புதன், 18 ஜனவரி, 2012

சசிகலா குடும்பத்தினர் திமுக பக்கம்?


ஜெயாவின் தோழி தனது கணவரை சந்தித்தை தாங்கி கொள்ள முடியாமல் தான் சசிகலாவுடன் உள்ள தனது உறவை ஜெயலலிதா முறித்துக்கொண்டார்.
 சசிகலா குடும்பத்தினர், தி.மு.க., பக்கம் செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், பிற பதவிகளில் இருந்தும், சசிகலா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார். மேலும், போயஸ் தோட்டத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இதோடு நிற்காமல், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுபவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்; பலர், வேறு வழியின்றி ராஜினாமாவும் செய்தனர். இதனால், ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள், இப்படியொரு நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பதை அறியாமல் இருந்திருக்கின்றனர்; அதனால், தற்போது புழுங்குகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு தேவை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். தங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்கும் பட்சத்தில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள, அரசியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் எனவும், சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர். இதற்காக, தி.மு.க.,வின் பக்கம் செல்லலாம் எனத் தெரிகிறது. தி.மு.க.,வும், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளது. "சசிகலா குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும், ஜெயலலிதாவும் பொறுப்பு தான். கட்சியில் பொதுச் செயலராகவும், அரசில் முதல்வராகவும் இருப்பவர் ஜெயலலிதா. அவருக்குத் தெரியாமல் தவறுகள் நடப்பது சாத்தியமில்லை' என, சசிகலா விவகாரம் பற்றி, தி.மு.க., கூறிவருகிறது. இதற்கிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன், தி.மு.க., ஆதரவு நிலையை எடுத்து வருகிறார்.
தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடராஜன், ""மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொண்டால்,
நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், யார் ஏசினாலும், தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும்,'' என பேசியுள்ளார். நடராஜன் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான், சசிகலா குடும்பத்தினர் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பது, அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்தது. மேலும், அ.தி.மு.க.,விலிருந்து தங்களை நீக்கியது, ஜாதி அடிப்படையிலானது; இதற்குப் பின்னணியில், ஜெ.,யின் ஜாதியினர் சிலர் இருக்கின்றனர் என, சசிகலா குடும்பத்தினர் நினைக்கின்றனர். எனவே, தி.மு.க., பக்கம் சசி குடும்பத்தினர் சாயலாம் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், அடுத்த பரபரப்பு திருப்பங்கள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: