புதன், 18 ஜனவரி, 2023

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனை... 12 கேள்விகளுக்கு பதிலளித்த ரௌடிகள்!

Vikatan - எஸ்.மகேஷ் : அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். ஆனால், குற்றவாளிகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால், தன்னுடைய கணவர் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராமஜெயத்தின் மனைவி லதா. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ-யும் விசாரித்தது. ஆனால், குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை.
தம்பி ராமஜெயம் படத்துக்கு மலர் தூவும் அமைச்சர் கே.என்.நேரு

தம்பி ராமஜெயம் படத்துக்கு மலர் தூவும் அமைச்சர் கே.என்.நேரு

இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால், இந்த வழக்கு மீண்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வசம் சென்றது. எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் திருச்சி ராமஜெயத்தின் கொலை வழக்கை விசாரித்துவருகிறார்கள்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை ஆய்வுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், புதிய கோணத்திலும் விசாரணை செய்துவருகிறார்கள். கொலை நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், குற்றவாளிகளைப் பிடிக்க உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவுசெய்தனர். அதன்படி திருச்சி ராமஜெயம் கொலைசெய்யப்பட்ட காலகட்டத்தில் கோலோச்சிய பிரபலமான ரௌடிகளில் 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தத் திட்டமிட்டப்பட்டது. அதற்கான அனுமதியையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றனர்.

இதையடுத்து சென்னையிலுள்ள தடய அறிவியல்துறையில் உண்மை கண்டறியும் சோதனை இன்று (18.1.2023) நடத்தப்பட்டது. இதில் ரௌடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர். மோகன்ராமின் வழக்கறிஞர் ஆனந்தன், நரைமுடி கணேசனின் வழக்கறிஞர் புகழேந்தி, தினேஷின் வழக்கறிஞர் வில்லியம்ஸ் ஆகியோர் சோதனையின்போது உடனிருந்தனர். திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போலீஸார் தயாரித்துக் கொடுத்த கேள்விகள் உண்மை கண்டறியும் சோதனைக்குட்படுத்தப்பட்டவர்களிடம் கேட்கப்பட்டன. அப்போது, அவர்கள் அளிக்கும் பதிலில் உண்மை இருக்கிறதா இல்லை பொய் சொல்கிறார்களா என்பதைக் கண்டறிய சம்பந்தப்பட்டவர்களின் இதய துடிப்பை பல்ஸ் மூலம் கண்காணித்த நிபுணர்கள், அதை அறிக்கையாக சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் சமர்பிக்கவிருக்கின்றனர்.

Also Read

வழக்கறிஞர் புகழேந்தி

வழக்கறிஞர் புகழேந்தி

இது குறித்து வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகரிடம் பேசினோம். ``இந்தச் சோதனைக்குட்படுத்தப்படுபவர்கள் உண்மை சொல்கிறார்களா அல்லது பொய் சொல்கிறார்களா என்பதை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதை வைத்து இந்த வழக்கில் பெயரளவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ராமஜெயம் எதற்காகக் கொலைசெய்யப்பட்டார் என்ற கேள்விக்கு இதுவரை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் பதில் இல்லை. ஏனென்றால், ராமஜெயம் கொலைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவர் எப்போது இறந்தார் என்பதிலும் சில குழப்பங்கள் இருக்கின்றன. உண்மை கண்டறியும் சோதனை முடிவுக்குப் பிறகு இந்த வழக்கில் போலீஸார் சமர்ப்பிக்கும் அறிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என்றார்.

மோகன்ராம் தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``உண்மை கண்டறியும் சோதனையில் 12 கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டன. பொதுவாக உண்மை கண்டறியும் சோதனைக்குட்படுத்தப்படுபவர்கள், நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதன்படி மோகன்ராம் உட்பட நான்கு பேரும் சம்மதம் தெரிவித்ததால், சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனையின்போது, `ராமஜெயம் கடத்தப்பட்டபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?' , `அவரின் மோதிரத்தை நீங்கள் எடுத்தீர்களா?' போன்ற கேள்விகளை ஐந்து நிமிட இடைவெளியில் கேட்டு அதற்கு அளித்த பதிலையும் பதிவுசெய்துகொண்டனர்" என்றார்.

கருத்துகள் இல்லை: