செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

காங்கிரஸ் செல்வப் பெருந்தகை கமல்ஹாசனின் கட்சியில் சேர இருப்பதாக தகவல்!

கமலுடன் கை கோர்க்கும் காங்கிரஸ் புள்ளி?

மின்னம்பலம்  : தலைநகர் சென்னையில் தமிழக காங்கிரஸுக்கென சில கிரவுண்ட் ஒர்க்கர்கள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் கராத்தே தியாகராஜன். ஆனால் அவரை தென் சென்னை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்து மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி நீக்கினார். அதன் பின் காங்கிரஸில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கராத்தே தியாகராஜன் அண்மையில் பாஜகவில் சேர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் சென்னையில் காங்கிரஸுக்கு அடுத்த களச் செயற்பாட்டாளராக இருக்கும் இன்னொருவரும் காங்கிரசுக்கு டாடா காட்டப் போகிறார் என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்.  புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் காங்கிரஸைக் கரைக்கப் பலவிதமான திட்டங்களைப் போட்டுவருகிறது பாஜக. மாநில நிர்வாகிகளிடமும், முன்னாள் இன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களிடமும் பாஜக பிரமுகர்கள் தொடர்பிலிருந்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தின் முன்னாள் தலைவரும் கல்வியாளருமான கலை விஜயகுமார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் தனது ஆதரவாளர்களோடு பாஜகவில் இணைவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்துவருகிறார்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகை விரைவில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் சேர இருப்பதாக தகவல்கள் வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்த செல்வப் பெருந்தகை திருமாவளவனோடு ஏற்பட்ட கசப்பால் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றார். அங்கே ப. சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டார். கட்சிக்குள் ஏற்பட்ட தொடர் கசப்புகளால் அண்மை நாட்களாக இவர் கமல்ஹாசனுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் விரைவில் மக்கள் நீதி மய்யத்தில் செல்வப் பெருந்தகை சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை என்றும் அவரது வட்டாரத்திலே கூறுகிறார்கள்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: