செவ்வாய், 10 அக்டோபர், 2023

ராஜஸ்தான், தெலங்கானா, மபி, சட்டீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் தேதி நவ. 7 - 30 வரை வாக்குப்பதிவு

தினகரன் Karthik Yash : புதுடெல்லி: ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரியிலும்,
மிசோரம் மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் டிசம்பர் 17ம் தேதியுடனும் முடிவடைகிறது.
இதனால் இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரையிறுதி ஆட்டமாக இந்த 5 மாநில தேர்தல் கருதப்படுவதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.  மத்தியபிரதேசத்திலும், சட்டீஸ்கரிலும் பாஜ தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதே போல, 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான களப்பணிகளை தேர்தல் ஆணையமும் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தது.

தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியும், மத்தியபிரதேசத்தில் பாஜ ஆட்சியும், தெலங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமதி (பிஆர்எஸ்) ஆட்சியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) தலைமையிலான ஆட்சியும் நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் இரு தேர்தல் ஆணையர்கள், 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டனர். அதன்படி, ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம், மத்தியபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், நக்சல் பாதிப்புள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது: சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 7 முதல் 30ம் தேதி வரை தேர்தல் நடத்தப்படும். இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும். இந்தத் தேர்தலில் 16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள். மிசோரமில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். அன்றைய தினம் சட்டீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

மத்தியபிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும், சட்டீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெறும். ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளுக்கும் நவம்பர் 23ம் தேதியும், 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ம் தேதியும் தேர்தல் நடைபெறும். இந்த 5 மாநிலங்களிலும் 1.77 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். அதில் 1.01 லட்சம் வாக்குச் சாவடிகளில் வெப் காஸ்டிங் வசதி செய்யப்படும். 8,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடக்கும் கடைசி சட்டப்பேரவை தேர்தல் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வருவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படும்.

சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 8.2 கோடி ஆண் வாக்காளர்களும், 7.8 கோடி பெண் வாக்களர்களும் உள்ளனர். 60.2 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. தேர்தலை நியாயமாக நடத்த மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்டவிரோத மதுபானம், பணம், இலவசங்கள் மற்றும் போதைப் பொருட்கள் வருவதை தடுக்க மொத்தம் 940 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணபலத்தைப் தடுப்பதில் சகிப்புத்தன்மை இருக்காது. சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் மீது கடுமையான கண்காணிப்பு இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

* காஷ்மீரில் தேர்தல்?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது குறித்த கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ‘‘ஜம்மு காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்’’ என்றார்.

5 மாநில தேர்தல் அட்டவணை 2023
கட்டம் மனு தாக்கல் வாக்குப்பதிவு
சட்டீஸ்கர் 1 20 அக்டோபர் 07 நவம்பர்
2 30 அக்டோபர் 17 நவம்பர்
ம.பி. 30 அக்டோபர் 17 நவம்பர்
மிசோரம் 20 அக்டோபர் 07 நவம்பர்
ராஜஸ்தான் 06 நவம்பர் 23 நவம்பர்
தெலங்கானா 10 நவம்பர் 30 நவம்பர்
5 மாநில வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் 3

* இலவச அறிவிப்புகள் பற்றி தேர்தல் ஆணையர் கருத்து
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதில் முடிவு கிடைத்ததும், அதன்படி தேர்தல் ஆணையம் செயல்படும். தேர்தல் வாக்குறுதிகளை அளிக்க அரசியல் கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் அதைப் பற்றி 5 ஆண்டு ஆட்சியில் இருக்கும் போது ஏன் நினைவுக்கு வருவதில்லை? தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்போ 15 நாட்களுக்கு முன்போ எல்லா அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன. இதுபோன்ற தேர்தல் சலுகைகளை செயல்படுத்துவதும், இந்த நடைமுறையை நிறுத்துவதும் கூட தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு சிரமமான ஒன்றாகும்’’ என்றார்.

* பாஜ, கூட்டணிக்கு
பிரியாவிடை தேர்தல்
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்புடன், பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பிரியாவிடையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி வலுவுடன் மக்களை சந்திக்கும். மக்கள் நலன், சமூக நீதி மற்றும் முற்போக்கான வளர்ச்சி ஆகியவை காங்கிரசின் உத்தரவாதம்’’ என்றார்.

* 5 மாநிலத்திலும்
பாஜ ஆட்சி
தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 5 மாநிலத்திலும் பாஜ பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அடுத்த 5 ஆண்டுகள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயல்படும்’’ என்றார்.

* 2018 முடிவுகள் ஒரு பார்வை
ராஜஸ்தான்
மொத்த தொகுதி 200
காங். கூட்டணி 101
பாஜ 73
பகுஜன் சமாஜ் 6
மற்றவை 20

* சட்டீஸ்கர்
மொத்த தொகுதி 90
காங்கிரஸ் 68
பாஜ 15
ஜேசிசி 5
பகுஜன் சமாஜ் 2

* மத்தியபிரதேசம்
மொத்த தொகுதி 230
காங்கிரஸ் 114
பாஜ 109
பகுஜன் சமாஜ் 2
சமாஜ்வாடி 1
சுயேச்சை 4

* தெலங்கானா
மொத்த தொகுதி 119
பிஆர்எஸ் 88
காங்கிரஸ் 19
ஏஐஎம்ஐஎம் 7
தெலுங்கு தேசம் 2
பாஜ 1
மற்றவை 2

* மிசோரம்
மொத்த தொகுதி 40
மிசோ தேசிய முன்னணி 26
காங்கிரஸ் 5
பாஜ 1
சோரம் மக்கள் இயக்கம் 8

* யார் கை ஓங்கும்?
நாளுக்கு நாள் பலம் அதிகரித்து வரும் இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரசுக்கு இந்த 5 மாநில தேர்தல் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க, 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பக்கபலமாக இருக்கப் போகிறது. மேலும் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பையும் பெற இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரசின் வெற்றி முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதே போல, மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் பிரதமர் மோடிக்கு இந்த 5 மாநில தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் பாஜ, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மபியில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் காங்கிரசுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் வலுவானதாகவே உள்ளது. தெலங்கானாவை பொறுத்த வரையில், பிஆர்எஸ் கட்சிக்கு முக்கிய போட்டியாக காங்கிரஸ் கருதப்படுகிறது. மிசோரமை பொறுத்த வரையில் பிராந்திய கட்சிகளுக்கு போட்டியாக காங்கிரசும், பாஜவும் களம் காண்கின்றன. மணிப்பூர் வன்முறை சம்பவம் மிசோரம் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மிசோரமில் பாஜவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

* 3 மாநிலத்தில் ஆம் ஆத்மி
5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் ஆம் ஆத்மி போட்டியிட தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் நேற்று அறிவித்துள்ளார். விரைவில் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்றுள்ள நிலையில், காங்கிரசை எதிர்த்து ராஜஸ்தான், சட்டீஸ்கரில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: