வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞரும் கோபாலும் .. நெஞ்சம் கலங்குகிறது! – நக்கீரன்

nakkheerangopal-kalaingarஇந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தனிப்பெருந்தலைவர் கலைஞர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களாலும் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் அவர். அவருக்காக எட்டுத்திசையும் மனம்கலங்கி நிற்கிறது. நாட்டின் குடியரசுத் தலைவரே, அவர் சிகிச்சைபெறும் மருத்துவமனைக்கு வந்து அக்கறையோடு விசாரித்துச் சென்றதை நாடே உற்றுநோக்குகிறது. இது கலைஞரின் உயரத்திற்கான உயரிய அங்கீகாரம் ஆகும். 5 முறை முதல்வராக இருந்தவர் கலைஞர். பலமுறை எதிர்க்கட்சித் தலைவராக மக்களுக்கான குரலை சட்டமன்றத்தில் எதிரொலித்தவர். கலைஞருக்கு நிகரான ஒரு தலைவரை, வரலாற்றின் எந்தத் திசையில் தேடினாலும் கண்டறிவது கடினம்.
நக்கீரனுக்கும் கலைஞருக்குமான உறவு, மிக நீண்டநெடிய, நெகிழ்வான உறவாகும்.
1991 மே 21-ல் ராஜீவ்காந்தி, படுகொலையான போது நாடே பதற்றத்தில் மூழ்கியிருந்தது. அப்போது எங்கு பார்த்தாலும் கலவரம் வெடித்தது. இதை சாக்காக்கி “நக்கீரன்’ அலுவலகம் கடுமையாகத் தாக்கப்பட்டது. அதேபோல் ஒரு கலவரக் கும்பல், “முரசொலி’ அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கியதோடு, தீவைத்தும் எரித்தது. அப்போது கலைஞரைப் பார்க்க ஓடினோம். கலைஞர், வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார்.
தன் உயிருக்கு நிகரான முரசொலி அலுவலகத்தில் வைக்கப்பட்ட தீயில், அங்கே பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பழைய முரசொலி இதழ்கள் எரிந்து சாம்பலானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் வீட்டைக் கொளுத்தியிருந்தால் கூட கலைஞர் அவ்வளவு வேதனைப்பட்டிருக்க மாட்டார். ஒரு பத்திரிகையாளராக அவர்பட்ட வேதனையை உணர்ந்தபோதுதான், அவர் மீதான மதிப்பு என்னுள் பன்மடங்கு அதிகரித்தது.

1991-ல் ஜெ.’ஆட்சிபீடம் ஏறியதும், கலைஞர் ஆட்சியில் உள்துறைச் செயலாளராக இருந்த நாகராஜன் மீதுதான் முதன்முதலில் அவரது அடக்குமுறை பாய்ந்தது. அவரைக் கைது செய்தார் ஜெ. அடுத்து ஜெ.வின் பழிவாங்கும் வெறி நம்மீது பாய்ந்தது. எங்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர் காக்கிகள். அப்போது கலைஞர்தான், இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். வெளியே வந்ததும் ஜெ.வை பெண் ஹிட்லராக சித்தரித்து நக்கீரனில் அட்டைப் படம் வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து க.சுப்பு அவர்கள், “இங்கேயும் ஒரு ஹிட்லர்’ என்ற பரபரப்புத் தொடரை நக்கீரனில் எழுதினார். இதைக்கண்ட ஜெ.,’சட்டமன்றத்திலேயே நக்கீரனைத் தாக்கிப் பேசினார். நக்கீரனுக்கு எதிரான பேயாட்டம் ஆரம்பித்தது. ஊர் ஊராய் நக்கீரனை ஜெ.வின் அடிப்பொடிகள் எரித்தனர். நக்கீரனை விற்கக் கூடாது என்று முகவர்கள் மிரட்டப்பட்டனர். இதையும் மீறி நக்கீரனை விற்க முயன்றவர்கள் தாக்கப்பட்டனர். நக்கீரனை அச்சடித்துத் தரக்கூடாது என்று அச்சகங்கள், காவல்துறையினர் மூலம் கடுமையாக மிரட்டப்பட்டனர். இதன்பிறகும் நக்கீரனை நாம் வெளியிட்டோம்.
​​nakkheerangopal-kalaingar
இதனால் என்னைக் கைதுசெய்ய காவல்துறை நக்கீரன் அலுவலகத்தை முற்றுகையிட்டது. 150-க்கும் மேற்பட்ட காக்கிகள் குவிக்கப் பட்டிருந்தனர். நான் பால்காரர் வேசத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றேன். என்னைப் பிடிக்கமுடியாத காக்கிகள், நக்கீரனை அச்சடித்துக் கொடுத்த பிரிண்ட்டரான 75 வயது முதியர் அய்யா கணேசனை, வீடுபுகுந்து அராஜகமாகக் கைதுசெய்தனர். 10 நாள் சிறையில் வைத்து அவரை சித்திரவதை செய்தனர். அரை உயிராய் வெளியே வந்த அய்யா கணேசன் வெளியில் வந்ததும் மரணமடைந்தார்.
அவரை சாகடித்த ஜெ.’அரசைக் கண்டித்து, World University Study Centre அரங்கில் மாபெரும் கண்டனக் கூட்டம் கலைஞர் தலைமையில் நடந்தது. சங்கரய்யா, பா.மாணிக்கம் போன்ற இடதுசாரித் தலைவர்களும் “இந்து’ராம் போன்ற பத்திரிகையாளர்களும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், நக்கீரனுக்காக வலிமையாகக் குரல்கொடுத்தார் கலைஞர். அந்தக் குரல்தான் இன்று முடங்கிவிட்டது.
1993-ல் எம்.ஜி.ஆருக்கு எதிராக ஜெ.’செய்த யாகம் குறித்த ஒரு கட்டுரையை நக்கீரன் பரபரப்பாக வெளியிட்டது. இதற்காகவும் ஜெ.வின் அரசு, நக்கீரனுக்கு எதிராக ஒரு அதிகார வெறியாட்டத்தை நடத்தியது. நக்கீரன் இதழ்கள் அங்கங்கே கொளுத்தப்பட்டன. முகவர்களும் அச்சகர்களும் வழக்கம்போல் மிரட்டப்பட்டனர். தமிழகம் முழுக்க 105 வழக்குகள் நக்கீரன் மீது ஒரே நேரத்தில் போடப்பட்டன. கலைஞர் தந்த பாதுகாப்போடு “முரசொலி’ அச்சகத்தில் நக்கீரனை அடித்து ஒரு இதழ்கூட தடையில்லாமல் வெளியிட்டோம்.


அப்போதும் சளைக்காத நக்கீரன், ஜெ.’அரசுக்கு எதிரான தகவல்களைத் திரட்டி, அக்யூஸ்ட் நம்பர்-1, அக்யூஸ்ட் நம்பர்-2 என்று 4 இதழ்களை தொடர்ந்து விறுவிறுப்பாக வெளி யிட்டது. நக்கீரனின் வேகத்தைப் பார்த்த கலைஞர் என்னை அழைத்தார். சென்றேன். என்னிடம் அப்போது அவர், மிகுந்த அக்கறையோடு என்ன சொன்னார் தெரியுமா?
“எல்லாத்தையும் பார்த்தேன். அவங்க கைல அதிகாரம் இருக்கு. அதனால் அவங்க அத்துமீறிப் போகலாம். எனவே நாம சாதுர்யமாத்தான் இதையெல்லாம் அம்பலப்படுத்தணும்’’ என்றார். அவர் குரலில் தெரிந்த அக்கறையில் ஒரு தந்தையின் பேரன்பை உணர்ந்து நெகிழ்ந்தேன்.
1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மே 13-ல் கலைஞர் முதல்வரானார். அப்போது வீரப்பன் சரணடைய விரும்புவதாக அவன் தரப்பில் இருந்து ஒரு தகவல் நமக்கு வந்தது. உடனே கலைஞரை சந்தித்து விவரம் சொன்னேன். கலைஞரோ, மிகுந்த ஆர்வம் காட்டி, சட்டரீதியாக என்ன வேண்டுமானாலும் நாம் செய்யலாம். முயற்சி எடுங்கள்’ என்று வாழ்த்தினார். வீரப்பனை சந்தித்தபோது, அவன் தனது 10 கோரிக்கைகளைப் பேசி, கேசட்டாகக் கொடுத்தான். அதை கலைஞரை சந்தித்துக் கொடுத்தேன். அப்போது கர்நாடகாவில் தேவேகவுடா முதல்வராக இருந்தார். அவரிடமும் ஒரு கேசட் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விவாதித்து முடிவெடுக்க 2 மாநிலங்களின் சார்பிலும் 4 கூட்டங்கள் ஓட்டல்களில் நடந்தன. இதில் தமிழகத்தின் சார்பில் அப்போதைய காவல்துறை டி.ஜி.பி. அலெக் சாண்டர், குமாரசாமி, கர்நாடகாவைச் சேர்ந்த அதிகாரி கணபதி ஆகியோர் கலந்துகொண்டனர். கோரிக்கை வைத்த வீரப்பன் அவற்றை நிறைவேற்ற ஒருமாத காலமே கெடுவிதித்திருந்தான். ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலேயே ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டன. பொறுமை இழந்த வீரப்பன் கர்நாடக வனத்துறை அதிகாரிகள் அடங்கிய 9 பேர் கொண்ட டீமையே கடத்திச் சென்றுவிட்டான்.

nakkheerangopal-kalaingar
அவர்கள் கடத்தப்பட்ட செய்தி வந்த அன்று மாலை, நம் நக்கீரன் அலுவலகத்தில், பத்திரிகையாளர்கள் பெருமளவில் குவிந்தார்கள். அவர்கள் சொல்லித்தான், அந்த 9 பேரையும் மீட்க, நான் இரு மாநில அரசுகளின் சார்பில் தூதராக அறிவிக்கப்பட்டிருக்கும் தகவலே எனக்குத் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகம் சென்றோம். அங்கே இருந்த அப்போதைய உள்துறைச் செயலாளர் பூர்ணலிங்கம், “நீங்கள் காட்டுக்குப் புறப்படுங்கள்’’என்று என்னை நிராயுதபாணியாக அனுப்பப் பார்த்தார். இரு மாநிலத் தூதராக நான் நியமிக்கப்பட்டதற்கான அரசு உத்தரவுகள் கொடுக்கப்பட்டன. முதல்வரான கலைஞரிடம் விடைபெறப் போகும்போது, காட்டில் மாறுவேடத்தில் போலீசார் உலவுவதை ஆதாரப் படங்களோடு காட்டி, “எனக்கு அங்கே என்ன பாதுகாப்பு?’ என்றேன். கலைஞரோ, உள்துறை செயலரை அழைத்து ‘நக்கீரன் கோபாலும் அவர் டீமும் காட்டுக்குள் போகும்போது அவர்களுக்கு எந்தப் பங்கமும் ஏற்பட்டுவிடாமல் நாம்தான் பாதுகாக்கணும். நம்மை நம்பித்தான் போகிறார்’’ என்று அழுத்தமான குரலில் சொன்னதோடு, காட்டுக்குள் இருந்த போலீஸ் டீமை, ஒரே உத்தரவில் திரும்பப் பெறச்செய்தார். மேலும் காட்டுப் பகுதியில் இருந்த எஸ்.டி.எஃப். முகாம்களையும் இழுத்து மூடும்படி உத்தர விட்டார். கலைஞரின் அக்கறையான அந்த உத்தரவுதான் காட்டுக்குள், என்னையும் என்னோடு வந்த தம்பிகளின் உயிரையும் காப்பாற்றியது. இதை இந்த நேரத்தில் நெகிழ்வோடு நினைவுகூர்கிறேன்.
முதலில் 9 பேரில் ஒருவரை விடுவித்த வீரப்பன், மிச்சம் இருந்த 8 பேரோடு சரணடைய முடிவெடுத்தான். இதற்காக அவனுக்காக மதுராந்தகம் அருகே தனிச் சிறை அமைக்கவும் கலைஞர் அரசு திட்டமிட்டு தயார் நிலையில் வைத்து இருந்தது. அந்த 8 பேரோடு, சரணடைய இருந்த வீரப்பனையும் வெளியே அழைத்துவரலாம் என்ற நம்பிக்கையோடு நாங்கள் காட்டுக்குப் புறப்படும் நேரத்தில்…
“என்னை கொசுக்கடியில் சிறையில் அடைத்த இந்த அரசு, வீரப்பனை மட்டும் தனிச் சிறையில் அடைக்கப்போகிறதா?’’என்று கேட்டு ஜெ.’ஒரு மோசமான அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கை பற்றிக் கேள்விப்பட்ட வீரப்பன், சரணடையும் முடிவைக் கைவிட்டான். இதனால் அந்த 8 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.


2000-ல் வீரப்பன், கன்னட சூப்பர்ஸ்டாரான ராஜ்குமாரை அதிரடியாகக் கடத்தினான். கர்நாடகம் முழுக்க கலவரம் தொடங்கியது. கன்னடர்கள், கர்நாடகத்தில் வாழும் ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்றுவிடுவார்கள் என்ற தகவல் அப்போது வந்து திகைக்க வைத்தது. இதைச் சுட்டிக்காட்டி, “ராஜ்குமாரை மீட்க நீங்கதான் காட்டுக்குப் போகவேண்டும் கோபால்’ என்றார் கலைஞர். அதனால்தான் நான் மீண்டும் வனம் சென்றேன்.
ஒருநாள் நள்ளிரவில் அவரைத் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே “உங்க வீட்டுக்கு பேசினீங்களா?’ என்று கேட்டார். “அடுத்துப் பேசுவேன்’ என்றேன். கலைஞரோ, “முதலில் உங்க வீட்டுக்குப் பேசிவிட்டு, பிறகு என்னிடம் பேசுங்கள்’ என்று சொல்லிவிட்டார். இதன்படி என் வீட்டுக்குப் பேசிவிட்டுதான் கலைஞரிடம் பேசினேன். ஏன் இப்படி என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது, ஏதோ ஒரு பத்திரிகையில் வீரப்பன் என்னையும் பிடித்து வைத்துக்கொண்டான் என்ற செய்தி வெளியானதாம். இதைப் படித்த கலைஞர் பதறிப் போனதுடன், என் குடும்பத்தினரும் கவலைப்படலாம் என்றுதான் என்னை அவர்களோடு பேசச் செய்திருக்கிறார். இதோடு நிற்காமல், சின்னகுத்தூசி அவர்கள் மூலம் தினமும் என் வீட்டினருடன் பேசச்செய்து ஆறுதல் சொல்லவும் செய்திருக்கிறார். இப்படியொரு பொறுப்பான தலைவரை, முதல்வரை எங்கேனும் பார்க்க முடியுமா?
2001-ல் இரக்கமற்ற ஜெ.வின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கலைஞரின் நள்ளிரவுக் கைதை யாராலும் மறக்கமுடியாது. கலைஞரின் வயதைக் கூடப் பொருட்படுத்தாமல் அவரைத் தரதரவென மாடிப்படிகளில் காவல் துறை அதிகாரிகள் முரட்டுத்தனமாக இழுத்துச்சென்ற காட்சியை இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது. இந்தக் கைதைக் கண்டித்துப் பேச, அப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் “சன் டி.வி.’ அழைத்தது. ஒரு சிலரைத் தவிர எல்லோரும் பயந்தார்கள். நான் துணிந்து சென்றேன். அப்போது சிட்டி கமிஷனர் முத்துக்கருப்பன், தலைமையிலான போலீஸ் டீம் சன் டி.வி. அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், நான் பேசினேன். கலைஞர் ஆட்சியில் ஜெ; கைது செய்யப்பட்டபோது கடைப்பிடிக்கப்பட்ட நாகரிகத்தையும், இப்போது கலைஞர் கைதில் நிகழ்த்தப்பட்ட அராஜகத்தையும் பற்றி 5 நிமிடம் பேசினேன். சிறையில் இருந்து வெளியே வந்த கலைஞர் என்னை அழைத்தார். “உங்க பேச்சைக் கேட்டேன். அழுத்தமா அழகா பேசியிருந்தீங்க. சிறையில் இருக்கும்போதும் உங்க பேச்சைக் கேட்டவங்க சொன்னாங்க’’ என்று நெகிழ்ச்சியோடு பாராட்டினார்.




2001-ல் ஜெ.வின் ஆட்சியில் பொடா கொண்டுவரப்பட்டபோது, அதை ஜனநாயக வாதியான கலைஞர் எதிர்த்தார். ஜெ.’ வரவேற்றார். பொடாவில் இங்கே 42 பேரைக் கைது செய்தார்கள். நான்தான் கடைசியாகப் பொடாவில் கைதான 42-ஆவது நபர். அதேபோல், பொடாவில் இருந்து முதன்முதலில் வெளியே வந்ததும் நான்தான். இதற்கு கலைஞரும் நக்கீரன் குடும்பமும் நடத்திய சட்டப் போராட்டம்தான் காரணம்.
பொடாவில் என்னை கைது செய்ததிலிருந்து கடுமையான சித்ரவதைக்கு ஆளானேன். 6 நாள் போலீஸ் கஸ்டடி என்ற பெயரில் என்னை அரை நிர்வாணமாக்கி ஜட்டியுடன் சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள மிகவும் மோசமான அசிங்கமான நினைத்தாலே குமட்டுகிற ஒரு சிறையில் வைத்தனர். அப்பொழுது அவர்கள் கேட்டது ஒன்றே ஒன்று. “”இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் இதிலொரு கையெழுத்திடுங்கள்” என்றார்கள். அந்தக் கையெழுத்து எதற்காகவெனில் கலைஞர், கர்நாடக முதலமைச்சர் கிருஷ்ணா, ரஜினி மூவரையும் என் வாக்குமூலத்தின் மூலமாக அவர்களையும் பொடாவில் கைதுசெய்யத்தான் அந்தக் கையெழுத்து. “”நான் இந்தக் கொடுஞச் சிறையில் செத்தாலும் சாவேனே தவிர இதில் கையெழுத்து போடமாட்டேன்” என்றேன். இந்தச் செய்தியை பொடா நீதிமன்றத்திலும் உரக்கச் சொன்னேன். அது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானது.
என் மாமனார் ஆர்.எஸ்.பாண்டியன் அவர்கள், ஜெ.வின் டார்ச்சரால் அந்தக் கால கட்டத்தில் தற்கொலை செய்துகொண்டார். அப்போது கலைஞர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதோடு ‘பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் குழுவை’ உருவாக்கச் சொல்லி, அனைத் துக் கட்சித் தலைவர் களையும் ஒன்று கூட்டி சென்னை -காமராஜர் அரங்கில் மாபெரும் கண்டனக் கூட்டத்தை நடத்தி, என் பொடா கைதை உலகமே அறியும் வகையில் கண்டித்தவர் கலைஞர்.
என் கைதைக் கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பொறுப்பை அப்போது டி.ஆர்.பாலுவிடம் ஒப்படைத்தார் கலைஞர். அதற்கு ஆ.ராசா ஒத்துழைப்பாக இருந்தார். இதைத் தொடர்ந்து 136 எம்.பி.க்கள் என் கைதைக் கண்டித்துக் கையெழுத்திட்டனர். இந்த மாயத்தை எல்லாம் செய்தவர் கலைஞர். நான் கைதான துயரைத் தாங்க முடியாத என் தாயார், நோய்வாய்ப்பட்டு மறைந்தபோது, கலைஞர்தான் முதல் ஆளாக என் வீட்டிற்கு வந்தார். அப்போது தி.மு.க.வின் 27 எம்.பி.க்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். இப்படியொரு மரியாதையை என் அம்மாவிற்குக் கொடுத்தவர் தாயன்புமிக்க கலைஞர். 2012-ல் ஜெ.வின் உணவுப் பழக்கம் பற்றி நக்கீரனில் ஒரு கட்டுரை வந்தபோது, நக்கீரன் அலுவலகம் போலீஸ் பாதுகாப்போடு கடுமையாகத் தொடர் தாக்குதலுக்கு ஆளானது.
அப்போது கலைஞர் என் லைனில் வந்து, “நீங்க அங்க இருக்கவேணாம், முதல்ல கிளம்புங்க கோபால்’’என்றார். அடுத்த கொஞ்சநேரத்தில் கனிமொழி லைனில் வந்து, “உங்களை தலைவர், அங்கிருந்து கிளம்பச் சொன்னாங்க’ என்றார். எனினும் தாக்குதலை பார்த்தபடியே திகைத்துப் போய் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன். இரவு 7 மணிக்கு கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன், “என்ன நீங்க? தலைவர் சொல்லியும் அங்கிருந்து கிளம்பலையா? இதோ தலைவரே பேசுறார்’ என்று, கலைஞரிடம் லைனை கொடுத்தார். கலைஞரோ, “கிளம்பச் சொன்னேனே? நீங்க இன்னும் கிளம்பலையா?’’என்றார் கண்டிப்பான குரலில். அவர் குரலில் இருந்த தீவிரத்தைப் பார்த்த பின்னரே அங்கிருந்து கிளம்பினேன். பின்னர்தான் தெரிந்தது, என்னோடு சேர்த்து 5 பேரை எங்கள் அலுவலகத்திலேயே கொல்லத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்று. இது தெரிந்த தால்தான், கலைஞர் அங்கிருந்து என்னை நகர்த்தத் துடித்திருக்கிறார். இப்படி அன்று என்னைக் காப்பாற்றப் படாதபாடுபட்ட கலைஞர்தான் இப்போது அசையாமல் படுத்திருக்கிறார்.
நக்கீரன், கலைஞரையும் எத்தனையோ முறை விமர்சனம் செய்திருக்கிறது. அதில் ஏதேனும் தவறிருந்தால், கலைஞரே தொடர்புகொண்டு தெரிவிப்பார்… விளக்கமளிப்பார். நக்கீரனில் எழுதிய கட்டுரைகளையும் செய்திகளையும் எத்தனையோ முறை “முரசொலி’யில் பாராட்டி எழுதியிருக்கிறார். எந்த நிலையிலும் அவர் நக்கீரனை விட்டு விலகி நின்றதில்லை. பாராமுகமும் காட்டியதில்லை.
கலைஞர், என் மீது கொண்ட பேரன்பின் காரணமாக, 2010-ல் தமிழக அரசின் ’சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருதை’’எனக்கு வழங்கினார். அந்த விழாவில் பேசிய கலைஞர் “”தந்தை பெரியார் விருதை என்னுடைய நண்பர் நக்கீரன்கோபால் இன்றைக்கு பெற்றிருக்கின்றார். நக்கீரர் என்றாலே கண்டிப்பானவர். சிவனுக்கே பயப்படாதவர். பரமசிவனையே எதிர்த்தவர். அவரோடு எதிர்த்து வாதாடியவர். எனவே என்னதான் நான் முதலமைச்சராக இருந்தாலும், இங்கே அவர் என்னை பாராட்டினாலும், என்னை எதிர்த்தும் கொடி தூக்கக்கூடியவர் நக்கீரன் கோபால். அவர் தூக்கக்கூடிய கொடி, நியாயத்திற்காக தூக்கப் படுகின்ற கொடி என்றால் அந்தக் கொடிக்கு தலை தாழக்கூடியவன் நான் என்பதை அவர் அறிவார். அப்படிப்பட்ட நக்கீரன் கோபால் படாத சிரமங்களையெல்லாம் பட்டிருக்கிறார். எழுத்துரிமைக்காக போராடி, மனித உரிமைக்காக போராடி, அவரை அந்த போர்க்களத்திலே சிக்க வைத்து, அவருக்கு கொடுக்க முடியாத துன்பங்களையெல்லாம் கொடுத்து கொடுமைகளையெல்லாம் இழைத்து, அந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு நம்முடைய தமிழ் சமுதாயத்திற்காக, எழுத்துரிமை போராட்டத்திலே எதிர்நின்று வென்று, இன்று நம்மிடையே நம்முடைய வாழ்த்துக்களுக்கும், புகழாரங்களுக்கும் உரியவராக வீற்றிருக்கிறார் நக்கீரன் கோபால்” என்று, நக்கீரனின் குணத்தையும் போராட்டத்தையும் உணர்ந்தே வாழ்த்தினார்.
இத்தகைய ஒரு தலைவரை எப்பிறப்பில் காண்போம் இனி என்ற ஏக்கம் இதயத்தைப் பிசைகிறது.
nakkeeran

கருத்துகள் இல்லை: