ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

மன்மோகன் சிங் : ராகுல் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் ! ? அதைவிட வதேரா ரொம்பவும் பொருத்தம் ?

ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜி–20 நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்றது.
பிரதமர் பதவி
இதில் கலந்து கொள்வதற்காக ரஷியா சென்று இருந்த பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்து டெல்லி திரும்பினார். வரும் வழியில் விமானத்தில் தன்னுடன் வந்த நிருபர்களுக்கு மன்மோகன் சிங் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நிருபர்கள்; “அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திதான் காங்கிரசுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கட்சியில் உள்ள பலரும் கூறி வரும் நிலையில், 3–வது முறையாக நீங்கள் பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா?“ என்று கேட்டனர்.
ராகுல் பொருத்தமானவர்
அதற்கு மன்மோகன் சிங் பதில் அளிக்கையில்; “2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்’’ என்று கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு மன்மோகன் சிங் அளித்த பதில்களும் வருமாறு:–
திறந்த புத்தகம்
நிருபர் கேள்வி:– பாராளுமன்றத்தில் உங்களைப் பற்றியும், உங்களுடைய அரசு பற்றியும் பாரதீய ஜனதா எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நீங்கள் போதுமான பதில் அளித்து விட்டதாக கருதுகிறீர்களா?
மன்மோகன் சிங் பதில்:– பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளிக்க முயற்சித்தேன். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரமாக இருந்தாலும் சரி அல்லது வேறு பிரச்சினைகளாக இருந்தாலும் சரி; பாராளுமன்றத்திடம் இருந்து எதையும் மறைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. முந்தைய கூட்டத்தொடரில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நான் விரிவான அறிக்கை தாக்கல் செய்தேன். ஆனால் முழுமையாக வாசிக்க என்னை அனுமதிக்கவில்லை. என்றாலும் அது பொது ஆவணம் என்பதால் அதை சபைக்கு வழங்கினேன். நான் ஒரு திறந்த புத்தகம், மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
மம்தா பானர்ஜி
கேள்வி:– வருகிற பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளுமா?
பதில்:– அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர பகைவனும் கிடையாது. எனவே திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று என்னால் கூற முடியாது. ஒரு காலத்தில் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியின் மரியாதைக்குரிய உறுப்பினராக இருந்தார். அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்தது குறித்து காங்கிரஸ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. மதவாத சக்திகளுக்கு எதிராக ஒருமித்த கருத்து கொண்ட மதசார்பற்றவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடும்.
கேள்வி:– மராட்டிய மாநிலத்தை பிரித்து ‘விதர்பா’ தனி மாநிலம் அமைக்கப்படுமா?
பதில்:– அப்படிப்பட்ட யோசனை எதுவும் இல்லை.
நவாஸ் ஷெரீப்புடன் சந்திப்பு நடைபெறுமா?
கேள்வி:– இந்த மாதம் நியூயார்க் நகரில் நடைபெற இருக்கும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் நீங்கள், அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசுவீர்களா?
பதில்:– நவாஸ் ஷெரீப் மீது நான் மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறேன். இயல்பான சூழ்நிலையின் போது அவரை சந்தித்து பேசினால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் இப்போது சில கடுமையான சூழ்நிலைகள் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் சூழ்நிலை உள்ளது. மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பதில் அங்கு குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே பேச்சுவார்த்தை நடத்துவது பற்றிய முடிவை எடுக்கும் முன்பு இவை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டி உள்ளது.
பா.ஜனதா எதிர்ப்பு
கேள்வி:– நவாஸ் ஷெரீப்புடன் நீங்கள் பேச்சு நடத்தக்கூடாது என்று பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறதே?
பதில்:– நமது நண்பர்களை நாம் தேர்வு செய்து கொள்ள முடியும், ஆனால் அண்டை நாட்டினரை நாம் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு கிடையாது என்று எப்போதுமே கூறி வருகிறேன். இயல்பான சூழ்நிலை நிலவும் போது நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுதான்.
இந்திய பெண் எழுத்தாளர் சுட்டு கொலை
கேள்வி:– ஆப்கானிஸ்தானில் இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி தலீபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...?
பதில்:– ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் வசித்து வந்த சுஷ்மிதா பானர்ஜி அங்கு சமூகப்பணியில் ஈடுபட்டார். மெச்சத்தக்க வகையில் செயல்பட்ட அவர் தலீபான்களால் கொல்லப்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அச்சுறுத்தல் நீடிக்கிறது என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பொருளாதாரம்
பேட்டியின் போது மன்மோகன் சிங் மேலும் கூறுகையில்; பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான மசோதாக்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்றும், நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
ஜி–20 மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனம், உலக பொருளாதாரம் நல்ல நிலைமையில் இல்லை என்ற இந்தியாவின் கவலையை பிரதிபலிப்பதாக இருந்தது என்றும், வளர்ச்சி விகிதத்தை மேம்படுத்த அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.
மாநாட்டின் போது பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசியது பயனுள்ளதாக இருந்தது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். daiylythanthi.com

கருத்துகள் இல்லை: