வெள்ளி, 20 ஜனவரி, 2012

இந்தியாவின் உதவியுடன் ராணுவப் புரட்சியை முறியடித்த வங்கதேசம்-பின்னணியில் பாக்.?



Sheikh Hasina
டெல்லி: வங்கதேச ராணுவத்தில் உள்ள இந்திய எதிர்ப்பு ராணுவ அதிகாரிகள் சிலர் சேர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்து கைதாகியுள்ளனர்.
இந்தியாவின் உதவியுடன் இந்தப் புரட்சி முயற்சியை வங்கதேச அரசு முறியடித்துள்ளது. இதற்கிடையே, இந்த சதி வேலையின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தியாவின் முதல் தலைவலி பாகிஸ்தான் என்றால் 2வது தலைவலி வங்கதேசமாகும். பாகிஸ்தானாவது பகிரங்கமாக இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது. ஆனால் வங்கதேசத்திலோ ரகசியமான முறையில் இந்தியாவுக்கு எதிரான பல வேலைகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவ வைப்பது, வட கிழக்கு மாநிலங்களில் செயல்படும் உல்பா தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பது என மறைமுகமாக இந்தியாவுக்கு எதிரான களமாக வங்கதேசம் திகழ்கிறது.

இதனால் பாகிஸ்தான் மீது ஒரு கண்ணும், வங்கதேசம் மீது இன்னொரு கண்ணுமாக இருக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. வங்கதேச ராணுவத்தில் இந்திய எதிர்ப்பு அலை எப்போதுமே அதீதமாக காணப்படுவது வழக்கம். காரணம் பாகிஸ்தான் மீது பாசம் கொண்டவர்கள் இந்த ராணுவத்தில் அதிகம் இருப்பதே.

மேலும், எப்படி பாகிஸ்தானில் ராணுவம் அவ்வப்போது புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றுகிறதோ, அதே போல வங்கதேசத்திலும் அவ்வப்போது நடப்பது வழக்கம். சமீப காலமாக அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து வருகிறது. மேலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலையையும் அங்குள்ள ஆட்சியாளர்கள் எடுத்து வருவதால் வங்கதேச ராணுவத்தில் உள்ள இந்திய எதிர்ப்பு அதிகாரிகள் எரிச்சலடைந்துள்ளனர். இதைத்தான் தற்போதைய புரட்சி முயற்சி வெளிப்படுத்துவதாக இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பே வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசைக் கவிழ்த்து விட்டு ஆட்சியைக் கைப்பற்ற ராணுவத்தில் சிலர் முயற்சிப்பதாக இந்திய உளவு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை இந்திய அரசு, வங்கதேச அரசுக்கு தெரிவித்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட வங்கதேச அரசு, தனது ராணுவத்தின் மூலம் இந்த புரட்சி சதியை முறியடித்துள்ளது.

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டஇந்திய உளவு அமைப்புகள் அதன் மூலம் புரட்சி குறித்த சதியை கண்டுபிடித்து வங்கதேசத்தை உஷார்படுத்தினவாம். இந்த புரட்சி முயற்சி தொடர்பாக இரண்டு பேர் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஈசான் யூசுப், ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் ஆவார். இன்னொருவரான ஜாகீர், ஓய்வு பெற்ற மேஜர். இந்த சதித் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள் சிலர் வெளிநாடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

2009ல் வங்கதேசத்தில் வங்கதேச ரைபிள் படையினர் நடத்திய பெரிய கலவரத்திற்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹசீனா ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் இந்த மிகப் பெரிய கலவரம் நடந்தேறியது நினைவிருக்கலாம்.

புரட்சி முறியடிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் முகம்மது ரஸ்ஸாக் கூறுகையில், ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிடப்பட்ட சதித் திட்டத்தில் 14 முதல் 16 ராணுவ அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பலர் தற்போது பணியில் உள்ளவர்கள், சிலர் ஓய்வு பெற்றவர்கள். அவர்களின் தொடர்புக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

சதி வேலைகளில் ஈடுபட்டோர் மீது உரிய விசாரணைக்குப் பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காலங்களில் ராணுவத்தைப் பயன்படுத்தி பல தீய சக்திகள் பல அரசியல் லாபங்களை அடைந்துள்ளன. அதற்கான விளைவுகளை இன்று வரை ராணுவம் சந்தித்து வருகிறது. இனிமேல் அப்படி நடக்க ராணுவம் அனுமதிக்காது.

தலைமறைவாக உள்ள மேஜர் சையத் முகம்மது ஜியாவுல் ஹக்குடன் தொலைபேசித் தொடர்புகளை கைதானவர்கள் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு சதி வேலைகளை இவர்கள் திட்டமிட்டு வந்துள்ளனர். இன்டர்நெட் மூலமும் இவர்கள் தொடர்பு வைத்துள்ளனர்.

விடுமுறையில் போன ஜியாவுல் ஹக், மீண்டும் பணிக்கு வராமல் தலைமறைவாக இருந்தபடி சதி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் வங்கதேசத்திற்கு வெளியில் தங்கியுள்ள சிலர்தான் இந்த சதி வேலையைத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. நிச்சயம் ஒரு வெளிநாட்டின் கை இந்த சதி வேலையில் இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

தலைமறைவாகவுள்ள மேஜர் ஜியா உல் ஹக், தடை செய்யபப்ட்ட இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹிரிர் அமைப்புடன் தொடர்புடையவர் ஆவார். தற்போது இருவர் கைதாகியுள்ளனர். அவர்கள் இருவரும் சதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். மற்றவர்களை தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையில் வைத்துள்ளோம் என்றார்.

ஆட்சிக் கவிழ்ப்பு சதி வேலைகள் தற்போதுதான் அம்பலத்திற்கு வந்திருந்தாலும், முறியடிப்பு வேலைகள் கடந்த மாதமே தொடங்கி விட்டனவாம். இதுதொடர்பான ராணுவ கோர்ட் ஒன்றும் விசாரணைக்காக டிசம்பர் 28ம் தேதியே தொடங்கப்பட்டு விட்டதாம்.

ராணுவ மேஜர் ஜெனரல் கம்ருஸ்மான் என்பவர் தற்போது தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கொல்கத்தாவுக்கு பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வந்திருந்தார். அவரது வருகை குறித்து தற்போது சந்தேகப் பார்வை எழுந்துள்ளது. இவரது வருகையின் பின்னணி குறித்து தற்போது வங்கதேச அரசு ஆராய்ந்து வருகிறது. இந்தியாவின் உதவியும் இதுதொடர்பாக கோரப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும், முக்கிய அடிப்படைவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் முக்கிய்த தலைவர் ஒருவர் மீது போர்க்குற்றம் சாட்டப்பட்டு வங்கதேச கோர்ட்டில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்தத் தலைவர் 1971ம் ஆண்டு நடந்த போரின்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து பல்வேறு குற்றங்களை இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவும் கூட புரட்சிக்கான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜமாத் இ இஸ்லாமி பாகிஸதானுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

வங்கதேச அரசைக் கவிழ்க்க நடந்த முயற்சி குறித்து ஷேக் ஹசீனாவை விட இந்தியாதான் அதிகம் கவலைப்பட வேண்டும். காரணம், கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்பதுதான். ஹசீனா அரசு, இந்திய அரசுடன் தொடர்ந்து நெருக்கமாக செயல்பட்டு வருவதை தீவிரவாத எண்ணம் கொண்ட வங்கதேச அடிப்படைவாதிகள் சீர்குலைக்க முயல்வது அம்பலமாகியுள்ளதால் இந்தியாவுக்கு கவலை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக வங்கதேசத்துடன், இந்தியா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அது வங்கதேசத்தில் உள்ள அடிப்படைவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. மேலும் ஹசீனா அரசு, வங்கதேசத்தை தீவிரவாதிகள் ஒரு தளமாக பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கு உறுதிமொழி அளித்ததையும் அடிப்படைவாதிகள் விரும்பவில்லை.

2009ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் பல இஸ்லாமிய அடிப்படைவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்தார் ஹசீனா. மேலும் தனது அரசுக்கு எதிராக சதி செய்வோரையும் கடுமையாக எச்சரித்து வந்தார்.

ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவும், வங்கதேசமும், எல்லைப் பிரச்சினையில் நீக்குப் போக்குடன் நடந்து கொண்டுள்ளன. வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட ப்லவேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகள் குறித்து வங்கதேசம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் அக்கறையுடன் கேட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வங்கதேச, இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீதும் வங்கதேச அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவிரவாதிகள் ஊடுறுவலையும் தடுக்க முயன்று வருகிறது.

மேலும், வங்கதேசத்தின் சிட்டகாங் மற்றும் மோங்க்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி தருவதாக ஹசீனா உறுதியளித்துள்ளார்.

இப்படி பல வழிகளிலும் ஹசீனா இந்தியாவுடன் ஒத்துழைத்து நடந்து வருவதைப் பொறுக்காமல் தான் ராணுவப் புரட்சிக்கு அங்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக இந்தியா கருதுகிறது

கருத்துகள் இல்லை: