ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

Boney M பாப்'(pop) டிஸ்கோ (disco) காலத்தில் உச்சம் பெற்ற இசைக்குழுவினர்,

 Siva Ilango  :   புல்லரிக்கும் இசை தந்த போனி எம் குழுவினர்
'பாப்'(pop) இசையும், டிஸ்கோ (disco) நடனமும் உலகில் உச்சம் பெற்றிருந்த காலத்தில், அவற்றின் முடிசூடா மன்னர் என்ற முதல் இடத்தைப் பெற்றவர்கள் போனி எம் ( Boney M) குழுவினர்.
இன்னிசை நால்வராக வலம் வந்த பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவின் காலத்திற்கும், இனவெறி வெறுத்த இசைவாணன் மைக்கேல் ஜாக்சன் (Michael Jackson) காலத்திற்கும் இடைப்பட்ட இந்தக் குழுவினர்,
அப்பா (ABBA), பீகீஸ் (Bee Gees) குழுவினரின் சமகாலத்தவர்கள்.
நான்கு பேர் கொண்ட இந்த ஐரோப்பிய -  கரீபியன் குழுவை 1975 ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்து உருவாக்கியவர்,
பிரான்க் பரியன் என்ற ஜெர்மானியர்.


பாப் இசையும், டிஸ்கோ நடனமும் புகழ்பெற்றிருந்த 1970களில் இக்குழுவினர் இரண்டிலும் புகழ் பெற்றனர். இவர்களது மூன்றாவது இசைத் தொகுப்பான 'வெள்ளிக் கிரகத்துக்கு விமானம்' என்ற பொருள் தரக்கூடிய 'நைட் பிளைட் டு வீனஸ்' (Night flight to Venus) ஆல்பம் 1978 ஆம் ஆண்டில் வெளியாகி உலகப் புகழ் அடைந்தது.

ஐரோப்பாக் கண்டம் அனைத்திலும், ஸ்காண்டினேவியா, கனடா போன்ற பிற மேற்கத்திய நாடுகளிலும் கோடிக்கணக்கில் இவர்களது இசைத் தொகுப்புகள் விற்றுத் தீர்ந்தன.
மேற்கத்திய இசையையும், இசைக் கருவிகளையும் கொண்டு, அப்படி ஒரு மெய்சிலிர்க்கும் இசையைப் படைத்தளித்த இக்குழுவினர், 1970களின் இறுதியில் உலகின் தலைசிறந்த இசை, நடனக் குழுவாக உலக நாடுகளில் வலம் வந்து, மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். 1980 ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த இசைத் தொகுப்பாக, கனடாவின் ஜூனோ விருதை இக்குழு தட்டிச்சென்றது. 1988 ஆம் ஆண்டில் சட்ட ரீதியாகப் பிரிந்து விட்ட இக் குழுவின் தலைவியான லிஜ் மிசேல் (Liz Mitchell) மட்டும் இப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவ்வாண்டு இறுதியில் முதன்முதலாக அவர் இந்தியாவுக்கும் வர உள்ளார்.
இருபது பாடல்கள் கொண்ட நைட் பிளைட் டூ வீனஸ் என்ற இசைத் தொகுப்பில் ரஸ்புடின் (Rasputin) என்ற பாடல் எல்லாவற்றையும் விடப் புகழ் அடைந்தது.

ரஸ்புடின் ஒரு மனிதர்.  ரஷ்யாவின் ஜார் வம்சத்துக் கடைசி மன்னரான இரண்டாம் நிக்கோலசின் ஆலோசகராக இருந்தவர். ரஷ்யாவின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, அந்நாளில் கிறித்துவ மத குருமார்களுக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு, தன்னை ஒரு புனிதராகத் தானே அறிவித்துக் கொண்டு, மன்னர் குடும்பத்தின் நண்பரானார்.
தங்கள் மகனுக்கு ஏற்பட்ட இரத்தக்கசிவு நோயை குணப்படுத்த வேண்டிக்கொண்ட அரச தம்பதியருக்கு, வாக்குறுதி கொடுத்துத், தன் செல்வாக்கை ராஜகுரு அளவில் உயர்த்திக் கொண்டார். நெடிய உருவமும், பருத்த உடலும், காந்தக் கண்களும் கொண்ட ரஸ்புடினின் மீது ரஷ்யப் பெண்களுக்கு அளவிறந்த காதல். அரசியும் மயங்கினார்.
மன்னர் அதிகாரம் மதகுருவிடம் செல்வதைக் கண்ட மன்னரின் உறவினர்களும், நண்பர்களும் தீவிரமாக ஆலோசித்து ஒரு முடிவு எடுத்தனர். ரஸ்புடினைக் கொல்வதுதான் அந்த முடிவு. ஆனால் அது அவ்வளவு எளிதில் நடைபெறவில்லை. வயிற்றில் வாளால் செருகினர். ஆனால் பிழைத்துக் கொண்டார். கேக்கில் சயனைடு தூவி வைத்தனர். சாப்பிட்டும் சாயவில்லை. ஒயின் என்னும் மதுவில் நஞ்சு கலந்து கொடுத்தனர். கோப்பை, கோப்பை யாக அருந்தினாரே தவிர கொஞ்சமும் மயங்கவில்லை. இறுதியாகத் துப்பாக்கியால் சுட்டனர். விழுந்து கிடந்த அவர், சிறிது நேரத்தில் மீண்டும் எழுந்து தாக்கத் தொடங்கினார். மேலும் இரு குண்டுகள் பாய்ந்தன. ரஸ்புடின் வீழ்ந்தாலும் நம்பாமல், சாக்கில் கட்டி ஆற்றில் கொண்டு வீசினர். இறுதியாக ரஸ்புடின் அலை ஓய்ந்தது.

பின்னர் ரஷ்யாவில் ஜார் மன்னர்களின் அலையும் ஓய்ந்துத் தொழிலாளர்களின் சர்வாதிகாரம் தலை எடுத்தது. பாரம்பரியமாக அதிகாரம் பெற்றிருந்த மன்னர்கள் காலத்தில், ஒரு சாதாரணக் குடிமகன், மத வழியில் அதிகாரத்தை வளைக்க முடியும் என்று ரஷ்யப் புரட்சிக்கு முன் நிரூபித்தவர் தான் ரஸ்புடின்.
தான் இறக்கும் வரையில், ரஷ்ய மன்னர் பரம்பரைக்கும், மக்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய ரஸ்புடின் என்னும் மதகுருவின் வரலாறு உலக நாடுகளுக்குப் பாடமாக அமைந்தது.
அதை விவரிக்கும் பாடல் தான் போனி எம் குழுவினர் பாடிய ரஸ்புடின் பாடல். ரஸ்புடின் இசை வடிவிலும், நடன வடிவிலும் மீண்டும் மேடையில் தோன்றி மக்களை மயக்கினார். அச்சுறுத்தவும் செய்தார். உலகம் முழுவதும் ரஸ்புடினுக்கு ரசிகர்கள் தோன்றினர்.
மதகுருவாக ரஸ்புடின் பெற்ற அங்கீகாரத்தை விட, இசையால் அவர் பெற்ற புகழ் உலக மக்களை மயக்கியது. அதற்குக் காரணமாக அமைந்த போனி எம்மின் மூன்றாவது இசைத்தொகுப்பு 42 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (28. 8. 1978) வெளியிடப்பட்டது.
 
இந்திய அளவிலும் போனி எம் குழுவினரின் இசையும், ரஸ்புடின் பாடலும் மிகப் பிரபலமானவை. ரஸ்புடின் இசைப் பாடலின் மெட்டுகள் தமிழ், இந்தி உட்படப் பல மொழிகளின் திரை இசையிலும் கலந்தன. திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் இசைக்கப்படுகின்றன. இந்திய ராணுவமும் ரஸ்புடின் பாடல் இசையைத் தன் நிகழ்ச்சிகளில் இசைத்து வருகிறது. போனி எம் தந்த இசைப் பிச்சையால், எத்தனை முயன்றும் ரஸ்புடினைச் சாகடிக்கவே முடியவில்லை.
முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி

கருத்துகள் இல்லை: