நக்கீரன் : அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கு புதிய பெயர் சூட்டி செப் 5ல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் 18ம் தேதி தமிழக அரசு 2022- 2023ம் ஆண்டுக்காக தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்காக 698 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதன் படி இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்ற பெயர்சூட்டி உள்ள தமிழக அரசு செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்படவுள்ள இந்த திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கிவைக்க உள்ளார்.
முதல்கட்டமாக 1 லட்சம் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதற்கான அழைப்பிதழை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக