ஞாயிறு, 7 ஜூன், 2026

கரப்பான் பூச்சி - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு லண்டனில் சாத்துப்படி

 தினமலர் : புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிர்க்பெக் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, நம் உச்ச நீதிமன்ற த லைமை நீதிபதியிடம், அவரது கரப்பான்பூச்சி கருத்து குறித்து சிலர் கேள்வி கேட்டதால் சர்ச்சை வெடித்தது.
கடும் கண்டனம் இந்த சம்பவத்திற்கு லண்டனில் உள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி, ஒரு வழக்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வாய்மொழியாக சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
அப்போது அவர், 'வேலையில்லாத இளைஞர்கள் சிலர், சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். கரப்பான்பூச்சிகள் போல சமூகத்தை சீரழிக்கின்றனர்' என, விமர்சித்து இருந்தார்.



அவரது இந்த கருத்து இளைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, 'போலி பட்டங்களை வைத்துக் கொண்டு, பதவி உயர்வு, சமூக அந்தஸ்து கோருபவர்களை மட்டுமே விமர்சித்தேன். ஒட்டுமொத்த இளைஞர்களையும் அல்ல' என, விளக்கம் அளித்து இருந்தார்.

தலைமை நீதிபதி சூர்ய காந்தின் ஒற்றை வார்த்தையை கையில் எடுத்த சமூக ஆர்வலர்கள் சிலர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் சமூக வலைதளத்தில் அரசியல் நையாண்டி இயக்கத்தை ஆரம்பித்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு லண்டனில் அவமதிப்பு: கரப்பான் விமர்சனம் குறித்து கேள்வி கேட்டதால் சர்ச்சை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு லண்டனில் அவமதிப்பு: கரப்பான் விமர்சனம் குறித்து கேள்வி கேட்டதால் சர்ச்சை

ராஜினாமா நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், 'நீட்' மற்றும் சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கையில் எடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், அங்குள்ள பிர்க்பெக் பல்கலையில், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அப்போது பார்வையாளர் பகுதியில் இருந்த சிலர், இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.

மேலும், தலைமை நீதிபதியின் கரப்பான்பூச்சி கருத்து குறித்தும் கேள்வி எழுப்பினர். இதனால், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு லண்டனில் உள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் என்பது சகஜமானது தான். ஆனால், அதை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

'பொது விவாதங்களின்போது குறைந்தபட்ச ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். கண்ணிய குறைவாக நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: