முக்கியப் பிரச்சினைகளில் அடுத்தடுத்து வாங்கும் அதிமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாகியுள்ள நிலையில் தொடர்ந்து சட்ட ரீதியாக பல்வேறு தோல்விகளை ஜெயலலிதா அரசு சந்தித்து வருகிறது.
அதிமுக அரசின் பல முக்கிய முடிவுகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தடைகளைச் சந்தித்துள்ளன.மே 16ம் தேதி 3வது மறையாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அதாவது மே 22ம் தேதி திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி அதை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதுதொடர்பாக, சமச்சீர் கல்விதிருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இத்திட்டத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூன் மாதம், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தமிழகஅரசின் சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. ஜூன் 14ம்தேதி இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1 முதல் 6ம் வகுப்பு வரை நடப்பாண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர வேண்டும், பிற வகுப்புகளுக்கு இதை விரிவுபடுத்துவது தொடர்பாக 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. பின்னர் நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வி அமலாக்கப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டது.
இதுதான் ஜெயலலிதா அரசுக்கு கிடைத்த முதல் சட்ட அடியாகும்.
இதைத் தொடர்ந்து நில அபகரிப்பு வழக்குகளில் கைதான பலரையும் அதிமுக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே போட்டது. ஆனால் பொட்டு சுரேஷ் உள்ளிட்ட பலரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று அதிரடி தீர்ப்புகள் வெளியாகின. இதனால் பொட்டு சுரேஷ் உள்ளிட்டோர் வெளியே வந்தனர்.
அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் அதி உயர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த மருத்துவமனை திட்டத்திற்குத்தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதேபோல, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உயர் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின் முடிவுக்குத் தடை விதித்தது. இன்று வரை இந்தத் தடை தொடருகிறது.
அதேபோல 13,500 மக்கள் நலப் பணியாளர்களையும் ஒரே கையெழுத்தில் அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பணி நீக்கம் செய்ததற்கு இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது தமிழக அரசு. ஆனால் அதை சமீபத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டது.
ஜெயலலிதா அரசு பதவிக்கு வந்த பிறகு சட்ட ரீதியாக விழுந்த இன்னொரு மிகப் பெரிய கொட்டு எது என்றால் அது இருளர் சமூகப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்தான்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே போலீஸாரால் 4 இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய அரசு பிரச்சினையை அமுக்கும் வகையில், நான்கு பெண்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அறிவித்தது. அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று இதை வழங்கினார்.
ஆனால் குற்றம் இழைத்த ஒரு போலீஸ்காரர் கூட கைது செய்யப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சாதாரண வழக்குகளிலெல்லாம் உடனடியாக கைது செய்கிறீர்கள். ஆனால் மிகப் பெரிய குற்றத்தை இழைத்துள்ள போலீஸ்காரர்களை இதுவரை கைது செய்யாமல் உள்ளீர்கள் என்று அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கில் 2 முறை தமிழக அரசு உயர்நீதி்மன்றத்தில் குட்டு வாங்கியது. இருப்பினும் இதுவரை எந்தக் கைதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் போகும் சூழல்கள் உள்ளது.
அதேபோல அதிமுக அரசுக்கு கிடைத்த இன்னொரு குட்டு, மதுரையிலிருந்து வந்தது. பரமக்குடியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதுவும் தமிழக அரசுக்கு கிடைத்த அடிதான்.
இப்படி அடுத்தடுத்து முக்கிய பிரச்சினைகளில் அதிமுக அரசு தொடர்ந்து சட்ட ரீதியான அடி வாங்கி வருவது அதிமுக அரசின் சட்ட ரீதியான கையாளுதல்கள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக