத் திருப்பித்தருவதாக சம்பந்தபட்ட மியூஸியத்தினர் கூறியுள்ளனர்.
குறைந்தபட்சம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை பெரிய அங்கங்கள் முகம், நெஞ்சு, தொடை எதுவும் பின்னமாகாமல், கைவிரல் நகம் மற்றும் காது நுனி பகுதிகளில் லேசான சேதத்துடன் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில்தான், 2009ம் ஆண்டு ஒரு சோமாஸ்கந்தர் சிலையும், ஏலவார்குழலி அம்மன் சிலையும் செய்யப்பட்டுள்ளது. அடுத்து, கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி மற்றும் ஒரு சில ஸ்தானிகர்கள் எல்லாம் சேர்ந்து தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை பின்னமாகிவிட்டது என்று ஒரு விஷயத்தைக் கிளப்பியுள்ளனர். இதை முத்தையா ஸ்தபதியிடமே கொடுத்து கருத்துரையும் கேட்டுள்ளனர். சில ஸ்தானிகர்கள் ஒத்துழைக்க மறுக்கவே, பரம்பரையாக செய்துவரும் வேலையை காலி செய்து விடுவோம் என்று மிரட்டி பணியவைத்துள்ளனர். இதையடுத்துதான், புதிதாக சோமாஸ்கந்தர் சிலை செய்வதற்கான பணிகள் நடந்துள்ளன. இதற்காக வசூலிக்கப்பட்ட தங்கத்தில்தான் மோசடி நடந்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட சிலையில், துளிகூட தங்கம் இல்லை என்பதைத்தான் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கையாகக் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தான் கவிதா கைது நடந்திருக்கிறது” இது தான் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் கூறும் புகார்.
இதை ஆதாரமாக வைத்து தான் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்திருக்கிறார்கள். சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு வந்த காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு வரச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். ‘சம்மன் இருக்கிறதா’ என்று கவிதா கேட்டிருக்கிறார். சம்மன் எதுவும் இல்லாத போலீசார், அவரை தங்களுடன் வரச்சொல்லி கேட்டிருக்கிறார்கள். அப்போது அங்குவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கவிதாவை கைது செய்து கும்பகோணம் கோர்டில் ஆஜர்படுத்தியிருக்கிறார். கவிதா கைதுக்கான வாரண்ட் கூட அவர்களிடம் இல்லை. முறையாக விசாரணைக்குக் கூட அழைக்கப்படாமல் தான் கவிதாவின் கைது அரங்கேறியிருக்கிறது. காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இந்த வழக்குக்காகப் போடப்பட்ட எப்.ஐ.ஆரில் கூட கவிதாவின் பெயர் இல்லை. இப்படி சம்மனும் அனுப்பாமல், எப்.ஐ.ஆரும் இல்லாமல் தான் பொன்.மாணிக்கவேல் கைது படலத்தை நடத்தியிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேலிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். சம்மன் அனுப்பாமல் எதற்கு விசாரணை என்று  நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். மேலும், ஒரு வருடத்துக்கு முன் போடப்பட்ட வழக்கு இது, அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பொன்.மாணிக்கவேல் ஆதாரத்தை சமர்பிக்காமல், கால அவகாசம் கேட்டிருக்கிறார். பொன்.மாணிக்கவேலை எச்சரித்த நீதிபதிகள்’ ஆதாரத்தை வரும் திங்கட்கிழமை சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றிருக்கிறார்கள்.
அப்படி என்றால் உரிய ஆதாரம் இல்லாமல் தான் கவிதா கைது செய்யப்பட்டிருக்கிறாரா..?
இதுகுறித்து அறநிலையத்துறையினர்  கூறும்போது ” அறநிலையத்துறையின் திருப்பணிக்கு கவிதா தான் தலைமை அதிகாரி. 1998ல் அறநிலையத்துறையில் வேலைக்கு சேர்ந்த கவிதாவுக்கு தற்போது கூடுதல் ஆணையர் எனும்  பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே அறநிலையத்துறையில் பலருக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. அறநிலையத்துறையில் ஊழல் செய்த சிலரை வெளிச்சம் போட்டுக்காட்டியவர் கவிதா. அதனால் தான்  இவரை பழிவாங்க வேண்டும் என்ற  காரணத்துக்காக அறநிலையத்துறையில் சில அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் தான் இவர் சம்மந்தப்பட்ட முக்கிய பைல்களை எடுத்து பொன்.மாணிக்கவேலுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
அறநிலையத்துறையில் சட்ட வழக்குகளைப் பார்க்கவே ஒரு இணை ஆணையர் இருக்கிறார். ஆனால் கவிதா  கைதுக்கு எந்தவிதத்திலும் துறை ரீதியாக நீதிமன்றத்தை நாட சிறு துரும்பைக்கூட அவர் அசைக்கவில்லை”.
விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குனர் மித்ரன்,  கவிதாவின் மகன். இரும்புத்திரை படம் மித்ரனின் 8 வருட உழைப்பு. ஆனால் கவிதா மீது பொறாமை கொண்ட சிலர், மோசடி செய்த பணத்தில் தான் இந்தப்படத்தை எடுத்ததாக வாய் கூசாமல் கூறி வருகிறார்கள். இரும்புத் திரை திரைப்படம் குறித்தும், லைக்கா நிறுவனத்தோடு இரும்புத் திரை தொடர்பாக விஷாலுக்கு ஏற்பட்ட உடன்பாடு குறித்தும் சவுக்கிலேயே கட்டுரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவிதாவின் மகள் தற்போது ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படித்து வருகிறார். அதற்காக கவிதா குடும்பம் 30 லட்ச ரூபாய் வங்கியில் கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள்.  இதற்கான ஆவணங்களை வங்கியில் இருந்து எளிதாக எடுக்க முடியும்.
ஆனால் இதையும் சிலை, லஞ்சப்பணத்தில் தான் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
காஞ்சிபுரம் சிலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது, நாளிதழ்களில் கவிதாவைப் பற்றி செய்திகள் வரத்துவங்கியது. அதற்காக தன்னிலை விளக்கம் ஒன்றை கமிஷனர் ஜெயாவுக்குக் கடிதமாகக் கொடுத்திருக்கிறார் கவிதா. அதில் காஞ்சிபுரம் சிலை விவகாரம் குறித்து சில தகவல்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால் கமிஷனரோ அந்தக் கடிதம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவர் மட்டும் சரியான சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் அறநிலையத்துறைக்கு எந்தவிதப் பிரச்சனையும் வந்திருக்காது.
கவிதா கைதானதும் அறநிலையத்துறையில் உள்ள பல அதிகாரிகள் கைதாவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் மிக முக்கியமானவர் மற்றொரு கூடுதல் ஆணையரான திருமகள். இவரோடு சேர்த்து இன்னும் சில அதிகாரிகளும் அதே வாரத்தில் கைதாகலாம் என்றிருந்த நிலையில் தான் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ.க்கு மாற்றி கொள்கை முடிவு எடுத்தது தமிழக அரசு. கொள்கை முடிவு எடுத்தாலும் பொன்.மாணிக்கவேலின் தலையீட்டை குறைக்கவே  மறுநாளே அரசாணைப் பிறப்பித்தது தமிழக அரசு.
இந்த அரசாணைக்கான கருத்துருக்கள் ஒரே நாளில், பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி, தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் அலுவலகங்களுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும், ஆளுனர் மாளிகைக்கும் சென்று, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், “ பொது வெளியில் பேசப்படுவது போல, பொன் மாணிக்கவேல், நேர்மையான அதிகாரியெல்லாம் கிடையாது.
அவர் ராமநாதபுரத்தில் டிஎஸ்பியாக இருந்தபோதுதான் அவருக்கு திருமணமானது.  அவர் திருமணத்துக்கு, ராமநாதபுரம் மற்றும் கீழக்கரையை சேர்ந்த பல கடத்தல்காரர்கள் வந்து பல விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர்.  அப்போதைய டிஜிபி, கடத்தல் காரர்கள் காவல்துறை அதிகாரியின் திருமணத்துக்கு வந்தது எதற்காக என்று இவரிடம் விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸே அனுப்பினார்.
இவர் செங்கல்பட்டில், உளவுத் துறை டிஎஸ்பியாக இருந்தபோது, ஒரு வீட்டில், ஆதாயத்துக்காக கொலை நடக்கிறது (murder for gain).  அந்த இடத்துக்கு சென்ற சம்பந்தப்பட்ட ஆய்வாளர், உளவுத் துறை டிஎஸ்பியான பொன் மாணிக்கவேலிடம் இந்த தகவலை சொல்கிறார்.  உளவுத் துறை டிஎஸ்பி, இது குறித்து, மேலிடத்துக்கு தகவல் சொல்லி, அறிக்கை அனுப்ப வேண்டும்.  அதுதான் உளவுத் துறை அதிகாரியின் பணி.  ஆனால் பொன் மாணிக்கவேல், சம்பவ இடத்துக்கு நேராக சென்று, அந்த வீட்டில் இருந்த பீரோவை திறந்து, 80 பவுன் நகைகளை எடுத்து, தனது இரு பேன்ட் பாக்கெட்டுகளிலும் போட்டுக் கொண்டார்.

பின்னாளில், ஜாங்கிட், சென்னை புறநகர் ஆணையரானபோது, இந்த விவகாரத்தை தோண்டி எடுத்தார்.   விரிவான அறிக்கை தயார் செய்து, உள்துறைக்கு அனுப்பினார்.  அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.  பின்னர், உயர் அதிகாரிகள் மீதான விசாரணை, காலாவதியாவது போல, இதுவும் காலாவதியானது” என்றார்.
ஓய்வு பெற்ற ஒரு மூத்த காவல் துறை அதிகாரி இது குறித்து பேசுகையில், “உயர்நீதிமன்றம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன் மாணிக்கவேலை ஏன் மாற்றினீர்கள் என்றுதான் கேள்வி எழுப்பியதே தவிர, பொன் மாணிக்கவேல், எந்த அதிகாரிக்கும் கட்டுப்பட்டவர் அல்ல என்று கூறவே இல்லை.  ஐஜி அந்தஸ்தில் இருக்கும் பொன் மாணிக்கவேல், தனது உயர் அதிகாரிகளான, கூடுதல் டிஜிபி மற்றும், டிஜிபிக்கு வழக்கு விசாரணை குறித்த விபரங்களை அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஒரு ஆண்டாக, பொன் மாணிக்கவேல், இவர்தான் தமிழக டிஜிபி போல நடந்து கொள்கிறார்.  எந்த உயர் அதிகாரியையும் மதிப்பதில்லை.  எந்த அறிக்கை கேட்டாலும் அனுப்புவதில்லை.  வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து எந்த உயர் அதிகாரியிடமும் சொல்வதில்லை.  எந்த அதிகாரி எதை கேட்டாலும், நான் கோர்ட்டுல பதில் சொல்லிக்கிறேன். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
இத்தகைய ஒழுங்கின்மையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனும் புரிந்து கொள்ளாமல், இத்தகைய ஒழுங்கின்மையை ஊக்குவிப்பது வேதனையானது.    காவல்துறை என்பது, ஒரு யூனிஃபார்ம்ட் சர்வீஸ்.   ஒழுக்கமும், உத்தரவுக்கு கீழ்படிதலும், இதன் அடிப்படை.
இத்தகைய ஒழுங்கின்மையை வளர்த்து விட்டால், நாளை, கான்ஸ்டபிள் சப் இன்ஸ்பெக்டர் சொல்வதை கேட்க மாட்டான்.  சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் சொல்வதை கேட்க மாட்டான்.  இன்ஸ்பெக்டர் டிஎஸ்பி சொல்வதை கேட்க மாட்டான்.  இதற்கு எது எல்லை.
இப்படி வாய் கிழிய பேசும் பொன் மாணிக்கவேல், இது வரை, கடந்த ஒரு ஆண்டாக, ஒரே ஒரு வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளாரா ?  ஒரு நல்ல காவல்துறை அதிகாரிக்கு அழகு, ஒருவரை கைது செய்வதல்ல.   வழக்கின் புலனாய்வை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதுதான் ஒரு நல்ல அதிகாரிக்கு அழகு.  ஒருவரை கைது செய்வதை, யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.  ஆனால், புலனாய்வை முடித்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதுதான், திறமை.   அந்த திறமை துளியும் அற்றவர் பொன் மாணிக்கவேல். வெறும் படோடாபம், விளம்பரம், பகட்டு மட்டுமே பொன் மாணிக்கவேல்.
பொன் மாணிக்கவேல், சீருடையில் உள்ள ஒரு கிரிமினல்” என்று கோபத்தோடு சொன்னார் அந்த அதிகாரி.
இந்த விவகாரத்தில், அறநிலையத் துறை மற்றும் சிலை கடத்தல் பிரிவு ஆகிய இருவருமே, மாற்றி மாற்றி குற்றம் சுமத்துகிறார்கள்.  உண்மை இதன் நடுவே இருக்கிறது.    ஒரு நாள் அந்த உண்மை வெளி வரும் என்று நம்புவோம்.

1 கருத்து:

Unknown சொன்னது…

இது ஒரு தரப்பாக கவிதா, திருமகள் போன்றோருக்காக எழுதப்பட்டது.not fair. இவர்கள் மேல் ஏற்படுத்தபடும் charge என்ன என்பதைப் பார்த்துவிட்டு போலீஸ் நடவடிக்கைபடி கோர்ட்டில் ஆஜராகி குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கட்டும். பிறர் விஷயங்களில் இவர்கள் இப்படித்தான் செயல்பட்டார்கள். இவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா?