ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

மொராக்கோ நிலநடுக்கம்: 1,037 பேர் பலி; ஆயிரங்களைத் தொடும் என அச்சம் - என்ன நடக்கிறது? -

bbc.com  வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1,037 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மரக்கேஷ் மற்றும் தெற்கில் பல பகுதிகளில் மக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொராக்கோவில் நிலநடுக்கம்

பலி எண்ணிக்கை ஆயிரங்களைத் தொடும் அபாயம்
அடிப்படையில் மொராக்கோ இத்தகைய நிலநடுக்கம் நிகழும் இடம் அல்ல. கண்டங்களைச் சுமந்து நகரும் கண்டத்தட்டுகள் இடையே மோதல் நிகழும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.

பெரும்பாலும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களைச் சுமந்து நகரும் கண்டத்தட்டுகளுக்கு இடையே மோதல் நடக்கும்போதுதான் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இத்தாலி, கிரீஸ், துருக்கி ஆகிய பகுதிகளில்தான் பெரும்பாலான நிலநடுக்க நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த நிலநடுக்கம் அட்லஸ் மலைத்தொடரைத் தொடர்ந்து மேல்நோக்கித் தள்ளும் உந்துதலுடன் தொடர்புடையதாக இருக்கும்.

வரலாற்று அடிப்படையில், 1900ஆம் ஆண்டுக்கு முன்பு வெள்ளிக்கிழமை இரவு நடந்த நிலநடுக்கத்தில் இருந்து 500கி.மீ தொலைவில் 6.0 அளவைவிடப் பெரிய நிலநடுக்கம் எதுவும் பதிவாகவில்லை.

இத்தகைய தன்மை விளைவுகளை ஏற்படுத்துகிறது. மக்களிடையே நிலநடுக்கம் பற்றிய நினைவுகள் குறைவாக இருக்கும். தயார்நிலை நடவடிக்கைகளும் குறைவாக இருக்கும். இடிந்து விழும் கட்டடங்களுக்குள் மக்கள் அதிகமாக இருப்பதால், இரவில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பெரியளவிலான பலி எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு ஏற்பட்டது. அப்போது பெரும்பாலான மக்கள் தொகை உறக்கத்தில் இருக்கும்.

அமெரிக்க நிலவியல் ஆய்வகம், மரணங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளின் சாத்தியமான அளவை மதிப்பிடும் மாதிரியை வைத்துள்ளது. அதன் பகுப்பாய்வுப்படி, இந்த நிகழ்வில் பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்து குறைந்தது ஆயிரங்களில் இருக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பலி எண்ணிக்கை உயர்வுக்கு நாம் தயாராக வேண்டும். நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளையும் நாம் கவனிக்க வேண்டும். முதல் அதிர்வைவிட ஓரளவுக்குக் குறைவாக இருக்கும் மற்றொன்றை எதிர்பார்க்கலாம். ஆனால், சிறிய நில அதிர்வுகள் கூட ஏற்கெனவே சேதமடைந்த கட்டடங்களை மேலும் சாய்க்கும் ஆபத்து நிலவுகிறது.

மீட்புப் பணிகள் ஏன் கடினம்?
நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அட்லஸ் மலைத்தொடரில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு செல்வதில் பெரும் சிரமம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக பழைய கட்டடங்களால் ஆன கிராமங்களுக்கு மீட்புப் படையினர் செல்ல சில நாட்கள் ஆகலாம்.

மொராக்கோ கடற்கரையில் உள்ள கேனரி தீவுகள் மற்றும் அதன் கிழக்கு அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள மக்கள் கூட நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறுகிறார்கள்.

அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மராகேஷின் தெருக்களில் தப்பிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கின்றன.

நகரின் பழமையான சுவர்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் சமூக ஊடகத்தில் நிலநடுக்கம் தொடர்பாக உறுதிப்படுத்தாத வீடியோ கிளிப்புகள் காணப்படுகின்றன. அதில், சேதமடைந்த கட்டிடங்கள், கட்டிடங்கள் குலுங்குவது, இடிபாடுகளுடன் கூடிய தெருக்கள் இடம்பெற்றுள்ளன.

மக்கள் அச்சத்துடன் ஓடி வருவது, சிலர் கட்டிடங்கள் இடிந்ததால் எழுந்த புழுதிக்கு மத்தியில் நடப்பது போன்ற வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எனினும் இவை எந்த பகுதியில் எடுக்கப்பட்டவை என்பதை பிபிசி உறுதிப்படுத்தவில்லை.

மராகேஷில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துவிட்டன என்று அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

நிலநடுக்கம் காரணம் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

"நாங்கள் மிகவும் கடுமையான நடுக்கத்தை உணர்ந்தோம். நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் இருந்தனர். குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், பெற்றோர்கள் கலக்கமடைந்தனர்" என்று அப்தெல்ஹாக் எல் அம்ரானி என்பவர் AFP செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட 10 நிமிடங்களில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடலோர நகரங்களான ரபாட், காசா பிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது
தலைவர்கள் இரங்கல்

மொராக்கோ நிலநலடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இந்தியப் பிரதமர் மோதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மொரோக்கோவில் ஏராளமானோர் இறந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: