கே.எஸ்.அழகிரிக்கு சிறு குழப்பம். ‘நாமோ காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்காக திமுகவிடம் பேசத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஸ்டாலின் திமுகவின் மாவட்டச் செயலாளரும், உயர்நிலைக் குழு உறுப்பினருமான எ.வ.வேலுவை போய் பார்க்கச் சொல்லுகிறாரே...’ என்று சத்தியமூர்த்தி பவனில் விவாதித்த அழகிரி, ‘எ.வ.வேலு ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருக்கலாம். ஆனால், ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருந்துகொண்டு நான் போய் எ.வ. வேலுவை சந்திப்பது சரியாக இருக்காது. அதனால் கோபண்ணாவை அனுப்புவோம்’ என்று முடிவெடுத்து கோபண்ணாவை அனுப்புகிறார்.
கோபண்ணாவும் எ.வ.வேலுவின் வீட்டுக்குப் போய் அவரை சந்தித்துப் பேசுகிறார். அப்போதுதான் திமுகவின் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளிடமும் எ.வ.வேலுதான் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைக்கு முந்தைய அதிகாரபூர்வற்ற பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார் என்று காங்கிரஸுக்குத் தெரிந்திருக்கிறது.
கோபண்ணாவிடம் பேசிய எ.வ.வேலு, கடந்த சட்டமன்றத் தேர்தல்களின் நிலைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி வர இருக்கும் தேர்தலின் சூழலையும் விளக்கி காங்கிரஸுக்கு 15 தொகுதிகள் என்று ஆரம்பித்திருக்கிறார். காங்கிரஸ் இதை எடுத்த எடுப்பிலேயே மறுக்கும் என்று தெரிந்து ஸ்டாலினால் அங்கீகரிக்கப்பட்ட அந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், காங்கிரஸுக்கு 20 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் வேலு.
இந்தச் சூழலில்தான் இன்று (பிப்ரவரி 25) காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவாலயத்துக்குச் சென்று அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை நடத்துகிறார். ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த 20 சீட்டுகள் என்பது 25 வரை அதிகரிக்கலாம். அதற்கு மேல் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பே இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கான இடங்களை அதிகரித்துத் தருகிறோம் என்று ஒரு நிலைப்பாடு எடுத்து காங்கிரஸின் தேசிய பொறுப்பாளர்களை சம்மதிக்க வைத்துவிடலாம் என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது.
ஆனால் கே.எஸ்.அழகிரியோ தனக்கு முன் மாநிலத் தலைவர் பதவி வகித்தவர்கள் தேர்தலில் காங்கிரஸுக்குப் பெற்றுக் கொடுத்த சீட்டுகள் அளவுக்குத் தானும் பெற வேண்டும் என்று விரும்புகிறார். நேற்றுகூட தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய அவர், 2016 தேர்தலில் காங்கிரஸ் அவ்வளவு இடங்களில் தோற்றதற்கு காங்கிரஸ் மட்டுமே காரணமல்ல... திமுகவின் பகிரங்க மெத்தனமும் காரணம் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். இதையெல்லாம் பேச்சுவார்த்தையின் போதும் அவர் எடுத்துக் கூறலாம்.
காங்கிரஸ் மட்டுமல்ல... மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளோடும் எ.வ.வேலுதான் அதிகாரபூர்வமற்ற அதேநேரம் கட்சித் தலைவர் ஸ்டாலினால் அங்கீகரிக்கப்பட்ட பேச்சுகளை நடத்தியிருக்கிறார். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்கனவே எ.வ.வேலுவோடு பேசியதை மின்னம்பலத்தில் பதிவு செய்திருக்கிறோம். இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசனும் திமுகவின் எ.வ.வேலுவை சந்தித்துப் பேசியிருக்கிறார். திருமாவளவனும் வேலுவிடம் பேசியிருக்கிறார். மதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக ஸ்டாலினுடன் பேசிவருகிறார். அதனால் மதிமுகவிடம் எ.வ.வேலு பேசவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஐந்து சீட்டுகள், இந்திய கம்யூனிஸ்டுக்கு நான்கு சீட்டுகள், விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சீட்டுகள் என்ற அளவிலேயே அந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இனிமேல் நடக்க இருக்கும் நேரடிப் பேச்சுவார்த்தையில் வேலுவுடன் பேசியபோது முன் வைக்கப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் இரண்டு அதிகமாகலாம். நேரடிப் பேச்சுவார்த்தையின்போது இந்தச் சீட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு உயர்கிறது என்பது கூட்டணிக் கட்சிகளின் உறுதியையும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவின் உறுதியையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்தப் பின்னணியில்தான் இன்று அறிவாலயத்துக்குள் நுழைகிறார்கள் காங்கிரஸ் குழுவினர்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக