சனி, 13 டிசம்பர், 2014

15 சதவீத மின் கட்டண உயர்வுகட்சி தலைவர்கள் கடும் கண்டனம் -வாபஸ் பெற வலியுறுத்தல்

சென்னை-தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மின் கண்டன உயர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் இன்று முதல் 15 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வுக்கான உத்தேச பட்டியல் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அப்போதே திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில், உத்தேச கட்டணத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த அநியாய மின்கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.விஜயகாந்த்(தேமுதிக தலைவர்): தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாகவே முன்வந்து மின்கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தமிழக அரசின் பசுந்தோல் போர்த்திய புலியின் செயலாகத்தான் பார்க்க முடிகிறது. ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரலாறு காணாத வகையில் கடுமையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். மின்கட்டண உயர்வை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக மின்கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெறவேண்டும். இந்த மின்கட்டண உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு, குறு தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதையும் தமிழக அரசு சிந்தித்து பார்க்கவேண்டும். பொது மக்களை பெரிதும் பாதிக்கும் மின்கட்டண உயர்வை,உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ராமதாஸ் (பாமக நிறுவனர்):விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் சுமார் ரூ.5,447 கோடிக்கு மின்கட்டணத்தை உயர்த்திய மின்வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத் தக்கது. ஒருபுறம் தனது விருப்பப்படி கட்டண உயர்வை அறிவிக்க வைத்துவிட்டு, இன்னொரு புறம் ஒழுங்கு முறை ஆணையம் தான் இதற்கெல்லாம் காரணம் என்று கூறுவதன் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கான மிகப்பெரிய மோசடி நாடகத்தை ஜெயலலிதா வழியில் நடக்கும் தமிழக அரசு அரங்கேற்றியிருக்கிறது. மின் வாரியத்தில் நடக்கும் ஊழல்களால் ஏற்படும் இழப்பை கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி மக்கள் தலையில் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்து மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இதை உணர்ந்து மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

வைகோ (மதிமுக பொது செயலாளர்):மின் கட்டண உயர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழக மின்சார வாரியத்தின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல் இருந்தது, மின் உற்பத்தித் திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றத் தவறியது மற்றும் தனியார் மின் நிறுவனங்கள் மூலம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது போன்ற காரணங்களால் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, வீழ்ச்சி அடைந்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மக்கள் மீது ஏற்றுவதை ஏற்க முடியாது. எனவே மக்களை வாட்டி வதைக்கும் இந்த மின் கட்டண உயர்வை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திரும்பப்பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர்): மின்வாரியத்துக்கான இழப்பை சரிசெய்யவே இந்த கட்டண உயர்வு என அரசு அறிவித்துள்ளது. ஆனால், மின்வாரிய கட்டமைப்பை சரிசெய்வதன் மூலமும், முறையான பராமரிப்பு, கொள்முதல் மூலமுமே இழப்பை சரிசெய்ய முடியும். அதிமுக அரசு அதனை புறந்தள்ளி, ஆட்சிக்கு வந்து இரண்டாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சுமையை உடனடியாக நீக்கும் வகையில்,  கட்டண உயர்வு முழுவதையும் அரசே மானியமாக ஏற்க வேண்டும். -tamilmurasu.org

கருத்துகள் இல்லை: