\BBC :அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கின் 777 ரக விமானத்தின் எஞ்சின் எரிந்து நடுவானில் அதன் பாகங்கள் வெடித்துச்சிதறிய சம்பவம் காரணமாக, அத்தகைய இயந்திர கோளாறு சாத்தியம் மிகுந்த 777 ரகத்தைச் சேர்ந்த 128 விமானங்களை தரையிறக்க போயிங் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. .. கடந்த சனிக்கிழமை டென்வெரில் இருந்து ஹோனோலூலு நகர் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 777 ரக விமானம் 231 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் எஞ்சின் பகுதி தீப்பிடித்து எரிந்தது.
இதனால், அவசரமாக அந்த விமானம் தரையிறங்க கட்டாயப்படுத்தப்பட்டது. அந்த எஞ்சினின் சில பாகங்கள் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை தகவலின்படி போயிங் 777 ரக விமானங்களை அங்குள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ் மட்டுமே இயக்கி வருகிறது. அதே ரக விமானங்கள் சில ஜப்பானிலும் தென் கொரியாவிலும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விமான எஞ்சின் எரிந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வரும் வேளையில், பிராட் அண்ட் விட்னீ 4000-112 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போயிங் 777 ரக விமானங்களின் 69 உள்நாட்டு சேவை மற்றும் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள 59 சேவைகளையும் உடனடியாக தரையிறக்க உத்தரவிடப்பட்டுள்ளது," என கூறப்பட்டுள்ளது. எஞ்சின் தீ பற்றி எரிந்த சம்பவம் குறித்து விசாரிக்க பிராட் அண்டு விட்னீ நிறுவனம் தனது தொழில்நுட்ப புலனாய்வாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.
ஆரம்ப நிலை விசாரணை தரவுகளின்படி, விமானத்தின் வலதுபக்க எஞ்சின் பகுதியிலேயே அதிக சேதம் ஏற்பட்டதாகவும் அதன் இரண்டு விசிறிகள் நொறுக்கியதாகவும் மற்ற பிளேடுகளிலும் அதன் தாக்கம் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. விமானத்தின் முக்கியமான பகுதியிலும் லேசான சேதம் கண்டறியப்பட்டது.
2019ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துகளை சந்தித்த நிலையில், 346 பயணிகள் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த விமான தயாரிப்பு நிறுவனம், தன் மீதான நம்பிக்கையை மீட்க கடுமையாக போராடி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் டென்வர் பகுதியில் விமானத்தின் எஞ்சின் பாகங்கள் தீப்பிடித்த சம்பவம், மீண்டும் போயிங் நிறுவன விமானத்தின் பாதுகாப்பான பயணம் தொடர்பான அச்சத்தை பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
ஜப்பானிலும் நடவடிக்கை
அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானில் உள்ள பிராட் அண்ட் விட்னீ எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போயிங் 777 ரக விமானங்கள் அனைத்தையும் மறு உத்தரவு வரும்வரை தரையிறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இதே ரக விமானம் ஒன்றின் எஞ்சின் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து ஜப்பானின் நாகா விமான நிலையத்துக்கு உடனடியாக திரும்ப அந்த விமானத்துக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது. அந்த விமானமும் தற்போது அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானமும் கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தின் வலது பக்க எஞ்சின் ஹோலோனூலு நகரில் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது சேதம் அடைந்தது. அதன் முழு நீள பிளேடு உடைந்ததால் எஞ்சின் உடைய நேரிட்டதாக அந்த சம்பவத்தின் விசாரணை முடிவில் தெரிய வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக