வியாழன், 11 டிசம்பர், 2014

ஜெ.,வுக்கு ஏன் ஜாமின் தரப்பட்டது? மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

மிகவும் அவசரமான கதியில் , 19 ஆண்டுகளாக வழக்கை இழுத்து அடித்த குற்றவாளிகளுக்கு , ஒரே நாளில் உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது மிகவும் ஆச்சரியமானது. குற்றத்தின் தன்மை, அது சமுதாயத்தில் ஏற்படுத்த கூடிய கேடுகள் பற்றி ஆராயப்படவில்லை. இதன் பின்னணியில் அ.தி.மு.க , பி. ஜே .பி கள்ள உறவு அல்லது பணி ஓய்வுக்கு பின் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பெற போகும் உயர் பதவிகளும் காரணமாக இருக்கலாம். அரசியல் , பண பலம் உள்ள குற்றவாளிகளுக்கு என தனி சலுகைகள் வழங்கும் அரசு நிர்வாகமும் , நீதி மன்றங்களும் இந்தியாவில்தான் மிகவும் சாதரணமாகிவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமினை, மறுபரிசீலனை செய்திடக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும், சிறை தண்டனை வழங்கப்பட்டது. தங்களை, ஜாமினில் விடக்கோரி, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகா ஐகோர்ட் நிராகரித்து விட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டில், நான்கு பேருக்கும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர், கடந்த அக்டோபர் 17ம் தேதி, ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.


இந்நிலையில், ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும் வழங்கிய ஜாமினை, மறு பரிசீலனை செய்திட வேண்டுமென்று கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் ராஜாராமன் சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள, அந்த மறுசீராய்வு மனுவில், கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கில், தண்டனை பெற்று, சிறையில் இருந்த குற்றவாளிகளுக்கு, எதற்காக, ஜாமின் வழங்க வேண்டுமென்பதை, நியாயப்படுத்துவதற்கு, எந்தவிதமான விரிவான காரணங்களும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், கூறப்படவில்லை. மேலும், ஜாமின் வழங்கும்போது, எதிர்தரப்பான, தமிழக அரசின் லஞ்சஒழிப்பு துறைக்கு, முறைப்படி நோட்டீசும் அனுப்பப்படவில்லை. தவிர, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட அபராத தொகை குறித்தோ, அதை, எப்படி திருப்பி அளிக்கப்போகின்றனர் என்பது குறித்தும், எந்தவிதமான தகவலும், தெரிவிக்கப்படவில்லை. தவிர, ஜெயலலிதாவின் சார்பில் ஆஜரான பாலிநாரிமனின் மகன், ரோஹின்டன் நாரிமன் சுப்ரீம் கோர்ட்டில், இப்போதும் நீதிபதியாக பணிபுரிகிறார்.

ரத்தசம்பந்தம் உள்ள நபர் நீதிபதியாக உள்ள கோர்ட்டில், வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என்று, பார்கவுன்சில் சட்டம் உள்ளது. இதுகுறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, கட்டுரையே எழுதியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயலலிதாவுக்கு முன்னாள் முதல்வர் என்ற ரீதியில், ஜாமின் வழங்கப்பட்டிருக்கலாம் என்பதை, ஒப்புக் கொண்டாலுமே கூட, இளவரசிக்கும் சுதாகரனுக்கும் எந்த அடிப்படையில், ஜாமின் வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமினை, மறுபரிசீலனை செய்திட வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தங்களுக்கு ஜாமின் கோரி, ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் தொடர்ந்த, மேல் முறையீட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, வரும் 18ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டிற்கு வரும் நிலையில், அந்த ஜாமினையே, மறுபரிசீலனை செய்யக் கோரி, மனு தாக்கல் செய்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- நமது டில்லி நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: