வியாழன், 11 டிசம்பர், 2014

பொன்னியின் செல்வன் அனிமேஷன் திரைப்படமாகிறது !

வரலாற்று நாவல்களில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நட்சத்திரத் தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.இப்படைப்பை இன்றைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக எடுக்கிறார்கள். இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. ஒரு தொண்டு நிறுவனமான வளமான தமிழகம் ஆதரவுடன் 'பைவ் எலிமெண்ட்ஸ்'  நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. தயாரிப்பவர் பொ. சரவணராஜா.


இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை படமாக்கக் காரணம் என்ன என்று பேசிய சரவணராஜா “பொன்னியின் செல்வனுக்கு அவ்வளவு வாசகர்கள் ,ரசிகர்கள் இருக்கிறார்கள். . தனிப்பட்ட முறையில் எனக்கு அந்நாவல் பிடிக்கும். 2500 பக்கங்கள் கொண்டது என்றாலும் நானே ஐந்து முறை படித்துள்ளேன் அவ்வளவு அற்புதமான படைப்பு அது. எனவே அதை எடுத்துக் கொண்டேன். இவ்வளவு புகழ் பெற்ற அந்தப் படைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிதான் 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படம்.

இன்றைய வணிகமய, உலகமயச் சூழலில் வரலாற்றுப் படைப்புகள் ரசிக்கப் படுமா? என்று சிலர் கேட்கிறார்கள். சொல்கிற விதத்தில் சொன்னால் ரசிக்கவே செய்வார்கள். இன்று தமிழ் இளைஞர்கள் தமிழின் பெருமையை, தமிழரின் பெருமையை ,வரலாற்றை மரபை ,பாரம்பரியத்தை  எல்லாம் அறியாமல் இருக்கிறார்கள்.இதை அப்படியே விட்டால் எல்லாம் மறக்கப்பட்டு விடும். இன்றைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக எடுக்கிறோம்.'பொன்னியின் செல்வன் கதையின் கருத்தும் கரையாமல் ,நோக்கும் போக்கும் நோகாமல் ,தகவல்கள் தடுமாறாமல் அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் சுருக்கியும் உருவாக்க இருக்கிறோம்.


அனிமேஷனாக உருவாக்கும் போது அதன் எல்லையும் சுதந்திரமும் பரந்தது. தொழில்நுட்ப சாத்தியங்களில் சிறப்பு சேர்க்க முடியும். படத்தின் அனிமேஷன் இயக்குநர் மு.கார்த்திகேயன் .இவர் இத்துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவர்.படத்திற்கான இசை, வசனம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபலமானவர்களை- தமிழ் திரை நட்சத்திரங்களை அணுக இருக்கிறோம்.  

இந்த அனிமேஷன் படம் நிச்சயமாக தரத்தில் மேம்பட்டு இருக்கும். சமீபத்தில் வந்த நம் நாட்டில் உருவான பல படங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பின்னடைவைக் காண்கிறேன்.   கடந்தபத்து ஆண்டுகளில் , 'அனுமான்', 2D அனிமேஷன் படம் நல்ல வெற்றியடைந்தது. 'தெனாலிராமன்' , மற்றும் 'சோட்டா பீம்' போன்ற நீண்ட தொலைக்காட்சி தொடர்களும் நல்ல வெற்றி பெற்றன. உலகத்தரம் வாய்ந்த Disney யின் 'லயன் கிங்' அனிமேஷன் படத்திற்கு எவ்விதத்திலும் 'பொன்னியின் செல்வன்' குறையாமல் இருக்கும்.'' என்று கூறினார்.
nakkheeran.com

கருத்துகள் இல்லை: