வழக்கமாக அரசியல்வாதிகள் போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டால், எதிர்க்கட்சியின் சதி எனக் கூறுவது வழக்கம். அதற்கான வாய்ப்புகளும் அதிகம். பமீலாவோ தன் கட்சி சக நிர்வாகியான ராகேஷ் சிங் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். பாஜகவின் மாநிலக் குழு உறுப்பினரான ராகேஷ் சிங்தான் தன் மீதான வழக்குக்கு பின்னணிக் காரணம் என்பது பமீலாவின் குற்றச்சாட்டு.
மேற்குவங்க பாஜக தலைவர்களுக்கு இந்த விவகாரத்தால் இரண்டு வகையில் தலையிடி.. இளைஞரணி நிர்வாகி போதைப்பொருள் வழக்கில் மாட்டிக்கொண்டார் என்பதைப் பார்ப்பதா அல்லது கட்சியின் இன்னொரு பிரபலத்தின் மீதே பமீலா குற்றம்சாட்டியிருப்பதற்கு விளக்கம் அளிப்பதா என அவர்கள் திகைத்துநிற்கிறார்கள்.குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ராகேஷ் சிங்கோ, பமீலா மீது பதிலுக்கு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். சில நாள்களுக்கு முன்னர் முக்கிய தலைவர்களான பார்தி கோஷ், ஸ்வபந்தாஸ் குப்தா ஆகியோர் மீதே போலீசில் புகார் செய்தவர்தான், பமீலா, பமீலாவின் தந்தையே தன் மகள் மீது புகார் தந்திருக்கிறார்; என் மீது அவர் புகார் கூறலாம்; ஆனால் அதை நிரூபிக்கவேண்டும் அல்லவா? என்று விளக்கம் அளித்திருக்கிறார், ராகேஷ்.
மாநிலமே இதை பரபரப்பாகப் பேசிவந்தாலும், ராகேசுக்கு நெருக்கமானவரான பாஜகவின் மாநிலப் பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியா, இந்த விவகாரத்தில் வாய்திறக்காமல் இருந்துவருகிறார்.
எதிர்க்கேள்விகளுக்கு விளக்கமளிக்க முன்வராத மாநில பாஜக நிர்வாகிகள், சட்டப்படி பார்த்துக்கொள்வோம் என்கிறபடி பதிலளித்து சமாளிக்கிறார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க மம்தாவின் திரிணமூல் காங்கிரசிலிருந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என வரிசைகட்டி, பாஜகவுக்குத் தாவிவரும் நிலையில், இந்தக் கைதின் உண்மையான காரணம் என்ன எனும் கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அரசியல்வாதிகளைப் போலவே திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள், விளையாட்டு வீரர்களையும் பாஜக தன் பக்கம் இழுத்துப்போட்டுவருகிறது. ஆனால் நடிகையும் மாடலுமான பமீலா இவர்களுக்கு முன்னதாக 2019ஆம் ஆண்டிலேயே பாஜகவில் இணைந்துவிட்டார். முக்கிய பிரபலமான பமீலாவுக்கு, கடந்த மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற நேதாஜியின் 125ஆவது ஆண்டு விழாவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது; அதை பாஜக மூத்த நிர்வாகிகள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. உள்குத்தா வெளிக்குத்தா இந்த விவகாரம் என்பதே இப்போதைய கேள்வி!
–பாலசிங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக