புதன், 8 ஆகஸ்ட், 2018

மெரினாவில் தடை கோரும் வழக்குகள் தள்ளுபடி ,, திமுக விவாதம் தொடங்கியது

தினத்தந்தி  : இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மதியம் திமுக தலைவர்கள் முதல்-அமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். பார்ப்போம் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார், முழுமையான பதிலை அவர் இன்னும் தரவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.

அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டிற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் வருகை தந்தனர். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தினர். திமுக தரப்பில் சண்முக சுந்தரம், வில்சன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். தற்போது விசாரணை நிறைவு பெற்றது. இதில் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்ய முடியுமா? - நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கில் காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை அரசு பதில் மனு தாக்கல் செய்தவுடன் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: