முல்லையில் தொல்லை தரும் ரெட்டைச் சுழிகள்!'சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம்’ என்று தெலுங்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்த நேரம் அது.
'ஆந்திராவுக்கும் தமிழகத்துக்கும் சேர்த்து ஒரே தலைநகரமாக சென்னையை வைத்துக்கொள்ளலாம்’ என்று பிரதமர் நேருவை பலரும் மனமாற்றம் செய் தார்கள். அப்போது, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி.நேரு, டெல்லித் தலைமை, காங்கிரஸ் கட்சி பற்றி எந்தக் கவலையும்படாத ராஜாஜி, ''சென்னை நகரம் தமிழ்நாட்டுடன் இணைந்த பகுதி. சென்னை நகர நிர்வாகம் பற்றிப் பேசவும் நிபந்தனைகள் விதிக்கவும் ஆந்திரர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கர்ஜித்தார். உடனே, பிரதமர் நேருவிடம் இருந்து அழைப்பு வந்தது. டெல்லியில் நேருவை சந்தித்துவிட்டு வெளியே வந்த ராஜாஜி, ''சென்னைப் பட்டணத்தை ஆந்திரர்களிடம் தருவது என்று மத்திய அரசு முடிவு எடுக்குமானால், அதை அமல்படுத்தி ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கு இல்லை. வேறு ஒருவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்து அந்தக் காரியத்தைச் செய்துகொள்ளுங்கள் என்று பிரதமரிடம் சொல்லிவிட்டேன்'' என்று வெளிப்படையாகப் பேசினார் ராஜாஜி. அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர் காமராஜர். அவர், ''சென்னை நகரில் ஆந்திரத்துக்கு எவ்விதமான பங்கு தந்தாலும், இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரும் கிளர்ச்சி எழும்'' என்று வெளிப்படையாக எச்சரித்தார்.
ராஜாஜி எதிர் அணியைச் சேர்ந்தவர் என்றாலும், 'தமிழ் மக்களைக் காக்கும் விஷயத்தில் இருவரும் ஒரே அணி’ என்று நிரூபித்தார் காமராஜர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில், டெல்லித் தலைமையைக் கேள்வி கேட்கும் அளவுக்குத் தமிழர்கள் தகுதியுடன் இருந்ததால், சென்னை தப்பியது. தமிழகத்துக்கே கிடைத்தது.
ஆனால்... இன்று?
முல்லைப் பெரியாறு விவகாரம் 30 ஆண்டுகளாக இருக்கிறது. கேரளத்தின் ஆட்சி நாற்காலியை தக்க வைத்துக் கொள்ள ஓட்டு வேட்டையை தொடங்கும் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் தங்களது கேரளக் கற்பைக் காட்டிக்கொள்வதற்காக மிச்சம் வைத்திருக்கும் ஒரே எச்சம்... அவர்களைப் பொறுத்த வரை முல்லைப் பெரியாறு விவகாரம்தான். இவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டாலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்கள். சேர்ந்து இருந்தாலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்கள். இப்போது சேர்ந்து இருக்கிறார்கள். கொச்சியிலும் திருவனந்தபுரத்திலும் மிக மட்டமான வார்த்தைகளால் திட்டிக்கொள்ளும் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் டெல்லிக்கு ஒன்றாகப் படை எடுக்கிறது. பிரதமரைச் சந்திக்க முதல்வர் உம்மன் சாண்டியும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் ஒன்றாகப் போகிறார்கள். உம்மன் சாண்டி சொல் வதற்கெல்லாம் அச்சு தலை யாட்டுகிறார்.
'முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத்தான் வேண்டும்’ என்று, அந்த அணையைப் பார்த்த காங்கிரஸ் அமைச்சர் ஜோசப் சொல்கிறார். அதே கோரிக்கையை வலியுறுத்தி, அச்சுதானந்தன் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகிறார். வண்டிப்பெரியாறு பகுதியில் மனிதச் சங்கிலி நடந்தபோது, கேரள காங்கிரஸ் அமைச்சர் பி.ஜே.ஜோசப்பின் கையைப் பற்றி நின்றவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயன்.
தென் தமிழகத்தின் ஐந்து மாவட்டத்து மக்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் திட்டத்துக்கு பச்சை சிக்னல் காட்டி காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் சேர்ந்து நின்ற காட்சியை, எதைச் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது.
கேரள மாநில அரசாங்கத்தின் வழக்கறிஞர் கே.பி. தண்டபாணி, உயர் நீதிமன்றத்தில் தன்னையும் மீறி ஓர் உண்மையை ஒப்புக்கொண்டார். ''முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே இருக்கிறது. பத்திரிகைகள்தான் தேவைஅற்ற பதற்றத்தையும் வதந்திகளையும் உருவாக்கிவிட்டன. அந்த அணை உடைகிறது என்றே கற்பனை செய்தாலும், அதில் இருந்து வெளியேறும் தண்ணீரை இடுக்கி, குலமாடி, செருதோணி ஆகிய அணைகளில் தேக்கி வைத்துக்கொள்ளலாம்'' என்று அவர் உண்மையைச் சொன்னதும், உம்மன் சாண்டிக்கு முன்னதாக எதிர்ப்புத் தெரிவித்தவர் அச்சுதானந்தன். 'கேரளாவுக்கு யார் தீவிர விசுவாசி?’ என்பதைக் காட்டுவதற்காக அணையை உடைக்கத்தான் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும் போட்டி போடுகிறார்கள்.
கேரளத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி. முதலமைச்சர் உம்மன்சாண்டி. கேரளத்தையும் தமிழகத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை ஆள்வது காங்கிரஸ் கூட்டணி. அதன் பிரதமர் மன்மோகன் சிங். இரண்டு பேருக்குமே தலைவர் சோனியா காந்தி. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதற்கு ஞானதேசிகன் தலைவர். 20 ஆண்டுகள் தமிழ் நாட்டை ஆண்ட கட்சி இது. 'அடுத்து காமராஜர் ஆட்சியை நாங்கள் அமைக்கப்போகிறோம்’ என்று சொல்லிக்கொள்ளும் கட்சி.
ஆனால், இவர்களால் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உண்மையான ஒரேவிதமான நிலைப் பாட்டை எடுக்க முடியாததன் பின்னணி என்ன?
கேரள காங்கிரஸ் கட்சி, கேரள மக்களுக்கு உண்மையாக இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 40 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் இருப்பதற்கு இதுதான் காரணம். தமிழக காங்கிரஸ் எம்.பி-க்கள் அனைவரும் சென்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியைப் பார்த்தார்கள். ''இரண்டு மாநில மக்களும் அமைதியாக இருக்க வேண்டும்'' என்று அந்தோணி கேட்டுக்கொண்டார். பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த அந்தோணி, ''நான் கேரளத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் பிரதமரைச் சந்தித்தேன்'' என்கிறார். 'தமிழகத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில்’ பிரதமரைச் சந்திக்க ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட இத்யாதித் தலைவர்கள் தயாராக இல்லை. சோனியாவைப் போய்ப் பார்த்து, ''உம்மன் சாண்டியை அழைத்துக் கண்டியுங்கள்! 'அணையை உடைப்போம்’ என்ற முடிவால் தென்தமிழகமே பாலைவனம் ஆகிவிடும்'' என்று சொல்லக்கூடிய தைரியம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் எவருக்கும் இல்லை. சோனியாவிடம் சொல்ல முடியாதவர்கள் காந்தி சிலைக்கு முன்னால் போய் நின்று அவரிடம் பாவமன்னிப்பு கேட்பது போல பேனரைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். தமிழக மக்களை மதிக்காத, தமிழகத்தின் உரிமையை உதாசீனம் செய்யக்கூடிய, உச்ச நீதிமன்றம் இது வரை கொடுத்த தீர்ப்பை மதிக்காத கேரள காங்கிரஸ் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கக்கூட முடியாத இவர்களால், தமிழ்நாட்டில் என்ன செய்ய முடியும்?
காங்கிரஸுக்குக் கொஞ்சமும் சளைத்தது இல்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. காங்கிரஸ் அப்பாவி யாகச் சொல்வதை, கம்யூனிஸ்ட்கள் தத்துவார்த்த முலாம் பூசிச் சொல்வார்கள். தேனியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தாமல் அவர்களது துணை அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடக்கிறது. தமிழகப் பாசன உரிமையைப் பாதுகாக்கவும் மக்களின் ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தியும் நடத்தப்பட்டது உண்ணாவிரதம். 'எல்லையின் இருபகுதிகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் இனவெறிச் சக்திகளுக்கு இடம் தராமல் தடுக்க வேண்டும். ஆத்திரமூட்டும் சக்திகளுக்கு இரையாக வேண்டாம்’ என்று மார்க்சிஸ்ட் தலைமைக் குழு பணிவன்புடன் கேட்டுக்கொண்டது.
கேரளத்தில் இனவெறியைத் தூண்டும் அச்சுதானந்தன் எந்தக் கட்சி? ஆத்திரமூட்டும் பினராயி விஜயன் எந்தக் கட்சி என்பது இங்குள்ள தமிழக மார்க்சிஸ்ட்டுகளுக்குத் தெரியாதா? அடுத்தவர் மீது விமர்சனம் செய்யும்போது மட்டும் ஆதி அந்தங்களைத் தோண்டித் துருவிக் கொண்டுவந்து போடும் அந்தக் கட்சி, சமீபகால கேரள மார்க்சிஸ்ட் செயல்பாடுகளை விமர்சிப்பதே இல்லை. தனது பத்திரிகையில் மறந்தும் செய்தி ஆக்குவதும் இல்லை. அரசியல், பதவி, தேர்தல், போட்டி என்று வந்துவிட்டால், அனைத்துக் கட்சிக் கொள்கைகளும் ஒரே மாதிரி ஆகிவிடுகின்றன.
'கேரளாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது, முல்லைப் பெரியாறு அணை விரைவில் உடையப் போகிறது, அணையின் நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும், புதிய அணை கட்ட வேண்டும், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், கேரளா வுக்குப் பேரழிவு...’ என்று, கட்சி பேதம் இல்லாமல் கேரளாவில் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ் கட்சியும் பொய்களைச் சொல்கின்றன. இதை விமர்சிக்கத் தைரியம் இல்லாமல், இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்களும் மார்க்சிஸ்ட் தலைவர்களும் இருக்கிறார்கள். தமிழ் மக்களைவிட கட்சி நலனையே இவர்கள் பெரிதாக நினைக்கிறார்கள்.
''மலையாளத்துக்குச் சொந்தமான தேக்கு மரங்களை சென்னை ராஜ்யத்தார் வெட்டி எடுத்துக்கொண்டு போகிறார்கள். திருக் கொச்சிக் காடுகளில் உலவ வேண்டிய யானைகளை, கோவைப் பகுதிக் காடுகளுக்கு ஓட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள்'' என்று கேரள ராஜ்யத்தவர் குரலை ஓங்கி ஒலித்த கம்யூனிஸ்ட்டுகளால் கொண்டாடப்படும் ஏ.கே.கோபாலனின் குரல் என்பதால், இன்றைய அச்சுதானந்தனின் செயல்பாடுகளில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அன்று முதல் இன்று வரை அம்பலப்பட்டு நிற்பது இந்தக் கட்சிகள். இதில் வித்தியாசங்களைத் தேடுவது வீண் வேலை!
'தமிழ்நாட்டுக்குத் தண்ணீர், கேரளாவுக்குப் பாது காப்பு’ என்ற லாகவமான வாதம்கொண்ட கேரள மாநில விளம்பரத்தை மார்க்சிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வப் பத்திரிகையில் வெளியிடுவதன் மூலமாக, தமிழ்நாட்டுக்கு என்ன சொல்ல விரும்புகிறது? முல்லைப் பெரியாறு பதற்றம் தணியாததற்குக் காரணமான உம்மன் சாண்டியை ஞானதேசிகனும்... அச்சுதானந்தனை ஜி.ராமகிருஷ்ணனும் அல்லவா மனமாற்றம் செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து வேறு காரியங்களைப் பார்ப்பது திசை திருப்பும் காரியமாகவே முடியும்! மனமாற்றம் செய்ய முடியுமா?
- ப.திருமாவேலன்
thanks vikatan +chandran NH
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக