சனி, 13 டிசம்பர், 2014

ராமநாதபுரத்தில் 3 இடங்களில் எண்ணெய் வளம்! ரஷிய விஞ்ஞானிகள் 30 பேர் நடத்திய ஆய்வில்......

ராமநாதபுரம், மண்டபம் கடல் பகுதியில் 3 இடங்களில் எண்ணெய் வளம் இருப்பது ரஷிய விஞ்ஞானிகள் 30 பேர் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இயற்கை எரிவாயு ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் முதல் மண்டபம் வரையிலும் உள்ள கடல் பகுதியில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் கடலுக்கு அடியில் இயற்கை எரிவாயு உள்ளதா என்று கடந்த 2010-வது வருடம் முதல் மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக மிதவைக் கப்பல் ஒன்று அதிநவீன கருவிகளுடன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டது. அதி நவீன கருவிகள் மூலமாக கடலுக்குள் கிணறுகள் போன்று துவாரமிட்டு கடலுக்குள் 2,600 அடி ஆழத்தில் ஆயில் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணி தற்போது முடிந்துள்ளது. ஆய்வில் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடலுக்கு அடியில் எண்ணெய் வளம் உள்ளதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக மத்திய அரசின் கனிமவளத்துறை கண்டுபிடித்தது.


பின்பு கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது கட்டமாக மீண்டும் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில் ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து வந்துள்ள தனியார் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான பிரம்மபுத்திரன், கோகினூர் என்ற பெயர் கொண்ட 2 பெரிய கப்பல்களும், சன்ரைசர்ஸ், ஜெயதுர்கா, கணேஷ் என்ற பெயர் கொண்ட 3 சிறிய கப்பல்களும் ஈடுபட்டன.

ரஷிய விஞ்ஞானிகள்

எண்ணெய் வளம் ஆய்வு குறித்து ஓ.என்.ஜி.சி.அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த ஆய்வு தேவிபட்டினம் கடல் பகுதியில் இருந்து தொடங்கப்பட்டு பனைக்குளம், ஆற்றங்கரை, மண்டபம் வரையிலும் உள்ள கடல் பகுதியில் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுப் பணியில் ரஷிய நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் யாக்ஸ்கோசர்ஜி, பீட்டர் ஜாட்கோ, சேவிக்ஸ் அலாஸ்கி உள்பட 30 விஞ்ஞானிகளும் இந்தியாவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கப்பல் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

கடந்த 5 மாதத்திற்கு மேலாக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் ரஷிய விஞ்ஞானிகள் கப்பல்கள் மூலம் அதி நவீன கருவியுடன் கடலுக்கு அடியில் நடத்தி வந்த ஆய்வில் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் 2 இடங்களிலும், தேவிப்பட்டினம் அருகே உள்ள ஒரு இடத்திலும் என 3 இடங்களில் கடலுக்கு அடியில் இயற்கை எண்ணெய் வளம் உள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வுப் பணிகள் முடிந்து விட்டதால் கப்பல்கள் சென்னைக்கு புறப்பட்டு செல்ல தயாராகி வருகின்றன.

3-வது கட்ட ஆய்வு

மண்டபம் கடல் பகுதியில் 3 இடங்களில் கடலுக்கு அடியில் எண்ணெய் வளம் உள்ளது தெரிய வந்திருப்பதால் மத்தியஅரசு அனுமதியுடன் எந்த வகையான எண்ணெய் வளம் என்பது குறித்து 3-வது கட்டமாக மீண்டும் ஒரு ஆய்வு விரைவில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: