keetru.com :தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சியில் நாடார் சமூகம் சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சியைப் பிராமணர்கள் ஆட்சி என்றே குறிப்பிடுவர். காரணம் நாயக்கர்களின் தளவாய்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தனர். எனவே நாயக்கர் ஆட்சியில் பிராமணர்கள் அளவற்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர். பிராமணர்களின் ஆலோசனைப்படியே ஆட்சி நடைபெற்றது.
நாடார் சமூதாய மக்களுக்கு எதிராகப் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக நாடார் சமூக மக்களிடம் உணவு உண்ணக்கூடாது. அவர்தம் நன்மை தீமை காரியங்களுக்குப் புரோகிதர் செல்லக்கூடாது. அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது, காலணிகள் அணியக்கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக் கூடாது. அவர்களின் வீடுகள் ஒரு அடுக்குக்குமேல் இருக்கக்கூடாது. பசுக்களிடம் பால் கறக்கக்கூடாது, உயர்ந்த சாதிப் பெண்களைப் போன்று நாடார் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துச் செல்லக்கூடாது, மேலாடை அணியக்கூடாது எனப் பல தடைகளை விதித்திருந்தனர்.
இப்படிக் காலங்காலமாய் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்திலிருந்து ஆறுமுகனேரி எஸ். பொன்னப்ப நாடார், விடுகப்பட்டி என்.எஸ். மாணிக்கவாசக நாடார், தூத்துக்குடி ஏ.சி. பால்நாடார், பட்டிவீரன்பட்டி டபிள்யூ. பி.ஏ. மாரிமுத்து நாடார், சிவகாசி ஆறுமுகநாடார், திருநெல்வேலி சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள் நாடார் சமூக மக்கள் மேம்பட முன்வந்தனர் என்றாலும் நாடார் சமூகத்தின் சார்பில் முதன் முதல் சென்னை சட்ட மன்றத்தில் இடம்பெற்று சட்டரீதியாகப் பாடுபட்டவர் ஊ.பு.அ. சௌந்திரபாண்டியன் அவர்களே.
1920 ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்கு முதன்முதல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி ஆற்றல் வாய்ந்த பார்ப்பனர்களே நிறைந்திருந்த ஹோம்ரூல் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு 98 இடங்களில் 63 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்து நீதிக்கட்சியின் பரிந்துரையின்படி கவர்னர் வெல்லிங்டன் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் அவர்களைச் சட்டமன்றத்தில் உறுப்பினராக நியமனம் செய்தார்.
“ஆண்டநாள் ஆண்டுமாண்ட செந்தமிழ்ப் பாண்டியன்
மீண்டது போல் நீதிக்கட்சியின் உறுப்பினராகச்
சட்டமன்றத்தில் பாண்டியன் தன் பணியைத்
தொடங்கினார்''
என்று குறிப்பிடுவார் பேரா. பு. இராசதுரை
சௌந்திரபாண்டியன் தொடர்ந்து 12 ஆண்டுகள் சட்டமன்றத்தில் நீதிக்கட்சி உறுப்பினராகச் செயல்பட்டார். டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையின்போது, இவர் ஆளும்கட்சியின் சட்டமன்றக் கொறடாவாகப் பதவிவகித்து அமைச்சரவை தொடர வழி வகுத்தார்.
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் மதுரை மாவட்டத்தில் (தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்) பட்டிவீரன் பட்டியில் அய்ய நாடார் – சின்னம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாகச் சௌந்திரபாண்டியன் பிறந்தார். தொடக்கக் கல்வியை தன்னுடைய வீட்டிலும், மேல்நிலைக் கல்வியை மதுரையிலும் கலை இளையர் கல்வியைச் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் பயின்றார்.
சௌந்திரபாண்டியன் திராவிட இயக்கங்களான சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டார். பல பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். குறிப்பாகத் தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டார். நாடார் சமூகத்தில் அரசியலில் ஈடுபட்டுத் தலைவராக முதன் முதல் உயர்ந்தவர் சௌந்திரப்பாண்டியனார் அவர்களே.
1921 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 4 ஆம் நாள் சென்னை சட்டமன்றத்தில் “தாழ்த்தப்பட்டவர்கள் பொதுச்சாலைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை செய்வோரைத் தண்டிக்க வேண்டும்'' என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அரசின் கவனத்தை ஈர்த்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார். இத்தீர்மானத்தின் மீது பல தலைவர்களைப் பல மணிநேரம் உரையாடும் நிலையை உருவாக்கினார். இறுதியில் அமைச்சர் ராமராய நிங்கார் (பனகல் அரசர்) அவர்கள் தடை செய்வோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார்.
1925 ஆம்ஆண்டு மே திங்கள் 2 ஆம் நாள் “குடிஅரசு'' எனும் தமிழ் இதழைத் தந்தை பெரியார் தொடங்கினார். இயக்கத்துக்கு ஆங்கில இதழ் வேண்டும் என உணர்ந்து "ரிவோல்ட்' எனும் இதழ் 1928 நவம்பர் திங்கள் 7 ஆம் நாள் ஈரோட்டில் சௌந்திரபாண்டினார் தலைமையில் வெளியிடப்பட்டது.
1928 முதல் 1930 வரை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக இருந்தபோது பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யத் தடை இருந்ததைக் கண்டித்ததோடு தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யத் தடைசெய்யும் பேருந்துகளின் உரிமம் பறிக்கப்படும் என ஆணை பிறப்பித்துத் தாழ்த்தப்பட்டோரும் சமமாகப் பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகுத்தார்.
1929 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17, 18 நாட்களில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிற்குச் சௌந்திரபாண்டியனார் தலைமை தாங்கினார். தலைவரை முன்மொழிந்து பெரியார் ஆற்றிய உரையில்
“நம்முடைய மாநாட்டுக்குத் தலைவராக இருக்கிற திரு நாடாரவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அதிகமாக எடுத்துச் சொல்ல முன்வருவது, பகலில் சூரியனைக் காட்டுறதுக்குத் தீவட்டி பிடித்தது போலாகும், அவர் இரண்டாவது தடவை நம்முடைய சென்னை மாகாணச் சட்டசபைக்குப் பொதுமக்கள் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டார். அது மாத்திரமல்லாமல் நம்முடைய அரசாங்கத்தை நடத்தும் கவர்மெண்டாகிய மந்திரி கட்சியாருடைய முக்கிய அங்கத்தினர் அவரே. பெரிய தனவந்தர், இவைகளெல்லாம் போதுமா? ஒரு பெரிய மகாசபைக்கு அக்கிராசனப் பதவிக்குத் தெரிந்தெடுப்பதற்கு என்று கேட்கலாம். பத்துத் தடவை சட்டசபை மெம்பராக ஒட்டிக்கொள்கிறவர்களுமுண்டு. தலைமுறை தலைமுறையாய் ஜில்லா தாலுக்கா போர்டு பிரசிடெண்டாயிருக்கிறவர்களுமுண்டு. போதுபோதுமென்று நான் சொல்லவில்லை. ஆனால் இன்னும் அதைவிட அருமையான குணங்கள் அவர்களிடத்தில் என்ன இருக்கின்றது என்று கேட்டீர்களானால், என்னைப் பொறுத்தவரையிலும் நான் கொஞ்சம் குறைவாகவே சொல்லக்கூடும் என்ன? எந்தக்காரியத்தை உத்தேசித்து இந்த மகாநாட்டைக் கூட்டி இருக்கிறமோ, அந்த இயக்கத்துக்காக என்ன விசயங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்குக் கூடியிருக்கிறோமோ அதன் கொள்கைகளில் மூழ்கினவர். அது மாத்திரம் போதாது, மனப்பூர்த்தியாக அதை ஒப்புக்கொண்டு ஒழுகுகின்றவர். அனுபவத்தில் அனேக உபத்திரவங்கள் குறுக்கே இருந்தாலும் அவர் திரணமாக நினைக்கிறாரென்றே திடமாய்ச் சொல்லுகிறேன். அந்தக் கொள்கைகளின் தத்துவங்களை ஒப்புக்கொண்டு உணர்ந்து அதன்படி நடப்பதிலும் மற்றவர்களும் இம்மாதிரி நடப்பதற்குத் தன்னுடைய உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தஞ்செய்து அவரால் கூடியவரை நாட்டில் பிரச்சாரம்செய்ய வேண்டுமென்று தொண்டு செய்வதற்கும் தயாராயிருக்கிறார் என நான் மனப்பூர்வமாய்ச் சொல்லுகிறேன். அப்பேர்ப்பட்ட பெரியார் நமக்குக் கிடைக்கத்தக்கது கண்டிப்பாய் நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு அறிகுறி என்று தான் சொல்லுவேன்'' என்று குறிப்பிட்டார்.
1930 மார்ச்சுத் திங்கள் 16 ஆம் நாள் தலைச்சேரியில் (கேரளம்) தீயர், நாடார், பில்லவர் மகாநாடு நடைபெற்றது. சௌந்திரபாண்டியனார் தலைமை தாங்கினார். அங்கே தீண்டாதவர்கள் என்று அழைக்கப்படுபவர்களைத் தனது தலைமையில் அருகிலிருந்த கோயிலுக்குள் எதிர்ப்புகளையும் மீறி அழைத்துச் சென்றார்.
1936 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் “பார்ப்பனரல்லாத சமூக அபிமானிகளுக்கு விண்ணப்பம்'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையும், பின்னர் “வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையும் சௌந்திரப்பாணடியன், தந்தை பெரியார் இருவரும் கையொப்பமிட்டு “குடிஅரசு'' இதழில் வெளிவந்தது. இதன் மூலம் பாண்டியன் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் எந்த அளவுக்கு இணைந்து பார்ப்பனரல்லாத மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டனர் என்பதை நாம் அறிய முடிகிறது.
நீதிக்கட்சியின் 16 ஆவது மாநாடு சேலத்தில், 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 26 ஆம்நாள் கூடியது. தந்தை பெரியாரும் தளபதி சௌந்திரபாண்டியனாரும் பெரிய சாரட் வண்டியில் ஊர்வமாக அழைத்துவரப்பட்டனர். கி.ஆ.ப. விசுவநாதன், அறிஞர் அண்ணா முதலியோர் ஊர்வலத்தில் வந்தனர்.
நீதிக்கட்சி, திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யக்கூடிய அந்த மாநாட்டில் தந்தை பெரியாரின் தலைமையை மாற்றிடச் சிலர் முயன்றபோது, அதற்கு உடன்பட சௌந்திரபாண்டியனார் மறுத்துத் தந்தை பெரியாருக்கு ஆதரவாகவே செயல்பட்டு அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டுவந்த பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேறத் துணைபுரிந்தார்.
நீதிக்கட்சி திராவிடர்கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும், சர்.பி.டி. இராசன் தலைமையில் நீதிகட்சி அதே பெயரில் தொடர்ந்து இயங்கியது.
சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து அவ்வியக்கத்தில் முழுமனதுடன் செயலாற்றிய சௌந்திரபாண்டியனார் இதய நோயால் பாதிக்கப்பட்டு 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22 ஆம் நாள் சென்னையில் முடிவெய்தினார். அவரின் உடல் அவரது சொந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் அவரது பண்ணையில் அடக்கம் செய்யப்பட்டது.
சௌந்திரப்பாண்டியனாரின் உண்மை கொள்கைகள், வீரம், தன்னமில்லாத தியாகம், ஏழைகளிடத்தில் அன்பு செலுத்தும் உயர்ந்த குணம், தன்னை ஒரு சாதாரண தொண்டனாகக் கருதி செயல்படும் பாங்கு ஆகியவையே திராவிட இயக்கம் ஓங்கி உயரக் காரணமாக இருந்தன. அதிலிருந்து உருவான இன்றைய திராவிடக் கட்சிகள் அவரின் வழியைப் பின்பற்றி “சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயம்'' உருவாகப் பாடுபடவேண்டும் என்பதே நமது வேண்டுகோள். இதுவே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடன். வாழ்க சௌந்திரபாண்டியனாரின் புகழ்.
***
ஒப்பற்ற பாண்டியனாரின் குடும்பம் சுயமரியாதை உலகின் எழிலோவியம்
“தமிழகத்திலேயே, பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவக்கினார். மக்களிடை புதியதோர் விழிப்பு மலர்ந்தது. யாருடைய பிரச்சாரத்திறனும், ஓயா உழைப்பும், உயர்தரமான அறிவாற்றாலும் தமக்குப் பயன்படுமென்று அரசியல் சூதாடிகள் எண்ணி வரவேற்று, உபசரித்து, முகமன்கூறி முறுவல் காட்டினரோ, அந்தப் பெரியார், அரசியல் சூதாடிகளுக்கு அல்ல என் உழைப்பு, மக்களைச் சுயமரியாதைக்காரர்களாக்கவே, ஜாதிக் கொடுமைகளைத் தகர்க்கவே, மத மடமைகளை ஒழிக்கவே பயன்படும் என்று கூறினார்.
சுயமரியாதை இயக்கம் துளிர்த்தது. சூதுமதியினர் மிரண்டனர்; மட அதிபர்கள் மிரண்டனர்; பணம் படைத்தோர் பதைத்தனர்; புராண மேதைகள், பூசுரத்தலைவர்கள் புருவங்களை நெறித்தனர். யாரெல்லாம் பெரியாருடைய பேராற்றல் தமக்குப் பயன்படும் என்று ஆசை கொண்டனரோ, அவர்கள்எல்லாம் – அரசியல் சூதாடிகளெல்லாம், எதிர்ப்பாளராயினர்; அத்தகைய சூழ்நிலையில் பட்டிவீரன்பட்டிப் பாண்டியனார், பெரியார் பக்கம் நின்றார்; அவர் விரும்பியிருந்தால், மாளிகையிலே "மந்தகாச' வாழ்வு நடத்திக் கொண்டிருக்கலாம் –ஆனால் அவர் கல்வீச்சும், அதை விடக் கொடுமையான சொல்வீச்சும் மிகுந்திருந்த சுயமரியாதை இயக்கத்தில் புகுந்தார் – உற்சாகத்தோடு, பணபலம் படைத்தவர்களின் பகைக்கு நடுவே சிக்கிக்கொண்ட சுயமரியாதை இயக்கம் எங்கே தப்பிப் பிழைக்கப்போகிறது என்ற அச்சம் சூழ்ந்திருந்த வேளையில், பாண்டியன் பரணி பாடினார், வேடதாரிகளை விரட்டினார், சனாதனத்தைச் சாடினார்; சீறிப் போரிட்டார், பெரியாரின் பக்கம் நின்று, சுயமரியாதை இயக்கம் வேரூன்றப் பாண்டியனாரின் பெயரும் உழைப்புப் பயன்பட்ட வகையினை எண்ணும்போது அந்தோ – எவ்வளவு பெரிய துணையை இழந்துவிட்டோம் என்ற எண்ணம் நெஞ்சத்தைத் துளைக்கிறது.
***
சுயமரியாதை இயக்கத் தலைவர் சௌந்திர பாண்டியனார்
மானமிகு கி. வீரமணி
“தனது நாடார் சமூக மக்களிடம் அவர் ஆற்றிய பணிகள் கூட அவர்களைச் சாதி இழிவிலிருந்தும் பிற்போக்குத்தனத்திலிருந்தும் விடுவிப்பதற்கான உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்ததே தவிர தனது அரசியல் லாபத்திற்கு அவர் பயன்படுத்தியதே இல்லை. நாடார் சமூக மக்களிடையே விதவைத் திருமணங்களையும் சாதி ஒழிப்புக் கலப்புத் திருமணங்களையும் அவர் ஏராளம் நடத்தி வைத்தார். நாடார் மகாஜன சங்கத்தின் ஆதரவிலேயே ஏராளமான விதவைத் திருமணங்களை நடத்தி வைத்தார். எதிர்ப்பு தெரிவித்த பழைமைவாதிகளையெல்லாம் அவர் வாயடைக்கச் செய்தார்.
முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வீறு கொள்ளச்செய்த பெருமையும் அவருக்கு உண்டு. வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தும் பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காக உழைத்த அந்தச் சுடரொளியின் தியாக வாழ்க்கை, இன்றைய சமுதாயத்துக்கு வழிகாட்டும் திருவிளக்காகும்.
சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கியபோது யாரைத் தலைவர் ஆக்கினார்களோ அவர் வெறும் ஒரு சாதித்தலைவரல்ல; சமுதாயத்தில் எழுச்சி ஏற்படுத்தவே சுயமரியாதை இயக்கத் தலைவர் என்ற உணர்வோடு டபிள்யூ, பி.ஏ. சௌந்திரபாண்டியனார் அவர்களைத்தான் சுயமரியாதை இயக்கத்திற்கு தலைவராக ஆக்கினார்கள். அவரைத் தலைவராக ஆக்கிவிட்டுத் தான் தோற்றுவித்த இயக்கத்திற்குத் தன்னைத் துணைதலைவராகத் தாழ்த்திக் கொண்டார் தந்தை பெரியார். இந்த வரலாறு ரொம்பப் பேருக்குத் தெரியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக