புதன், 24 பிப்ரவரி, 2021

சசிகலாவை நேரில் சந்தித்த சீமான், அமீர், பாரதிராஜா, சரத்குமார் ...

tamil.news18.com :சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, கொரோனா சிகிச்சைக்குப் பின் பிப்ரவரி 9-ம் தேதி சென்னை திரும்பினார். ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் சசிகலாவின் விடுதலை தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியது.

சசிகலாவின் அடுத்தகட்ட மூவ் எப்படியிருக்கும் என அரசியல் கட்சியினர் தொடங்கி பொதுமக்கள் வரை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க தி.நகரில் உள்ள தனது வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்தார் சசிகலா. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தன்னை நேசிக்கும் தொண்டர்களிடமும் ஊடகங்கள் மத்தியிலும் பேசியுள்ளார் சசிகலா.
அவர் பேசியதாவது, “என்னுடைய அக்கா புரட்சித்தலைவியின் 73-வது பிறந்த நாள் அன்று வந்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவில் இருந்த போது தமிழக மக்கள் கழக உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலால் நான் நலம் பெற்று தமிழகம் வந்துள்ளேன். அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


திமுக தான் நமக்கு எதிரி அவர்களை வீழ்த்த சபதம் ஏற்றுக் கொள்வோம். தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி தொடர வேண்டும் என்று புரட்சித்தலைவி கூறிச் சென்றுள்ளார். அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நானும் உங்களுக்கு துணை இருப்பேன். விரைவில் தொண்டர்களை பொதுமக்களையும் சந்திக்க வருவேன்” இவ்வாறு பேசினார் சசிகலா.

அதேவேளை சசிகலாவை சந்திக்க அரசியல் கட்சித் தலைவர்களின் கார்களும் தி.நகர் நோக்கி திரும்பியுள்ளன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து பேசினர். சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின் ஊடகங்களிடம் பேசிய பாரதிராஜா, “தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவே சசிகலா வந்துள்ளார். சசிகலா எனும் சாதனை தமிழச்சியை பார்க்க வந்தேன்.” என்றார்.




அதேபோல் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “10 ஆண்டுகாலமாக அதிமுக கூட்டணியில் இருக்கும் நாங்கள் ஒவ்வொரு முறை ஜெயலலிதாவை சந்திக்கும்போதும் சசிகலாவை சந்திப்போம். ஒரு குடும்பம் போல் பழகி இருக்கிறோம். அவரிடம் உடல்நலம் விசாரிக்கவே வந்தோம். நன்றி மறப்பது நன்றன்று. நன்றி மறவாமல் அவரை சந்தித்து நலம் விசாரித்தோம். ஒன்று இரண்டு இடங்கள் தரும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன்” என்றார்.

திமுகதான் நமது எதிரி. அவர்களை வீழ்த்த கழக உடன்பிறப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்திருப்பது அமமுகவுக்குத் தான் அதிமுகவுக்கு பொருந்தாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தாலும் அரசியல் களத்தில் சசிகலாவின் பேச்சு பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: