வெள்ளி, 20 ஜனவரி, 2012

இந்தியாவில் தீண்டத்தகாதவராக அறிமுகப்படுத்தப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்!


Martin Luther King Jr
அட்லாண்டா: உலக அமைதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், நிறவெறிக்கு எதிராகவும் போராடிய, அமெரிக்க சிவில் உரிமைப் போராளி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு முன்பு வந்திருந்தபோது அவரை பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த அந்தப் பள்ளியின் முதல்வர், அமெரிக்காவிலிருந்து வந்துள்ள தீண்டத்தகாதவர் என்று கூறியதால் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அதிர்ச்சி அடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் நடந்தது 1959ம் ஆண்டில். அட்லாண்டாவில் உள்ள எபனேசர் பாப்டிஸ்ட் சர்ச்சில் நடந்த மார்ட்டின் லூதர் கிங் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய ஜார்ஜியா மூத்த குடிமக்ள் திட்ட செயல் இயக்குநர் ராஜ் ரஸ்தான்தான் இதை தெரிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அவர் பேசுகையில், டாக்டர் கிங் இந்த சர்ச்சில் முன்பு பேசியபோது அவர் கூறியதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே நான் தெரிவிக்கிறேன்...

நானும், எனது மனைவியும் 1959ம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றிருந்தோம். தென் கோடி நகரான, கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்குள்ள ஒரு பள்ளியில் நான் பேசினேன். அந்தப் பள்ளியில் தீண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் அதிக அளவில் படித்து வந்தனர்.

பள்ளியின் முதல்வர் என்னை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசினார். அவர் தனது பேச்சின் நிறைவுப் பகுதியை எட்டியபோது, சிறார்களே, அமெரிக்காவிலிருந்து வந்துள்ள உங்களைப் போன்ற தீண்டத்தகாதவர் ஒருவரை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறியபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு நிமிடம் எனக்கு எதுவும் புரியவில்லை. பிறகுதான் எனக்குப் புரிந்தது, அந்தப் பிள்ளைகளைப் போல நானும், எனது சமூகத்தினரும் அமெரிக்காவில் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை சுட்டிக் காட்டித்தான் அவர் அவ்வாறு கூறினார் என்பது எனக்குப் புரிந்தது.

பெரும் வளர்ச்சி அடைந்த ஒரு சமுதாயத்தில், என்னைப் போன்ற 2 கோடி கருப்பர் இன சகோதர சகோதரிகள் ஒடுக்கப்பட்டு, வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதை நினைத்துப் பார்த்தேன். பிறகுதான் எனக்குள் நான் கூறிக் கொண்டேன், ஆம் நான் தீண்டத்தகாதவன்தான் என்று. நான் மட்டுமல்ல அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு கருப்பரும் தீண்டத்தகாதவர்தான் என்று கூறிக் கொண்டேன் என்று மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியதாக தெரிவித்தார் ரஸ்தான்.

ரஸ்தான் மேலும் கூறுகையில், காந்திக்கும், மார்ட்டின் லூதர் கிங்குக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அமெரிக்க சிவில் உரிமைப் போராளிகள், மார்ட்டின் லூதரை, சமூ்க, அரசியல் மாற்றங்களுக்கான முன்னோடி என்று வர்ணிக்கிறார்கள். மேலும் ஒரு நூலில், மார்ட்டின் லூதர் கிங்கை, அமெரிக்காவின் மகாத்மா என்று விளித்து எழுதியிருந்தனர் என்றார் ரஸ்தான்.

1964ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார் மார்டடின் லூதர் கிங் என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை: