வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

துனிசியாவில் திடீரெனத் தோன்றிய ஏரி ! 600க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் என்று


வறட்சி மிகுந்த ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் மத்தியில் உள்ள கஃப்சா பகுதியில் திடீரெனத் தோன்றியுள்ள ஏரி ஒன்று வெயிலில் வாடித் தவிக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தலமாக மாறியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பில் ஒரு மில்லியன் கன மீட்டர் கொள்ளளவுடன் 10 முதல் 18 மீ வரையிலான ஆழத்துடன் இந்த ஏரி காணப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பகுதியில் பாஸ்பேட் சுரங்கங்கள் அதிகம் காணப்படுவதால் தண்ணீர் மாசுபட்டதாகவோ, கதிரியக்கத்தன்மை கொண்டதாகவோ இருக்கக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். அதற்கேற்றாற்போல் முதலில் தெளிவாக நீல நிறத்தில் காணப்பட்ட இந்தத் தண்ணீர் இப்போது அடர்த்தியான பச்சை நிறத்தில் பாசி படிந்து காணப்படுவதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இருப்பினும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வாடும் இந்த மக்கள் அவர்களின் எச்சரிக்கைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு கஃப்சாவின் கடற்கரை என்று அதற்குப் பெயரும் இட்டு சந்தோஷமாக நீந்தி பொழுதைக் கழிக்கின்றனர். சிலர் இதனை ஒரு அதிசயம் என்று கூற சிலரோ சாபம் என்று கருதுகின்றனர். எனினும், 600க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் என்று பல்வேறு தரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றனர் என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இந்த ஏரி தோன்றியதற்கான அதிகாரபூர்வ விளக்கத்தை அளிக்கமுடியவில்லை என்றபோதும் சில புவியியலாளர்கள் நில அதிர்வு செயல்பாட்டினால் நீர்மட்டம் உயர்ந்து வெளித்தோன்றியிருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். சிலர் இதனை மறுத்தாலும் தற்சமயம் இந்த ஏரி சிறந்த சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது என்பதே உண்மையாகும். maalaimalaar.com

கருத்துகள் இல்லை: