ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

ரேபரேலி: சோனியாவுக்கு பதில் பிரியங்கா?

மின்னம்பலம்: வரும் மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில்
காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்திக்குப் பதிலாக பிரியங்கா வதேரா வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். முன்பு போன்று அரசியலில் தீவிரமாகச் செயல்படாத சோனியா காந்தி நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் சோனியா தற்போது போட்டியிட்டு வரும் ரேபரேலி தொகுதியில் அவருக்குப் பதிலாக வரும் மக்களவைத் தேர்தலில் அவருடைய மகள் பிரியங்கா வதோராவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் தெரிகிறது.
அதுபோன்று பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. எனினும் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைப்பதில்லை என்றும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க இறுதியாக அழைப்பு விடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த தேர்தல்களில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்காக பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்றும், அவரை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் பலமாக எழுந்தன. ஆனால், அந்தத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடாத நிலையில், தற்போது சோனியாவின் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: