ஞாயிறு, 15 ஜனவரி, 2012

இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்










கூட்டுக் களவாணிகள்
ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 100 சதவீதமும், பல்வேறு வணிகமுத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அந்நிய
நேரடி மூலதனத்தை அனுமதிப்பது எனக் கடந்த மாதம் மைய அமைச்சரவை முடிவெடுத்தது. இந்த முடிவை பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திருணாமுல் காங்கிரசும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவே ஓரடி பின்வாங்கியிருக்கிறது, ஐ.மு.கூ. அரசு.

அனைத்துக் கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வரும் வரை, தனது முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும், தற்போது ஒரு இடைத்தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என்பதுதான் முடிவைத் தள்ளி வைக்க காரணம் என்று வெளிப்படையாகக் கூறினார், பிரணாப் முகர்ஜி. இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைப் போல, இதுவும் ஒரு வாக்கெடுப்புக்குப் போனால், எம்.பி.க்களைக் கொள்முதல் செய்து தந்துவிட்டு, சிறைக்கும் போவதற்கு இன்னொரு அமர்சிங் இல்லையென்பதுதான் இந்தப் பின்வாங்கலுக்குக் காரணம்.
இம்முடிவைத் தள்ளிவைத்த சில நாட்களுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மன்மோகன் சிங், உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, எல்லாக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி அதன் பின்னர் இதனை அமல்படுத்துவோம் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார். தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் விசயத்தில், ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி நடத்தும் நாடகங்கள் அவர்களுக்கே புளித்துப் போகும் அளவுக்குப் பழகிவிட்டதால், ஒளிவுமறைவுக்குக்கூட இடமில்லாமல் போய்விட்டது. எனவேதான், தேர்தல் முடிந்தவுடன் அமல்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னாலேயே அறிவிக்கிறார், மன்மோகன் சிங்.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் அந்நிய மூலதனத்தைச் சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதன் சாதகங்கள் குறித்த பிரச்சாரம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்த விவாதமே பொருளற்றது. சாதக பாதக அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அந்நிய மூலதனத்தை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவை அரசு எடுக்கப் போவதில்லை. அந்நிய நேரடி முதலீட்டினால் நன்மையை விடத் தீமைகள்தான் அதிகம் என்பதை நிறுவிவிட்டால், மன்மோகன் சிங் இதனை நிறுத்திவிடப் போவதும் இல்லை. உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு இந்த முடிவு அமல்படுத்தப்படுகிறது என்பதுதான் இப்பிரச்சினையின் மையப்பொருள். அது குறித்த கேள்வியை எழுப்பாமல் தவிர்த்துக் கொண்டே, பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதைத் தனியொரு பிரச்சினை போல விவாதிக்கின்றனர். இது மிகப்பெரும் மோசடியாகும்.
மைய வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவே சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளார். “இந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினராக உள்ளதால், அதன் முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும். அதுமட்டுமின்றி, இது போன்ற கேந்திரமான தொழில்களில் மேலை நாட்டு நிறுவனங்களை இந்தியா அனுமதிக்காவிட்டால், பொருளாதாரச் சிக்கலிலிருந்து அவர்கள் விடுபட முடியாது. அவர்களுடைய பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் நாமும் வளர முடியாது. சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பது குறித்த முடிவை ஏற்கெனவே எடுத்தாகி விட்டது. எந்தத் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்துவது என்பதில் மட்டுமே ஒத்த கருத்தை எட்டவேண்டியிருக்கிறது” என்று விளக்கினார்,  ஆனந்த் சர்மா.
உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்நிய முதலீட்டைத் தடுப்பவர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால், தாராளமயக் கொள்கையில் பா.ஜ.க.வின் யோக்கியதையை ஊரறியும். 1998இல் இருந்து 2004 வரை ஆறாண்டுகள் அக்கட்சி ஆட்சி செய்தபோதுதான், இந்தத் தாராளமயத்துக்கான வலுவான அடித்தளங்கள் எல்லாம் போடப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி தருவதற்கு முன்னோடியாக இருந்தது. அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக மாபெரும் “மால்கள்” உருவாக்கப்பட வேண்டி, அதற்குத்தக்கபடி நகர்ப்புற நில உச்ச வரம்பை தளர்த்தியதும் பா.ஜ.க.தான்.
பா.ஜ.க.வின் அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சராயிருந்த முரசொலி மாறன் சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை 100 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார். 2004 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையிலேயே, சில்லறை வணிகத்தில் 26% அந்நிய மூலதனத்தை அனுமதிக்க இருப்பதாகக் கூறியது பா.ஜ.க. ஒருபக்கம் எதிர்ப்பு நாடகம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட மோடியும், பா.ஜ.க. வின் கூட்டாளியான நவீன் பட்நாயக்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குத் தமது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
பா.ஜ.க. இன்று அந்தர்பல்டி அடித்தாலும், நடித்தாலும் அக்கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது காங்கிரசு கும்பலுக்கு நன்றாகவே தெரியும். “சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனம் என்பது நீங்கள் பெற்ற குழந்தை. நாங்கள் அதை வளர்க்கிறோம். அவ்வளவுதான்” என்றார் பிரணாப் முகர்ஜி.
அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்றாலும், பா.ஜ.க. கொஞ்சம் வரம்பு மீறிச் செல்வதாக ஆளும் வர்க்கங்கள் கருதுவதால், ஊடகங்கள் பா.ஜ.க.வை ‘கொள்கை இல்லாத கட்சி’ என்றும், ஓட்டுக்காகத் தேசத்தின் நலனை அடகு வைப்பதாகவும், தொலைநோக்குள்ள சிந்தனையை இழந்துவிட்டதாகவும் வசைபாடுகின்றன. பா.ஜ.க. தலைவர்களிடம்  அவர்கள் கடந்த காலங்களில் தாராளமயத்துக்கு ஆதரவாகப் பேசியதையெல்லாம் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்கின்றன. ஊடகங்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கி பா.ஜ.க.வினர் திணறுகிறார்கள்.  ஆளும் வர்க்கத்தை அதிகமாகப் புண்படுத்திவிட்டோமோ என்ற அச்சமும் பா.ஜ.க. வைப் பிடித்தாட்டுகிறது. அதனால்தான் ‘வால்மார்ட்டைக் கொளுத்துவேன்’ என்று உமாபாரதி கொக்கரித்ததும், அதில் தமக்கு உடன்பாடில்லை என்று பா.ஜ.க. தலைமை அவசரமாக தனது நிலையைத் தெளிவுபடுத்தியது.
காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திருணாமுல் காங்கிரசின் யோக்கியதையோ தனிக்கதை. எஃப்.ஐ.சி.சி.ஐ. என்ற தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தீவிரமாக ஆதரித்தவருமான அமித் மித்ராவை நிதி அமைச்சராக வைத்துக்கொண்டு, மேற்கு வங்கத்தில் தாராளமயத்தைத் தாராளமாக அனுமதித்து வரும் மம்தா, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தீவிரமாக எதிர்ப்பதாக நடிக்கிறார். ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியிருப்பதால், விருப்பமில்லாத மாநிலங்கள் தடை செய்து கொள்ளலாம். ஆனால், அந்நிய மூலதனத்தை விரும்பும் மாநிலங்களும் அதனைப் பெற முடியாமல் தடுப்பது என்ன நியாயம் என்று வாதாடுகிறது காங்கிரசு கட்சி.
மாநிலங்களின் உரிமை மீது காங்கிரசுக்கு எழுந்துள்ள இந்த திடீர்க்காதல், மாநிலப் பட்டியலில் இருந்த பல அதிகாரங்களையும் மத்திய அரசு பிடுங்கிய போது எழவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை எனக் கூறும் இவர்கள்தான், சில்லறை வணிகப் பிரச்சனையில் மாநிலங்களுக்கு உரிமை வழங்கியிருப்பதாகப் பேசுகிறார்கள். ஒட்டகம் தலை நுழைக்க இடம் கொடுத்துவிட்டால், அது உடலை நுழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இந்த உரிமைக்கு அடிப்படையாகும்.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இடுப்பொடிந்து போய்க் கிடக்கையில், அவற்றைத் தூக்கி நிறுத்த வேண்டுமானால் அந்நாடுகளின் நிதிமூலதனத்தை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில் தடையின்றி அனுமதிக்க வேண்டும். அதற்காகத்தான் வால்மார்ட்டின் கையாளான ஹிலாரி கிளிண்டன் நேரடியாக இங்கு வந்து இந்திய அரசையும், ஆளும் வர்க்கத்தையும் நிர்பந்தித்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்தியாவில்  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு இந்த ஆண்டு 49 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும் என வால்மார்ட்  நினைத்திருந்தது. ஆனால், அவர்களேகூட எதிர்பார்க்காத வகையில் மன்மோகன் அரசு 51 சதவீதமாக அதனை உயர்த்தியது. அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என ஆண்டையின் நலன் குறித்துக் கவலைப்படும் அடிமையாக இந்திய ஆளும் வர்க்கம் இருப்பதால்தான் அந்நிய முதலீட்டை இவ்வளவு மூர்க்கத்தனமாக ஆதரிக்கிறது.
சட்டமன்றத் தேர்தல்கள் முடிவதற்காகத்தான் எல்லோரும் காத்திருக்கின்றனர். பா.ஜ.க., தான் பெற்ற பிள்ளையை கைவிட்டு விடுமா, என்ன?

கருத்துகள் இல்லை: