சனி, 13 டிசம்பர், 2014

பொது சிவில் சட்டம் அமுலாக்கப்படும் ! சதானந்த கவுடா ,

பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்கு முன்னதாக அதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் டெல்லி மேல்-சபையில் மத்திய சட்ட மந்திரி சதானந்த கவுடா கூறினார். டெல்லி மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா, பொதுசிவில் சட்டம் தொடர்பான பிரச்சினையை கிளப்பி, அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள இந்த தேசம் தயாராக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சட்ட மந்திரி சதானந்த கவுடா பேசுகையில் கூறியதாவது: இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வகை செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளது. சமுதாயத்தில் பெண்களின் அந்தஸ்து உயர இந்த சட்டம் உதவியாக இருக்கும்.


திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை போன்ற அம்சங்களை உள்ளடக்கிய பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. நாகரிக சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரின் மதநம்பிக்கை, பழக்க வழக்கங்கள், தனிநபர் சட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட இந்த பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் முன்பு அதுபற்றி விரிவான அளவில் ஆலோசனை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. விரைவில் இந்த ஆலோசனை தொடங்கும்.

கோவா மாநிலத்தில் பொது சிவில் சட்டம் ‘குடும்ப சட்டம்’ என்ற பெயரில் ஏற்கனவே பின்பற்றப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைவராலும் இந்த சட்டம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளது.

இவ்வாறு மந்திரி சதானந்த கவுடா கூறினார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கே.ரகுமான் கான், பொதுசிவில் சட்டம் மத நம்பிக்கைகளுக்கு விரோதமாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சதானந்த கவுடா பதில் அளிக்கையில், அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவு மதநம்பிக்கை, மத பிரசாரம், சுதந்திரமாக தொழில் செய்தல் ஆகியவற்றை உறுதி செய்வதாகவும், எனவேதான் இது ஒரு முக்கியமான பிரச்சினை என்றும், அரசியல் சாசனத்தின் இந்த பிரிவுடன் முரண்படாத வகையில் பொதுசிவில் சட்டத்தின் அம்சங்களை நாம் வகுக்கவேண்டும் என்றும் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: