சனி, 10 மே, 2025

60 திமுக தொகுதி பொறுப்பாளர்களின் பலர் தொகுதிகளை ஒரு முறை கூட சென்று பார்க்கவே இல்லை? Stalin drastic action

 மின்னம்பலம் - Kavi :  , திமுக பொறுப்பாளர்கள் மீது ஸ்டாலின் எடுத்த ஆக்‌ஷன் செய்தியும், எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா செய்தியும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. Stalin drastic action
“தேர்தல் நெருங்கி வருவதால் திமுக 234 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்களை மாற்றியும் நீக்கியும் சில அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் தொகுதி பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
ஏற்கனவே அக்டோபர் மாதத்திலும் அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதத்திலும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் மேல் வந்த புகார்கள் அடிப்படையில் 40 பேரை மாற்றியும் நீக்கியும் நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

இத்தனை பேர் எதற்காக நீக்கப்பட்டுளார்கள் என்று விசாரித்ததில், 60 தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்களில், பலரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை ஒரு முறை கூட சென்று பார்க்கவே இல்லை, ஒன்றிய நகர நிர்வாகிகளை ஒரு முறைகூட சந்தித்து மீட்டிங் கூட போட வில்லை.

கிட்டத்தட்ட 40 பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்களிடம் மிகவும் நெருக்கம் காட்டியிருக்கின்றனர். சில பணபரிமாற்றங்கள் நடந்துள்ளன. ஏற்கனவே தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இப்படி புகார்கள் வந்ததால்தான், தொகுதி நிர்வாகிகளை நீக்கிவிடுவேன் என்று ஸ்டாலின் ஒரு எச்சரிக்கை கொடுத்தார். அந்த எச்சரிக்கை அடிப்படையில் தான் தற்போது 40 தொகுதி பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்” என்ற செய்தியை ஷேர் செய்தது வாட்ஸ்அப்.

அடுத்ததாக மெசென்ஜர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா குறித்து டைப் செய்தது

அதில், “மே 12 ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 73ஆவது பிறந்தநாள் வருகிறது. இந்த பிறந்தநாள் விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட அதிமுக மாவட்டம் மற்றும் மாநில செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதாவது, அதிமுகவின் தலைவர்களான எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இதுவரை எப்படி கொண்டாடப்பட்டதோ அதைவிட 10 மடங்கு அதிகமான கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.

இது குறித்து அதிமுக ஐடி விங் மாநில செயலாளர் ராஜ் சத்யன் ஒரு வாரத்துக்கு முன்பு ஜூம் மீட்டிங் ஒன்றை நடத்தினார். அதில் ஐடி விங்கை சேர்ந்த 82 மாவட்டச் செயலாளர்களும் 12 மண்டல செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த ஜூம் மீட்டிங்கில், ”ஒரு மாவட்டத்துக்கு 200 யூனிட் ரத்ததானம் கொடுக்க வேண்டும். அப்படி ரத்ததானம் கொடுப்பவர்களின் பெயர், ஊர், வயது, மெயில் ஐடி, தொடர்பு எண், குறிப்பாக வாட்ஸ் அப் எண் மற்றும் முழு முகவரி, என்ன பொறுப்பு என அனைத்தையும் ரத்ததானம் அளிப்பதற்கு முன்கூட்டியே தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என மாவட்ட செயலாளர்களுக்கும் மண்டல செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்

இப்படி ரத்ததானம் அளிப்பவர்களுக்கு கட்சி சார்பாக கிட் ஒன்று கொடுக்க இருக்கின்றனர். அதில் 15 ரூபாய் மதிப்புள்ள ஒரு பேப்பர் பேக், 3 ரூபாய் மதிப்புள்ள ஒரு தண்ணீர் பாட்டில், 22 ரூபாய் மதிப்புள்ள ஒஆர்எஸ். 5 ரூபாய் மதிப்புள்ள ஒரு பிஸ்கட் பாக்கெட். 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு ப்ரூட்டி. 10 ரூபாய் மதிப்புள்ள பழம் ஆகியவை இடம்பெறும்.

இந்த கொண்டாட்டம் தொடர்பாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள்மொழித்தேவன் கூறுகையில், “கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து இந்த பிறந்தநாளை கடந்த காலத்தைவிட சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தாங்களாவே முன்வந்துள்ளார்கள். என்னுடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடத்தவுள்ளோம், விருத்தாசலம் விருத்தீஸ்வரர் கோவிலில் 1000 பெண்கள் பால்குடம் எடுக்க போகிறார்கள். தொகுதியில 5000 பேருக்கு சைவ உணவு விருந்து வைக்க போகிறோம். இது இல்லாமல் அனைத்துத் தொகுதிகளிலும் மெடிக்கல் கேம்ப், அன்னதானம், ரத்ததானம் நலத்திட்ட உதவிகள், கோவில்களில் அபிஷேகம் செய்ய போகிறோம்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய ,நகர செயலாளர்கள் என அனைவரும் கிராமம் முதல் நகரம் வரை இந்த நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த ஏற்பாடுகள் எல்லாம், எடப்பாடியை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல… வரவிருக்கும் தேர்தலுக்கு அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் மக்கள் மனதில் இன்னும் அழுத்தமாக பதிய வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு மறைமுகமான பிரச்சாரமாக அதிமுகவினர் கையில் எடுத்திருக்கின்றனர் ” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆப் லைன் போனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: