வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

மெரினா விவகாரத்தில் காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் வழக்கில் காட்டியிருக்க வேண்டும்: கனிமொழி ட்வீட்

tamil.thehindu.com : மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என முனைப்புடன் வாதாடிய தமிழக அரசு, வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து முனைப்புடன் வாதாடியிருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தோல்வி ஏற்பட்டிருக்காது என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மே 22 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. அம்மனுவில், ஆலை முடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஏ.கே.கோயல் மற்றும் அதன் உறுப்பினர்கள் நீதிபதி எஸ்.பி.வாங்க்டி, ஜாவத் ரஹீம் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலையில் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள குறைந்தபட்சம் 30 நாட்களாவது ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என ஆலை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலையை திறந்தால் முக்கியமான கோப்புகளை அழித்து விடக்கூடும் என தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் தலைமையிலான பசுமை தீர்ப்பாயம், “ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாக பிரிவு அலுவலகம் செயல்படலாம். அதேசமயம், எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது. இதனை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் மாசு குறித்த விவரங்களை 10 நாட்களுக்குள் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்காக திறக்கப்பட உள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, “வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மே 22 ஆம் தேதி அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30-க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால், சிஎஸ்.வைத்தியநாதன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால், இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி,வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக்கொண்டிருக்கிறார்” என கனிமொழி பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: