சனி, 27 பிப்ரவரி, 2021

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு
maalaimalar :தொகுதி பங்கீட்டை அறிவித்த தலைவர்கள்

சென்னை:தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது...ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். 

விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது... இந்நிலையில், அதிமுக - பாமக இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் பாமக போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையொப்பமிட்டனர்.


பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். போட்டியிடும் தொகுதிகள் பின்னர் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என கூறினார்.

இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவுடன் பாமக இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: