ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

புதுச்சேரி: `ஒரே நாளில் இரண்டு விக்கெட்!’ - எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவால் காங்கிரஸ் அதிர்ச்சி

நாராயணசாமி
vikatan.com ஜெ.முருகன் : புதுச்சேரி அரசு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த நிலையில், இன்று காங்கிரஸ் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக 2 அமைச்சர்களும், 2 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் பலம் 14-14 என்ற விகிதத்தில் சமமான நிலை ஏற்பட்டது. அதையடுத்து பிப்ரவரி 15-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமயில் கூடிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ ராஜினாமா
லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ ராஜினாமா

தொடர்ந்து, ``காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். போதிய எம்.எல்.ஏ-க்களின் பலம் இல்லாததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. அதனால், காங்கிரஸ் அரசு தானாக முன்வந்து பதவி விலக வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமியும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இந்த அரசும் பதவி விலக வேண்டும். இந்த அரசு பதவி விலகாவிட்டால் எதிர்கட்சியினர் விவாதித்து முடிவெடுப்போம். ஒரு நிமிடம் கூட இந்த அரசு நீடிக்க முடியாது” என்று கூறியதுடன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அலுவலகத்தில் இரண்டு முறை மனு அளித்திருந்தனர்.

அதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநரக பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜன், பிப்ரவரி 22-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அன்றய தினம் மாலை 5 மணிக்குள் அதற்கான வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பணிகள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், முதல்வரின் நாடாளுமன்ற ச்செயலருமான லட்சுமி நாராயணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியுடன், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்தார்.

அதேபோல காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் தி.மு.க-வைச் சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதியின் எம்.எல்.ஏ வெங்கடேசனும் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம், தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் பலம் 12 ஆகக் குறைந்திருக்கிறது. மேலும், தொடர்ச்சியாக ராஜினாமா செய்யும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை கூடும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். நெருக்கடி அதிகரிப்பதால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை இன்றோ அல்லது நாளையோ ராஜினாமா செய்யலாம் என்றும் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்

கருத்துகள் இல்லை: