சனி, 11 ஆகஸ்ட், 2018

`பராசக்தி` ஒரு சிந்தனையாளரின் சினிமாவா.. அகில இந்திய அளவில் பெரும் மரியாதையைப் பெற்றுத்தந்தது.

சிறப்புக் கட்டுரை: திராவிடப் போராளிமின்னம்பலம் :சிறப்புக் கட்டுரை: திராவிடப் போராளி அம்ஷன் குமார்
படம் ஆரம்பித்துவிட்டது. சற்றே கரகரப்பான ஒரு வர்ணனைக் குரல் கடற்காட்சிகள் மீது ஒலிக்கிறது. அக்காட்சிகள் முடிவுற்று அதன் தொடர்ச்சியாக இப்போது அக்குரலுக்குரியவர் புத்தகங்கள் நிரம்பிய அறையில் தோன்றுகிறார். உரக்க வாசித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தினை மூடிவிட்ட பின் தான் அணிந்துகொண்டிருந்த கண்ணாடியை லாவகத்துடன் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்து மேஜை முன் வந்து நின்றுகொள்கிறார். தன் தோள் மீது கிடக்கும் சால்வையைத் எடுத்து தன் மார்பின் குறுக்காகச் சாத்துகிறார். அலங்காரமான வார்த்தைகளுடன் எழுதுகிற தமிழில் தமிழரின் பெருமையை தமிழ் இலக்கியத்தினூடாக அவர் மக்களைப் பார்த்து ஆற்றும் உரையை, தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் கட்டுண்ட மனோபாவத்துடன் ரசிக்கிறார்கள்.
படம் ஆரம்பித்தவுடன் நேரடியாகக் கதையை மட்டுமே பார்க்க பழக்கப்பட்டிருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு அவரைப் பார்த்துக்கொண்டும் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் இருந்தார்கள். அவர் சொல்லியிருந்த அனைத்தையும் அந்த படத்திலேயே கதையில் சொல்லியிருந்தார்கள். அவர்தான் அப்படத்தின் வசனகர்த்தா. இருந்தும்கூட அவரும் நேரடியாகத் தன் பங்கிற்கு அவற்றைக் கூறியிருந்தார். கிடைத்த சந்தர்ப்பம் எதையும் விடக் கூடாதல்லவா?

அவரது தோரணையும் பேச்சும் பலரையும் கவர்ந்ததைப் போலவே சிறு வயதினனான என்னையும் உடனே கவர்ந்தது. அவர் எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் ஒரே சமயத்தில் திரையில் தோன்றினார். அவர் திராவிடத் தலைவர்களில் ஒருவர், அரசியல்வாதி போன்றவற்றையெல்லாம் நான் பின்னரே அறிந்தவன் ஆனேன்.

இடைவிடாத பேச்சும் எழுத்தும்
கலைஞர் கருணாநிதி கூறியது கூறல் பற்றிக் கவலைப்பட்டதில்லை. அவற்றை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திய விதத்தில் அவற்றின் பொருத்தங்கள் உணரப்பட்டன. தன் நெடிய வாழ்க்கை முழுவதும் அவர் தமிழரின் தொன்மையான திராவிட வாழ்க்கையை இலக்கியத்தை முன்வைத்து இடைவிடாது பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார். அவரது முன்னேற்றமான திட்டங்கள், செயல்கள் ஆகியவற்றிற்கும் அவர் திராவிட வரலாற்றிலிருந்து உத்வேகம் பெற்றார். தாலி கட்டாத திருமணம், விதவைத் திருமணம், பெண்களின் கற்பு நெறி, ஜனநாயகப் பண்பு, தமிழர் தம் வீரம், தமிழ் இலக்கியம் தமிழ் மொழி ஆகியன பற்றிய பெருமிதம், ஆரிய வெறுப்பு எல்லாவற்றிகும் ஒரே மூலம்தான். அவற்றிற்கு இசைவாகப் பொதுவுடமைக் கருத்துகள் சேர்ந்துகொண்டன. பெரியார் பள்ளியில் பயின்றதால் நாத்திகம் அவரிடம் இரண்டறக் கலந்துவிட்டது. ஆனால், இலக்கியம், கலை ஆகியவற்றின் மீது பெரியார் கொண்டிருந்த வெறுப்பினைக் கலைஞரும் அறிஞர் அண்ணாவும் ஏனைய திமுக தோழர்களும் அவரை விமர்சிக்காமல் மறுத்துவிட்டிருந்தார்கள்.
சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர் மு.கருணாநிதி சிறு வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டார். பள்ளிப்படிப்பு பாதியிலேயே நின்றது. ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருந்தார். இருந்தும் அவர் ‘படிக்காதவர்’ என்று பொதுவாகக் கருதப்பட்டார். பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் எழுதிய பின்னரும் கலைஞருக்கு அப்படியொரு அடையாளம் இருந்தது. பட்டப்படிப்புகூடப் படித்திராத ஜெயலலிதா படித்தவர் என்று கூறப்பட்டார்.
திருக்குறளைப் பொதுவெளியில் பரவலாக அறிமுகப்படுத்தியதில் திமுகவினருக்கு முக்கிய பங்குண்டு. அந்த பங்கின் அதிகமான பாகம் கருணாநிதியைச் சென்றடையும். கன்யாகுமரியில் திருவள்ளுவருக்கு அவர் அமைத்த சிலை, வள்ளுவர் கோட்டத்தை நிர்மாணித்தது ஆகியவற்றையெல்லாம்விட, குறள்களைப் பேருந்துகளில் எழுதி எல்லோரையும் படிக்கவைத்த பெருமை அவரைத்தான் சாரும். அவரது குறளோவியம் எல்லோராலும் எல்லாக் காலத்திலும் விரும்பிப் படிக்கப்படும். வள்ளுவரை அய்யன் என்று அவர் விளித்ததை மட்டும் தமிழ்ச் சமூகம் ஏற்க மறுத்தது.
எல்லா நதிகளும் கடலை நோக்கி...
கதாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, மேடைப் பேச்சாளர், நாடகாசிரியர், இதழாளர் என்று பலவாறாயும் அறியப்பட்டவர். ஆனால் எந்தச் செயலை செய்தாலும் அதன் மூலம் தனது கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதையே முற்றாக விரும்பினார். நாடகம் என்கிற உருவம் பற்றியோ திரைப்படம் என்கிற உருவம் பற்றியோ அவர் கவலைப்பட்டது கிடையாது. அவரது புதினங்கள் இலக்கியமா இல்லையா என்பதுபற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டது கிடையாது. சமகால இலக்கியம்பற்றி அவர் பெரிதாகக் கருத்து தெரிவித்ததில்லை. மேடைப் பேச்சிற்கும் எழுத்துக்கும் பெருத்த வேறுபாடுகளை அவர் வரைந்து கொள்ளவில்லை. மொழிவன்மை நிரம்பப் பெற்றவராக இருந்தபடியால் அவரது கருத்துப் பிரச்சாரங்கள் அலுப்பூட்டியதில்லை.
அவரது பேச்சு, எழுத்து ஆகிய இரண்டும் மிகவும் தெளிவாக இருக்கும். எல்லாமே சிறு சிறு வாக்கியங்கள். பைந்தமிழ் பயின்றவராயினும் கடினமான சொற்களைப் பயன்படுத்த மாட்டார். புழக்கத்தில் இல்லாத சொற்களைக் கொண்ட சொல்லாக்கங்களை அவர் பிறப்பித்ததில்லை. அரூபமான சிந்தனைகளையும் அவர் எழுத்துகளில் காண முடியாது. ஓடிக்கொண்டே படிப்பவர்கள்கூட அவர் எழுதியதைப் புரிந்துகொள்வார்கள். வசனங்களில் இரட்டுற மொழிதல் இருக்கும். ஆனால் இருபொருள்படும் ஆபாசங்கள் அவற்றில் இருக்காது. ஓசை நயமிக்க அடுக்கு மொழி வாக்கிய நடை பலரையும் கட்டிப்போட்டது.
எளிமையும் நகையுணர்வும்
எல்லாச் சமயங்களிலும் அவரிடமிருந்து எளிமையும் நகையுணர்வும் வெளிப்படும். அவரது மேடைப்பேச்சு விரும்பப்பட்டதற்கு அவையெல்லாம் முக்கியக் காரணம். 1977இல் அவசரநிலை நீக்கப்பட்டவுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அவர் பங்கேற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் மறக்காமல் அவசர நிலை என்றால் என்ன, ஒரு நாட்டில் அதற்கான உத்தரவு எச்சமயத்தில் பிறப்பிக்கப்பட வேண்டும், அது எவ்வாறு இந்திராவால் மீறப்பட்டது என்பதைப் பாமரர்களும் புரிந்துகொள்ளும் விதமாக எடுத்துரைப்பார்.
அப்போது எம்.ஜி.ஆர் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டு சேர்ந்திருந்தார். சுவரொட்டிகளில் எம்ஜிஆர், இந்திரா ஆகியோரின் படங்கள் ஒன்றாக இடம் பெற்றன. கருணாநிதி, `ஒன்றும் அறியாத கிராமத்தான் அந்த சுவரொட்டியைப் பார்த்தால் ஏதோ எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் புதிய படத்தில் ஒன்றாக சேர்ந்து நடிக்கிறார்களோ என்று நினைத்துக்கொள்வான்’ என்று கூறி சிரிப்பலைகளை உருவாக்குவார்.
எழுத்தும் பேச்சும் அவருக்கு எப்போதும் கைகொடுத்தன. அவருக்கு எல்லாச் சிறப்புகளும் வர அவை காரணமாக இருந்தன. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு சில காலம் அவர் அநேகமாக மறக்கப்பட்டிருந்தார். ஆனால், தொண்டர்கள் மனதில் அவர் தொடர்ந்து இடம் பெற்றவண்ணம் இருந்ததற்கு அவர் எழுத்துகள்தான் முக்கியக் காரணம். அக்காலங்களில் அவர் முரசொலியில் எழுதிய கடிதங்கள் தொண்டர்களை வேறெப்போதையும்விட அதிகமாகக் கவர்ந்தன. அநேகமாக அவரது சிறந்த முரசொலி எழுத்துகள் அவை என்று கூறலாம்.
அவரது வசனத்தால் `பராசக்தி` ஒரு சிந்தனையாளரின் சினிமாவாக மாறியது. தமிழ் நாட்டில் மட்டுமின்றி `பராசக்தி` வடநாட்டிலும் பேசப்பட்டது. எஸ்.எஸ்.வாசனின் `சந்திரலேகா` படம் வந்தபோது தமிழ்நாட்டினரும் தம்மைப் போல, படத்தைப் பிரம்மாண்டமாக எடுக்க வல்லவர்கள் என்று வட இந்தியப் பட உலகினர் ஒப்புக்கொண்டனர். ஆனால், அதுவரை வெளிப்படுத்தியிராத தீவிரத்துடன் இந்து மதத்தையும் புராணங்களையும் விமர்சித்த குறைந்த பட்ஜெட் `பராசக்தி` படம் அவர்களை அதிரவைத்தது. அதெல்லாம் பெரும்பாலனவர்களுக்கான திரை ஊடகத்தில் சாத்தியம் என்று அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பராசக்தி, தமிழ் சினிமாவிற்கு அகில இந்திய அளவில் பெரும் மரியாதையைப் பெற்றுத்தந்தது.

பேசும் படமும் பேச்சுப் படமும்
பராசக்தி அளவிற்கு அவரது மற்ற படங்கள் அமையவில்லை என்றாலும் திராவிடக் கருத்துகள் அதே நெடியுடன் தொடர்ந்து அவரது பல படங்களில் வெளிப்பட்டன. கருணாநிதியின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளாதவர்களும் நீண்ட வசனங்களை ஒரு பாணியாகப் பின்பற்றத் துவங்கினர். சமூகப் படங்கள் மட்டுமின்றி பக்திப் படங்களிலும் மாயாஜாலக் காட்சிகளின் இடத்தை வசனங்கள் பிடித்தன.
பேசும் படத்தைப் பேச்சுப் படமாக்கினார் என்று அவர் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி கடுமையான விமர்சனம் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. மனோகரா ,ராஜாராணி போன்ற படங்கள் அவருக்கு அப்படியொரு `புகழைத்` தேடித் தந்தன. ஆனால் அவரது எல்லாப் படங்களும் முற்றான வசனப் படங்கள் அல்ல. பராசக்தி படத்திலும் அது நிகழவில்லை. அதில் பல காட்சிகளில் குறைவான வசனங்கள் இடம்பெற்றிருந்தன. அந்தப் புகழ் பெற்ற கோர்ட் சீனில்கூட நீண்ட வசனங்கள் குறைவுதான்.
திராவிட சினிமாவின் உச்சம் என்று கருதப்பட வேண்டிய மாடர்ன் தியேட்டர்ஸின் `மந்திரி குமாரி` படத்திற்கு அவர் எழுதிய வசனங்கள் மிகவும் அளவானவை. அதைப் பெருமளவு எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கியிருந்தார். திரைப்படத்தைக் காட்சி மொழியில் கொண்டுசெல்லும் கலையைப் பயின்றிராதவர்கள் அவரது வசனங்களில் தஞ்சமடைந்தார்கள் என்பதுதான் சரியான புரிதலாக இருக்கும். அவரது வசனங்களைச் சரியாகப் பேசுவது ஒரு நடிகனின் திறமைக்குச் சான்று என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதை நடிகர்கள் சவாலாக ஏற்றனர். ரசிகர்கள் அவற்றை விரும்பியதால் படவுலகினர் அப்படியே அவற்றை ஏற்றுப் படத்தில் பயன்படுத்தினர். ஆனால் சினிமா அழகியல்வாதிகள் சுமத்திய பழி கலைஞரை வந்து சேர்ந்தது. படத்தின் காட்சி மொழிக் குறைபாட்டிற்கு வசனகர்த்தாவைக் குற்றம் சொல்வது எவ்விதத்தில் நியாயமானது?
அரசியல்வாதியாக, ஆட்சியாளராக, அவர் உழைத்ததற்குச் சற்றும் குறைவில்லாது எழுத்தாளராகவும் உழைத்தார். குறிவைத்துக் காய்கள் நகர்த்திய ராஜதந்திரத்தில் அவர் வெற்றி தோல்விகள் கண்டிருக்கிறார். திராவிடம் என்கிற இலக்கை நோக்கிய அவரது எழுத்து சரியான இலக்கை அடைந்தது.
(கட்டுரையாளர்:
அம்ஷன் குமார்
எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். திரைப்படம், இலக்கியம் ஆகியவை குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார். சினிமா ரசனை, பேசும்பொற்சித்திரம் முதலான நூல்களின் ஆசிரியர். அவரைத் தொடர்புகொள்ள: amshankumar@gmail.com)

கருத்துகள் இல்லை: