வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்

சென்னை ஒரகடம் – ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டி துப்பப்படும் இடம்.
ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சொந்த ஊரில் வாழ்வாதாரங்களை தொலைத்த உழைக்கும் மக்கள் இங்கு வந்து சேர்கின்றனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி, தமிழினவாதம் குறித்து என்ன கருதுகிறார்கள் இவற்றை அறிய ஒரகடத்தில் இயங்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பொருள் வாங்க வரும் தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும் பேசி தகவல் திரட்டினோம்.
கொல்கத்தா தொழிலாளர்கள்நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை முன்பு வந்த தொழிலாளர்கள் 4 பேரை நிறுத்தி பேசினோம்.
நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை
“கொல்கத்தா சணல் தொழிற்சாலையிலிருந்து சென்னைக்கு பிய்த்து எறியப்பட்டோம்”
அவர்கள் கொல்கத்தா ஜூட் (சணல்) ஆலையில் வேலை பார்த்தவர்கள். ஆலை மூடப்பட்ட பிறகு தெரிந்தவர் மூலம் இங்கு வந்திருக்கிறார்கள். அப்பல்லோ தொழிற்சாலையில் துப்புரவு பணி செய்கிறார்கள். மாதம் 9,900 ரூபாய் சம்பளம். அதில் 7,000 ரூபாய் ஊரிலுள்ள குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். 5,000 ரூபாய் வாடகைக்கு எடுத்த வீட்டில் 11 பேர் தங்கியிருக்கின்றனர்.
தமிழர் அல்லாதவரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதைப் பற்றிக் கேட்டதும், “அதெல்லாம் தெரியாதவங்க பேசுற பேச்சு. எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்யணும்” என்றார்கள்.
“பொழுதுபோக்காக தொலைக்காட்சி இல்லை, ஆனால் மொபைலில் படம் பார்ப்போம்” என்றார்கள். மொழி புரியாத மண்ணிலும் அவர்களது ஓட்டை செல்பேசி மூலம் திரைப்படங்களை பார்க்கும் வசதியை தொழில் நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்க தொழிலாளர்
“அதெல்லாம் தெரியாதவங்க பேசுற பேச்சு. எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்யணும்”
6 மாதத்துக்குப் பிறகு ஊருக்குப் போய் விட்டு திரும்பி வருவார்களாம். வேலையில் நிற்கச் சொல்லும் வரை வேலை செய்வார்களாம். அடுத்த வேலை என்ன, எங்கே போக வேண்டும் என்ற கவலையெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. எப்படியாவது பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை கொஞ்சம் சலிப்புடனாவது இருந்தது.
எதிரில் லாட்ஜ் அல்லது மேன்சன் போலத் தெரிந்த கட்டிடத்துக்குள் போனோம். நூற்றுக்கணக்கான தேனீக்கள் தங்கியிருக்கும் தேன்கூடு போல தென்பட்டது அந்த கட்டிடம். ஒரு அறைக்குள் நுழைந்தோம். கொஞ்சம் நடுத்தர வயதான 2 பேர் ஸ்டவ்வில் குழம்பு வைக்க தாளித்துக் கொண்டிருந்தார்கள். அறை முழுவதும் கமறலாக இருந்தது. இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் என்று சொல்லக் கூடிய 3 பேர் மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். 2 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
தொழிலாளர் தங்குமிடம்
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தங்கியிருக்கும் தேன்கூடு
உத்தர பிரதேசத்தில் வாரணாசியிலிருந்து வந்தவர்கள் நிசான் நிறுவன கேன்டீனில் சமைக்கும் வேலை செய்கிறார்கள். சோடக்சோ என்ற நிறுவனம் இந்தப் பணிக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. காலையில் 7 மணிக்கு புறப்பட்டு போனால், இரவுதான் திரும்புவார்களாம். ஞாயிற்றுக் கிழமை மட்டும் தேன்கூட்டு சிறையில் சமைத்து சாப்பிடுகிறார்கள்.
தேன்கூட்டு சிறை சமையல்
ஞாயிற்றுக் கிழமை மட்டும் தேன்கூட்டு சிறையில் சமையல்
“மாசம் 5,000 ரூபாய் தர்றாங்க, இங்க இந்த இடத்தில (10க்கு 15 அடி) 14 பேருக்கு தங்க இடம் கொடுத்திருக்காங்க. படுக்க ஒழுங்கான போர்வை கூட இல்ல பாருங்க” என்றார் ஒருவர்.
வாரணாசி தொழிலாளர்
“படுக்க ஒழுங்கான போர்வை கூட இல்ல”
தமிழினவாதிகள் பிற மாநில தொழிலாளர்களை எதிர்ப்பது பற்றிக் கேட்டதும் “போகவா சொல்றாங்க? நாங்க நாளைக்கே கிளம்பிர்றோம். வேலை செய்ற எங்களுக்கு எங்க போனாலும் பொழைப்பு உண்டு. ஆனா, இங்க உள்ளவங்கல்லாம் பட்டினி கெடக்க வேண்டியதுதான். எங்க மேனேஜர் 60,000 ரூபா சம்பளம் வாங்குறாண்ணா நாங்கள்ளாம் அவனுக்கு வேல செய்றதாலதான் வாங்குறான். நாங்க போயிட்டா அவன் என்ன செய்வான்.”
அப்போது குண்டாக ஒருவர் உள்ளே வந்தார். அவர்தான் இந்த கட்டிடத்துக்கு மேனேஜர். சோடக்சோவில் மேனேஜராக இருக்கிறார்.
உழைக்கும் கைகள்
“எங்க மேனேஜர் 60,000 ரூபா சம்பளம் வாங்குறாண்ணா நாங்கள்ளாம் அவனுக்கு வேல செய்றதாலதான் வாங்குறான்”
“நீங்க இப்படில்லாம் வந்து பேசக் கூடாது. கம்பெனில பெர்மிசன் வாங்கிகிட்டுதான் பேசணும்” என்றார். மும்பையில் பல ஆண்டுகள் வேலை செய்த இவருக்கு இந்தி நன்கு தெரியும்.
“நான் ஒரு தமிழன்ங்க, தமிழனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, இவங்க இல்லைன்னா நமக்கு வேலை நடக்காது. நம்ம ஆளுங்க இந்த மாதிரி வேலை செய்ய கிடைக்க மாட்டாங்க” என்றார். “தமிழ் ஆளுங்களை எடுக்க மாட்டேன்னா சொல்றோம். அவங்க யாரும் வேல கேட்டு வர்றதில்ல. போன வாரம் கூட பேப்பர்ல விளம்பரம் போட்டோம். யாரும் வரவில்லை. இவங்கதான் வர்றாங்க, அதான் எடுக்கிறோம்.” என்றார்.
“சோடெக்சோ நிறுவனம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. சென்னையில் மட்டும் 40,000 பேர் வேலை செய்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களுக்கு ஹாஸ்பிடாலிட்டி (அலுவலக பராமரிப்பு) சேவைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது” என்றார்.
இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கான்டீன் காண்டிராக்ட் எடுக்கக் கூட சோடக்சோ என்ற பன்னாட்டு நிறுவனம் வந்து விட்டது. இந்நிறுவனத்தில் சென்னையில 40,000 பேர் வேலை செய்கிறார்கள். நிசானில் மட்டும் 500 பேர் என்று கூறினார். மலிவான விலைக்கு மனிதர்கள் எங்கே கிடைப்பார்கள் என்ற விவரங்கள், ஆவணங்கள், தொடர்புகள், எல்லாவற்றிலும் பன்னாட்டு நிறுவனங்கள் கச்சிதம். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம், எங்கே தங்க வைப்பது, அதற்கு உள்ளூர் தரகர்கள் என்று விரிந்திருக்கிறது இந்த வலைப்பின்னல். அதில் சிக்கிக் கொண்டு உழைப்பே வாழ்க்கை என ஓடுகிறார்கள் இந்த தொழிலாளிகள்.
ஆஸ்பெஸ்டாஸ் தங்குமிடங்கள்
தனி வீட்டு லட்சணம்
“இவர்கள் குடும்பத்தினருடன் இங்கே வீடெடுத்து வாழ முடியுமா” என்று அந்த மேனேஜரைக் கேட்டால் அது அவர்களது சொந்த பொறுப்பில் செய்யலாம் என்றார். அதுவும் கணவன், மனைவி இருவரும் அருகருகே வேலை செய்ய வேண்டும்.
இந்தக் கட்டிடத்துக்கு எதிரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடுகளுக்கு வெளியே சில இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். நிசான் கார் தொழிற்சாலையில் கான்கிரீட் தொட்டி கழுவும் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ 200 சம்பளம்.
“பொழுதுபோக்கெல்லாம் கிடையாது. வேலை முடிஞ்சு வந்து எல்லாரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்போம், அப்புறம் படுத்து தூங்கி விடுவோம்” என்கிறார்கள். ஒரு டிவி பெட்டி அல்லது சினிமா பார்க்கும் வசதி கூட கிடையாது.
“மகாராஷ்டிராவில் ஏன சாதிக் கொடுமைகள் அதிகமாக இருக்கிறது” என்றால்,
மகாராஷ்டிரா தொழிலாளர்கள்
நிசான் கார் தொழிற்சாலையில் கான்கிரீட் தொட்டி கழுவும் வேலை
“நாங்க எல்லாம் பாபா சாஹிப் அம்பேத்காரின் பிள்ளைகள்” என்றார் ஒருவர். அவர்களில் ஒரு சிலர் தெலுங்கு பேசுபவர்கள், ஒரு சிலர் மராத்தி மொழி பேசுபவர்கள். சாப்பாடு சமைத்துக் கொள்கிறார்கள். மொத்தமாக மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்து சமைப்பதற்கு என்று 4 பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.
ஒரு அறை/வீட்டில் இருந்த லாரி ஓட்டுனர்களிடம், “தமிழ்நாட்டுக்குள் அன்னியர்கள் வரக்கூடாது” என்ற முழக்கத்தைப் பற்றிக் கேட்டதும்,
வடஇந்திய தொழிலாளர்கள்
“நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?”
“பஞ்சாப்ல எத்தனை தமிழன் இருக்கிறான், அவங்களை எல்லாம் திருப்பி கூப்பிட்டுக்கலாமா?” என்றார் ஒருவர்.
“மனுசங்க எங்க வேணும்னாலும் போகலாம். வேலை செஞ்சு பொழைக்கத்தானே போறாங்க. அது போல பிசினஸ் மேனை போகக் கூடாதுன்னு சொல்லுவாங்களா. நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?” என்று ஒரே போடாக போட்டார் இன்னொருவர்.
தமிழினவாதிகளை விட வட இந்தியத் தொழிலாளிகள் முற்போக்கானவர்கள்தான். என்ன இருந்தாலும் தொழிலாளிகள் அல்லவா!
வட இந்தியத் தொழிலாளிகளுக்காக நடக்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு.
ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு
ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு
செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை செய்பவர் இடைவெளியில்லாமல் வேலையில் மூழ்கியிருந்தார். அடுத்தடுத்து யாராவது வந்து கொண்டிருந்தனர்.
“வட நாட்டுக் காரங்களுக்காகத்தான் நாங்க ஞாயிற்றுக் கிழமை கடையை தொறந்து வெச்சிருக்ககோம். 10 ரூபா, 20 ரூபான்னு அவங்க வசதிக்கேற்ப போடுவாங்க. சம்பளம் வந்த ஒரு வாரத்துக்கு கொஞ்சம் அதிகமா ரீசார்ஜ் பண்ணுவாங்க” என்றார்.
“இவங்க வந்ததால நமக்கு வேலை வாய்ப்புகள் இல்லாம போனது உண்மைதான். ஆனா இவங்க கிட்டதான குறைஞ்ச சம்பளம் கொடுத்து நிறைய வேலை வாங்க முடியும். சாப்பாடு போட்டு கொஞ்சம் பணமும் கையில கொடுத்திட்டா போதும். நம்ம ஆளுங்க அப்படி வேலை செய்ய மாட்டாங்க” என்றார்.
குறைந்த சம்பளத்தில் வேலை
“இவங்க கிட்டதான கொறைஞ்ச சம்பளம் கொடுத்து வேலை வாங்க முடியும்”
ஒரு ரெடிமேட் துணிகள் கடையில் விற்பனையாளராக 3 பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
“வடமாநிலத் தொழிலாளர்கள் வருவாங்க. நாங்களும் 1 வருஷத்தில அவங்களோட பேசி ஹிந்தி பேச கத்துக்கிட்டோம். உடனே எல்லாம் வாங்க மாட்டாங்க. நிறைய கேள்வி கேட்டு பேரம் பேசுவாங்க. அப்புறம்தான் வாங்குவாங்க. இதுவரைக்கும் எந்த தகராறும் வந்ததில்ல”
“அவங்கள எப்படி சார் இங்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும். நம்ம ஆளுங்க எவ்வளவு பேரு மத்த இடத்துக்கு போய் வேலை செய்றாங்க, வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்றாங்க. அவங்களை எல்லாம் துரத்திட்டா ஒத்துப்போமா. அது போலத்தான் இதுவும். அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க. அவங்களை போய் விரட்டணும்னு ஏன் சொல்றாங்க” என்றார்கள். ஆக தமிழ் பெண்களும் கூட வட இந்திய தொழிலாளிகளை புரிந்து கொள்கிறார்கள்.
அருகிலேயே சிக்கன் கடை போட்டிருந்தார் சலாம் என்பவர். “எழுதுங்க சார், நல்ல ஃபோட்டோ புடிங்க. போன வருசம் இந்த கடைகள எல்லாம் ஹைவேஸ்காரன இடிச்ச போது வந்திருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும். நிறைய கடைகள்லாம் இருந்திச்சி, பின்னால வீடுங்க இருந்திச்சி. எல்லாத்தையும் பணம் கொடுத்து இடிக்க வைச்சான் அந்த ஆளு. அவன் அதிமுக.ல இருக்கான்னு சொல்றாங்க.
நிறைய ரூம் கட்டி விட்டு ஒரு ஆளுக்கு 1000 ரூபான்னு சம்பாதிக்கிறான் சார். எங்க கடைகளை இடிக்கறதுக்கு முந்தின நாள்தான் சொன்னாங்க. 1.5 லட்சம் ரூபாய் சரக்கு எல்லாம் போச்சு. பின்னால பாருங்க எத்தனை வீடுகள இடிச்சிருப்பாங்க. ஆனா, இன்னும் ரோடு போடல. எதுக்காக இடிச்சானுங்க” என்றார்.
ஒரகடம் மார்க்கெட்
பல்வேறு இடங்களில் ஆளும் கட்சி புரோக்கர்கள் பிழைக்க வந்த மக்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள்.
இது போல பல்வேறு இடங்களில் ஆளும் கட்சி புரோக்கர்கள் பிழைக்க வந்த மக்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள். அது தனிக்கதை.
“வியாபாரமே கொறைஞ்சு போச்சு சார். ஒரு வருசத்துக்கு முன்ன நல்லா இருந்தது. இப்போ எல்லாம் திரும்பப் போய்ட்டாங்க. இந்த காண்டிராக்டருங்க ஒழுங்க பணம் கொடுக்கறது இல்லை. இவங்க சம்பாதிக்கிறதே 200 ரூபாதான். அதையும் கொடுக்காம ஏமாத்தியிருக்கானுங்க. எல்லாம் போயிட்டானுங்க.” என்றார் சலாம்.
ஒரு ஷேர் ஆட்டோ டிரைவர் “ஆவோ பாய், ஆவோ, ஜல்தி சலே ஜாயேங்கே, பைட்டோ” என்று இந்தியில் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் இந்தத் தொழிலாளர்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று சொல்பவர்களைப் பற்றி கேட்டால் “அவன் கெடக்குறான். ஏதோ பொழைப்புக்கு வந்திருக்காங்க, அவங்கள துரத்தி என்ன செய்யப் போறாங்க” என்று வண்டியை கிளப்பினார்.
வடஇந்திய தொழிலாளர்
“அவன் கெடக்குறான். ஏதோ பொழைப்புக்கு வந்திருக்காங்க, அவங்கள துரத்தி என்ன செய்யப் போறாங்க”
ஒரகடம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன். சலூன் கடை நடத்துகிறார்.
“அப்பா 40 வருசமா கடை நடத்தினார், அப்புறம் நான் நடத்துகிறேன்” என்றார்.
“நான் ஐடிஐ படிச்சேன் சார். வெல்டிங் மெக்கானிக். எம்எஃப்எல்-ல அப்ரண்டிசா 2 வருசம் வேலை செஞ்சேன். அதுக்கப்புறம் நம்ம தொழிலையே செய்யலாம்னு வந்துட்டேன்.” என்றார்.
“ஒரு சுனாமி போல வந்துச்சு சார், 2007-லேர்ந்து 4 வருசம் கொஞ்சம் வருமானம் வந்திச்சி. இப்போ பழையபடி ஆயிப் போச்சி. இந்த கம்பெனிங்க வந்ததில ஊருக்கு எந்த உபகாரமும் இல்ல, உபத்திரவம்தான் மிச்சம்”
“2 வருசமா எல்லாம் போச்சு. நோக்கிய கம்பெனி மூடினதுல 28,000 பேருக்கு வேலை போச்சி. பி.ஒய்.டி கம்பெனில லாக்-அவுட் பண்ணிட்டாங்க. இவங்களுக்கெல்லாம் வேற எந்த கம்பெனிலையும் வேலையும் கிடைக்காது.”
அஜய் போரா, ஜாது சைக்கியா இருவரும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள், இங்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்கள்.
ரூ 91-க்கு செல் ரீசார்ஜ் செய்து கொண்டால் 2-3 படங்கள் டவுன்லோட் செய்து கொள்வார்களாம். “ஒருத்தரை இன்னொரு ஊருக்கு வரக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் சேர்ந்து வாழணும்.” என்றார்கள்.
அசாம் தொழிலாளர்கள்
“ஒருத்தரை இன்னொரு ஊருக்கு வரக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் சேர்ந்து வாழணும்
கடைத்தெரு தமிழ் வியாபாரிகள் “சஸ்தே மேம் பிக்தா ஹை, கரீத் லோ, ஆவோ பாய் ஆவோ” என்று இந்தியில் பொருட்களை வாங்க அழைப்பதும், “பேன்ட் 30 ரூபாய்க்கு தருவீங்களா. 50 ரூபாய்க்கு குறையாதா. சரி இந்தாங்க 50 ரூபாய்” என்று இந்தி தொழிலாளர்கள் தமிழில் பேரம் பேசுவதும் என்று களை கட்டியிருந்தது.
பேரம் பேசும் தொழிலாளர்கள்
“பேன்ட் 30 ரூபாய்க்கு தருவீங்களா. 50 ரூபாய்க்கு குறையாதா. சரி இந்தாங்க 50 ரூபாய்”
ஆந்திராவைச் சேர்ந்த சிவா ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்கிறார். பி.ஏ/பிஎட் படித்திருக்கிறார். வெளியில் கடைகளில் விலை அதிகம், அதுவும் சிவில் வேலைக்கு இது போன்ற உடைகள் போதும் என்று இங்கு வாங்க வந்திருக்கிறார்.
ஆந்திர தொழிலாளர்
“சிவில் வேலைக்கு இது போன்ற உடைகள் போதும்”
தண்ணீர் புகாத வாட்ச் வாங்க இரண்டு தொழிலாளர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். “செவன்டி ரூபீ வாட்ச், ஓகே” என்று அருகில் நின்ற நம்மிடம் ஆலோசனை கேட்டார்கள். இரண்டு பேரும் ஆளுக்கு ஒன்று வாங்கிக் கொண்டார்கள். “நேரத்துக்கு டூட்டிக்கு போகணுமே, அதுக்கு தேவைப்படுது” என்றார் ஒருவர். அவர் பெயர் புனிலால் சௌத்ரி. அவரது மகன் பிரபோத் சௌத்ரியும் இங்குதான் வேலை செய்கிறார்.
பீகார் தொழிலாளர்கள்
“எங்க ரூமுக்கு வாங்க”
“எங்க ரூமுக்கு வாங்க, மொத்தம் 400 பேரு சேர்ந்து வந்திருக்கோம். எல்லாத்தையும் பார்த்து பேசுங்க” என்று அழைத்தார்கள்.
“பீகார்ல படகு ஓட்டியா இருந்தேன். இப்போ ஆத்துக்கு குறுக்கே 3 பாலம் கட்டிட்டாங்க, அதனால் படகு வேல இல்ல. அப்புறம் நோய்டா, லூதியானான்னு போய்ட்டு இப்போ இங்க இருக்கேன். அப்பல்லோ கம்பெனில துப்புரவு வேலைல இருந்தேன். இப்போ பக்கத்து கம்பெனில” என்றார்.
எந்த ஊர் என்று விசாரித்ததும் “நாங்க பீகார் பாகல்பூரை சேர்ந்தவங்க” என்றார்கள்.
ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறை
ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறை
பாகல்பூரில் முஸ்லீம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது குறித்து கேட்டதும் ஒருவர், “ஹிந்து முசல்மான் க்யா பாத் ஹை, ஐசா காட்கே தேகா தோ சப் கா கூன் ஏக் ஜைசா ஹீ ஹை” (இந்து, முசுலீம் எல்லாம் என்ன பேச்சு. இப்படி வெட்டி பார்த்தா எல்லா ரத்தமும் ஒரே மாதிரிதான்) என்றார்.
வயதானவர் ராமாயண கதை சொல்ல ஆரம்பித்தார். “கோயிலுக்கெல்லாம் போவீங்களா” என்று கேட்டதும்.
“இங்க கோயிலுக்கெல்லாம் எங்க சார் போறது. கம்பெனி, ரூம், தூக்கம் என்று போகிறது” என்றார்.
“வெளியூர்க்காரனுங்கன்னா எல்லாரும் ஏமாத்துறாங்க, ஒரு காய்ச்சல்னு டாக்டர்கிட்ட போனா நம்மள பார்த்ததுமே வெளியூர் காரன்னு தெரிஞ்சு, ஒரு ஊசி போட்டு 200 ரூபா வாங்குறாரு. அதுவே தமிழ்காரங்களா இருந்தா குறைச்சு வாங்குவாங்களா இருக்கும்”. மருத்துவக் கொள்ளை என்பது மொழி பேதம் பார்ப்பதில்லை என்று அவருக்கு தெரியவில்லை, பாவம்.
வடஇந்தியத் தொழிலாளர்கள்
இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள்.
மாடியில் ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அதற்கு வாடகை மாதம் ரூ 3,000. 11 பேர் தங்கியிருக்கிறார்கள். வீட்டு சொந்தக்காரரின் சுமார் 7 வயதான குழந்தை மேலே வந்து பேசிக் கொண்டிருந்தது, இந்தியில்.
“எங்க கூட சேர்ந்து ஹிந்து கத்துக்கிச்சு” என்றார்கள்.
“கெரசின் ஒரு லிட்டருக்கு 55 ரூபாய்க்கு வாங்குறோம். அரிசி கிலோ 32 ரூபா. கீழ் வீட்டில ரேஷன் அரிசி கிலோ 11 ரூபாய்க்கு தருவாங்க. குடிக்க தண்ணீ கீழ பிடிச்சிப்போம்” என்றார்.
“தண்ணிய கொதிக்க வைச்சி குடிப்பீங்களா”
“55 ரூபாய கெரசின் வாங்கி சூடு பண்ணி எல்லாம் எப்படி குடிக்கிறது. அப்படியேதான் குடிக்கிறோம்”
“பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு இருக்கறது எந்த மனுசனுக்கும் கஷ்டமானதுதான் சார். தீவாளி அன்னைக்கு சிலர் ஊருக்கு போனாங்க. நாங்க போக முடியல. ஒண்ணும் செய்யலை. சாப்பிட்டுட்டு படுத்து தூங்கினோம், வேற என்ன செய்ய முடியும்”.
“சமைச்சுருவோம், சாப்பிட்டு விட்டு போங்க” என்று வற்புறுத்தினார்கள், அந்த தொழிலாளிகள்.
இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள் தமிழினவாதிகள்.
- வினவு செய்தியாளர் குழு

கருத்துகள் இல்லை: