தமிழ் சினிமாவில், நட்சத்திர நடிகர்களின் இமேஜ் எனும் ஒளி
வீசுவதற்கு உயிரைக் கொடுத்து நடிக்கும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை எப்படி
இருக்கிறது? நடிகர் – நடிகைகளை அட்டைப்படங்களிலும், அனைத்து வகை
செய்திகளிலும் திணித்து எழுதும் ஊடகங்கள் எவையும் இத்தகைய கலைஞர்களை
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மாறி வரும் தமிழ் சினிமாவில் சண்டை நடிகர்களின்
உலகம் எப்படி இருக்கும்? மாஸ்டர் என்று அழைக்கப்படும் சண்டை
இயக்குநர்களில் ஒருவரான மாஸ்டர் நித்தியானந்தனை, சென்னை-வடபழனியில்
இருக்கும் தென்னிந்திய திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்க கட்டிடத்தில்
சந்தித்து பேசினோம். சினிமா ஓடுவதற்கு மட்டுமல்ல சினிமா உலகைப் புரிந்து
கொள்ளவும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை உதவும். படியுங்கள்!
சண்டை இயக்குனர் நித்தியானந்தன் வினவு: ஒரு திரைப்படத்தில் சண்டை நடிகர்கள் அவசியமா?
நித்தியானந்தன்: சார்லி சாப்ளின் போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரை எடுத்தாலும் ஆக்சன் கதாநாயகர்கள் தான் பிரபலம். புரூஸ் லீ, ஜெட்லீ, ஜாக்கி ஜான், சில்வர்ஸ்டன் ஸ்டோன், ஆர்னால்டு என எல்லோருமே இதற்காகத் தான் மதிக்கப்படுகிறார்கள்.
வினவு: ஆனால் மக்களைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறீர்கள், உங்களது வாழ்க்கை நிலைமை என்ன? பலருக்கும் தெரியாதே?
நித்தியானந்தன்: மற்றவர்களைப் போலத்தான் நாங்களும். என்ன கூடுதலாக கொஞ்சம் சண்டையெல்லாம் கற்றுக்கொண்டு, கண்ணாடியை உடைக்க தைரியமா முன்னால் வந்து நிற்போம். வறுமை காரணமாக ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் என்பதற்காகத்தான் இந்த தொழிலுக்கு வருகிறோம். எங்களுக்கும் கொஞ்சம் பயம் இருக்கும். ஆனால் இப்போதைய சண்டைக் காட்சிகளில் உயிரெல்லாம் போயிடாது. முன்னாடி போயிருக்கிறது.
அப்போது உண்மையான கண்ணாடியை உடைக்க வேண்டியிருக்கும். இப்போது காயம் மட்டும் படும். எனக்கு கூட கை கால் எல்லாம் காயம் பட்டு இருக்கிறது. (கைகளில் காயம்பட்ட தழும்புகளைக் காண்பிக்கிறார்.)
வினவு: எத்தனை வயதில் இந்த தொழிலுக்கு வந்தீர்கள்? உங்களை எப்படி தெரிவு செய்தார்கள்? அப்போது இந்தத் துறை எப்படி இருந்தது?
நித்தியானந்தன்: நான் 23 வயதில் வந்தேன். இப்போது 54 வயதாகிறது. எங்க அப்பா சண்டை நடிகரா இருந்தார். வணங்காமுடி, தங்கமலை ரகசியம், புதிய பறவை போன்ற படங்களில் சிவாஜிக்கு டூப் போட்டிருக்கிறார். ராயபுரத்தில் தான் வசித்து வந்தார். நானும் அங்குதான் பிறந்து வளர்ந்தேன். எஸ்.எஸ்.எல்.சி படித்தும் வேலை கிடைக்கவில்லை. அதான் இங்கு வந்து விட்டேன். அப்பா வேலை பார்த்த மாஸ்டரிடமே என்னை சேர்த்து விட்டார்.
வினவு: உங்களை ஏன் அதற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை?
நித்தியானந்தன்: வருமானம் பத்தல சார். இந்திரா காந்தி ஆட்சியில சண்டைக் காட்சிகளில் ரத்தம் வருவது போல காட்சிகள் அமைக்க கூடாது என்று சட்டம் போட்டார்கள். அதை எதிர்த்து கடுமையான போராட்டம் எல்லாம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் வந்து தான் ரத்தம் இல்லாமல் சண்டை எல்லாம் வைத்து படம் எடுத்து, எங்களை வாழ வைத்தார்.
வினவு: உங்களது அப்பா காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
நித்தியானந்தன்: ஒரு சண்டைக் காட்சிக்கு ரூ.200 முதல் 300 வரை கிடைக்கும். முதலில் மாஸ்டராக தொழிலை ஆரம்பித்த அவர் பிறகு சண்டை போடுபவராக மாறி விட்டார்.
வினவு: வேறு வேலைக்கு போக முடியாத காரணத்தால் தான் இதற்கு வந்து விட்டீர்களா?
நித்தியானந்தன்: வேலை வாய்ப்பு இல்லை. அடுத்து நான் பார்க்க கொஞ்சம் கலராக (மாநிறம்) கொஞ்சம் உயரமா இருந்ததால கதாநாயகர்களுக்கு டூப் போட முடியும்னு சொன்னாங்க. அதுனால எங்கப்பா என்னய சூப்பர் சுப்பயராயன் மாஸ்டர்ட்ட எடுத்துண்டு போயி விட்டாரு. பீச்ல தினமும் காலைல ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுப்போம். அப்புறம் வாரிசு சண்டை நடிகர்களுக்கெல்லாம் யூனியன்ல ஒரு செலக்சன் வைப்பாங்க. அதுல நான் செலக்ட் ஆகிட்டேன்.
வினவு: அந்த செலக்சன்ல என்னென்ன தேர்வுகள் இருக்கும்?
நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்ல சிங்கிள், டபுள், தொடர்ச்சியா விதவிதமா பல்டி அடித்து காட்டணும். இதுபோக உங்களுக்கு வேறு என்னென்ன தெரியுமோ அதை எல்லாம் செய்து காண்பிக்கணும். கத்தி, வாள், ஸ்கிப்பிங், அப்புறம் கராத்தே இந்த நான்கிலும் தேர்வுகள் நடைபெறும். ரொம்ப இல்லேன்னாலும் ஓரளவு திறமை காட்டினால் தேர்வு செய்து விடுவார்கள். இல்லையின்னா ‘இன்னும் கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணிட்டு வாப்பா’ எனச் சொல்லி கொஞ்சம் டைம் கொடுப்பாங்க. பிறகு தேர்வு வைத்து அவனையும் உள்ளே எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் வாரிசுக்கு கட்டாயம் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்பது யூனியன் விதி. இங்கிருக்கும் பலருமே வாரிசுகள் தான்.
வெளியே இருந்து எடுக்க வேண்டுமானால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகுதான் எடுப்பார்கள். உடற்தகுதியுடன், அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து வழக்கு இல்லேன்னு சான்றிதழ் தரணும். கிரிமினல் பின்னணி இருந்தால் சேர்க்க மாட்டாங்க. முன்னாடி சிவக்குமார் சார் மாதிரி உயரம் குறைவான கதாநாயகர்களும் இருந்த காரணத்தால் உயரம் குறைவாக இருந்தாலும் எடுத்தாங்க. இப்போது அது சாத்தியமில்லை.
வினவு: அப்போது யூனியனில் சேர்வதற்கு எவ்வளவு கட்டணம்?
நித்தியானந்தன்: நான் அப்போது வாரிசாக சேர்ந்ததால் கட்டணம் ரூ.500. மற்றவர்களுக்கு ரூ.5000. இது நடந்தது 1982-ல்.
வினவு: நீங்கள் சேர்ந்த பிறகு நடித்த முதல் படம் எது?
நித்தியானந்தன்: தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான ராம் லஷ்மண்தான் முதல் படம். தமிழில் கமல், தெலுங்கில் கிருஷ்ணமராஜ், இந்தியில் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் கதாநாயகர்கள். நான் கிருஷ்ணமராஜுக்கு டூப் போட்டேன். இரண்டு காட்சிகளில் வந்தேன். தாவிக் குதிப்பது, டைவ் அடிப்பது போன்றவற்றை செய்தேன்.
வினவு: அதற்கு உங்களுக்கு என்ன சம்பளம் தரப்பட்டது?
நித்தியானந்தன்: மூன்று நாளைக்கு ஆயிரம் ரூபாய் தந்தார்கள். தாஸ் சார் தான் எனக்கு மாஸ்டர். அப்புறம் நிறைய மொழிகளில் நிறைய பேருக்கு டூப் போட்டிருக்கிறேன். என்.டி.ஆர், கிருஷ்ணா, பிரேம் நசீர், ஷோபன் பாபு, ராஜ்குமாருன்னு பலருக்கு டூப் போட்டுள்ளேன். இந்தியில் தர்மேந்திரா, மிதுன் சக்ரவர்த்திக்கும் டூப்பா நடிச்சேன்.
ரஜினிக்கு தங்க மகன், நான் மகான் அல்ல, பிலாப்டா படங்களிலும், கமலஹாசனுக்கு கைதியின் டைரி, சட்டம் படங்களிலும் டூப் போட்டேன். அப்போது நான் உயரமாகவும், ஒல்லியாகவும் இருந்தேன்.
வினவு: நீங்கள் இதுவரை எத்தனை படம் நடித்திருப்பீர்கள்?
நித்தியானந்தன்: சரியாத் தெரியலை.
வினவு: ஒரு ஆயிரம் இருக்குமா?
நித்தியானந்தன்: அதுக்கும் கூட இருக்கும் சார். ஏன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு எல்லா மொழியிலயும் பண்ணியிருக்கிறேன். கன்னடத்தில் அம்ரீஷ், பிரபாகரன், விஷ்ணுவர்தன், டாக்டர் ராஜ்குமார் என எல்லோருக்கும் டூப் போட்டிருக்கிறேன்.
வினவு: நீங்கள் எந்த சண்டையில் சிறப்பான முறையில் பெயர் பெற்றவர்?
நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக். அப்புறம் ஆபத்தான காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பது. உதாரணமாக உயரமான இடத்தில் இருந்து குதிப்பது போன்றவற்றில்.
வினவு: அதிகபட்சம் எவ்வளவு உயரத்தில் இருந்து குதிப்பீர்கள்?
நித்தியானந்தன்: சீக்ஸ் பீட்சுன்னு ஒரு திரைப்படம் அதில் தண்ணீருக்கு மேலே இருந்து 80, 100 அடி உயரத்தில் இருந்து குதித்திருக்கிறேன். அது துறைமுகத்தில கப்பலுக்கும் மேலே இருக்குற டவர்ல இருந்து குதிச்ச சீன்.
வினவு: இதெற்கெல்லாம் பயிற்சி, ஒத்திகை எடுப்பீர்களா?
நித்தியானந்தன்: அதெல்லாம் கிடையாது சார். ஏற்கெனவே குதித்திருக்கிறோம் என்ற தைரியம்தான். தொழில்னு வந்த பிறகு அதெல்லாம் பார்க்க கூடாது. நானே இன்னொரு மாஸ்டருக்கு (ஆம்பூர் பாபு) பதிலாகத்தான் அப்படி குதிச்சேன்.
வினவு: தண்ணீர் ஆழம் குறைவான இடங்களில் குதிப்பதுண்டா? ஒகேனக்கால் போன்ற அருவிகளின் மேலே இருந்து குதித்திருக்கிறீர்களா?
நித்தியானந்தன்: அப்படியெல்லாம் குதிக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரு கணக்கில் கொண்டுதான் செய்வோம். அருவிக்கு மேலே குதித்ததில்லை. ஆனா ஒகேனக்கலில் மோகன்லாலுக்கு பதிலாக வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல டூப்பா நடித்திருக்கிறேன்.
வினவு: ஜிம்னாஸ்டிக், ஆபத்தான சண்டை காட்சியில் பெயர்பெற்றுள்ள நீங்கள் இதில் எத்தனை முறை காயமடைந்துள்ளீர்கள். அதில் குறிப்பிடும்படியான சம்பவம் எதாவது இருக்கிறதா?
நித்தியானந்தன்: நிறைய வாட்டி அடிபட்டிருக்கிறேன். சில முறை உயிர் போகும் நிலைக்கு சென்று திரும்பியிருக்கிறேன். ஒரு மலையாள படத்துக்கு டூப் போட்டிருந்தேன். இப்போ சீப்ராஸ் பில்டிங்னு இருக்கே அது ஒரு காலத்துல சாரதா ஸ்டுடியோஸ்னு இருந்தது. அங்க இரண்டு மாடி உயரத்தில் இருந்து எதிரே இன்னொரு கட்டிடத்திற்கு செல்ல சாரத்தை போல ஒரு கயிறைப் பிடித்துக் கொண்டு வழுக்கிக் கொண்டு கீழிறங்க வேண்டும். வேற பாதுகாப்பு வசதியெல்லாம் இல்லை. பாதி வழியில் கயிறு அறுந்து, தரையில் விழுந்து விட்டேன். நினைவு தப்பி வாயில் ரத்தம் வர ஆரம்பித்து விட்டது. விஜயா மருத்துவமனையில் சேர்த்து இப்போது மியாட் மருத்துவமனையில் இருக்கும் மோகன்தாஸ் டாக்டர்தான் எனக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றினார்.
வினவு: இதெற்கெல்லாம் முன்னரே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து விட்டு படப்பிடிப்பு நடத்த மாட்டார்களா?
நித்தியானந்தன்: அதெல்லாம் செஞ்சாலும் அதையும் மீறி நமக்கு அடிபட்டு விட்டது. கீழே பெட் எல்லாம் போட்டிருந்தார்கள் (ஒரு அடி உயரத்தில் கோணிப்பையில் வைக்கோல் உள்ளே வைத்து சுற்றப்பட்டிருப்பதைத்தான் அவர் பெட் என்கிறார்).
வினவு: எவ்வளவு காலம் அதன்பிறகு ஓய்வெடுத்தீர்கள்? அந்தக் காலங்களில் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர் எதாவது உதவி செய்தாரா?
நித்தியானந்தன்: அதெல்லாம் பண்ண மாட்டார்கள். மருத்துவ முதல் உதவி செய்வார்கள். மருத்துவ செலவை கொஞ்சம் ஏற்றுக் கொள்வார்கள். அதன் பிறகெல்லாம் ஒன்றும் கிடைக்காது.
வினவு: சண்டை நடிகர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டமெல்லாம் கிடையாதா?
நித்தியானந்தன்: முன்னாடி இருந்தது. இப்ப கிடையாது. சொந்த பொறுப்பில் தான் அவங்கவங்கதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வினவு: கோடிக்கணக்கில் செலவழித்து சினிமா எடுக்கும் தயாரிப்பாளருக்கு உங்களது ரிஸ்க் சண்டை மட்டும் தேவைப்படுகிறது. ஆனால் உதவாமல் போகிறார்கள், ஏன்?
நித்தியானந்தன்: இந்த தொழில் ரிஸ்க்குனு தெரிந்துதானே வருகிறோம். அதனால் உதவிய எதிர்பார்க்க முடியாது. கண்ணாடியை உடைப்பது போன்ற ஆபத்துகளுக்கு தக்க ஊதியத்தை தந்து விடுகிறார்கள். வாழ்நாள் முழுதும் உதவி பண்ண முடியாது இல்லையா. ஒரு விபத்து நடக்கிறது, அதில் சில சமயம் உயிர் பிழைத்திருப்போம், சில சமயம் ரொம்ப பிரச்சனையாகும். அது போலத்தான் இதுவும்.
வினவு: ஆனால் உங்களது ரிஸ்க்குகளுக்குத்தானே மக்கள் கைதட்டுகிறார்கள், விசிலடிக்கிறார்கள். அதை வைத்து சம்பாதிக்கும் தயாரிப்பாளர் உங்களுக்கு உதவக் கூடாதா?
நித்தியானந்தன்: சினிமாவில் விபத்து பல இடங்களிலும் நடக்கலாம். நடனமாடும் போது கூட நடக்கலாம். ஆனா சண்டைக் காட்சியில் வாய்ப்பு அதிகம். அதுதானே சண்டைக்காட்சி?
வினவு: ஜிம்னாஸ்டிக் பண்ணும்போது என்ன விதமான விபத்துக்கள் நடக்கும்?
நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்கில் சம்மர் ஷாட் பண்ணும்போது நம்மோட ஆள் ஒருத்தர் இறந்தே விட்டார். “நாளை உனது நாள்” (விஜயகாந்த், நளினி நடித்த படம், இயக்கம் ஏ.ஜெகநாதன், தயாரிப்பு வாசன் பிரதர்ஸ், ஆண்டு 1984.) படத்தில் பெட் போட்டுதான் ஸ்பிரிங் போர்டில் சம்மர் ஷாட் அடித்தார். முதல் சம்மர் அடித்து இரண்டாவது அடிக்கையில் பாதியில் தலை தரையில் மோதி விட்டது. தண்டுவடத்தில் முறிவு. மறுநாள் இறந்துவிட்டார். அவர் பெயர் ரவி, வயது 28, தண்டையார் பேட்டையை சேர்ந்தவர். சமீபத்தில் ஷாகுல் என்பவர் தெலுங்கு படத்துல நடிக்கும் போது இதே போல் விபத்து நடந்து இறந்து விட்டார். சிட்டிசன் படத்தில் அஜீத்துக்கெல்லாம் அவர்தான் டூப் போட்டுள்ளார்.
வினவு: இப்படி அடிபடுபவர்களுக்கு நிவாரணத் தொகை எதாவது கிடைக்குமா?
நித்தியானந்தன்: யூனியனில் எல்லோரும் ஆளாளுக்கு கொஞ்சம் பணம் போட்டு குடும்பத்தினருக்கு கொடுப்போம். படத்தில் நடித்த கதாநாயகர்களும், தயாரிப்பாளர்களும் மனது வைத்தால் கொஞ்சம் பணம் கிடைக்கும். லோகு என்பவர் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் டூப் போட்டு நடிக்கையில் அடிபட்டு விட்டது. கமல் சார் ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு கொடுத்தார். அதுபோல அவர்களாக விரும்பினால் எதாவது நடக்கும்.
வினவு: ஜிம்னாஸ்டிக்கிலேயே இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறதா?
நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்கிலேயே ஒரு ஸ்டூல் தற்செயலாக நழுவி விட்டால் தலைகீழாக விழ வேண்டியதுதான். பயிற்சி எடுத்திருந்தாலும் இப்படி நடக்கும். விபத்துக்களை ஒன்றும் பண்ண முடியாது. எல்லாம் கடவுள் விட்ட வழிதான்.
வினவு: சண்டை காட்சிகளுக்கு முன் எதாவது பிரத்யேகமான உணவு கட்டுப்பாடு, வேறு தயாரிப்புகள் உண்டா?
நித்தியானந்தன்: அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. மத்தவங்களுக்கு கம்பெனி கொடுக்கும் அதே உணவைத்தான் சாப்பிடுவோம். ஆபத்து நிறைந்த காட்சிகளை சாப்பிடப் போவதற்கு முன்னரே எடுத்து விடும்படி நாங்கள் இயக்குநரை கேட்டுக் கொள்வோம். அவர்களும் பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள். சாப்பிட்டு விட்டு உடனே செய்தால் ஒரு மாதிரியாக இருக்கும். இல்லாவிடில் மாலை நேரத்தில், சாப்பிட்டு சில மணி நேரம் கழிந்த பிறகு காட்சிகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்வோம். மற்றபடி அங்கு தரும் இட்லி, பொங்கல், கறிக்குழம்பு எல்லாவற்றையும் சாப்பிடுவோம்.
வினவு: அப்படியானால் உடலை சக்தியுடன் பராமரிப்பதற்கான சிறப்பு உணவுக்கு என்ன செய்வீர்கள்?
நித்தியானந்தன்: அதை வீட்டில் சாப்பிட்டுக் கொள்வோம். பழங்கள், முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். ஆளாளுக்கு இது வேறுபடும். சிலர் ஒன்றுமே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சிலர் பழங்களுடன் பயிறு வகைகள், சத்தான கீரைகள், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் பொதுவான டயட் என்றெல்லாம் கிடையாது.
வினவு: – ஜிம்னாஸ்டிக், ஆபத்து நிறைந்த ஷாட் போக என்னென்ன சண்டை வகைகள் உள்ளன?
நித்தியானந்தன்: வாள், கத்தி சண்டை, கொம்பு சண்டை, களறி சண்டை, குங்பூ, கராத்தே, குத்துச் சண்டைன்னு நிறைய இருக்கிறது.
வினவு: இப்போதைய மார்க்கெட்டில் சண்டை ட்ரெண்ட் என்ன?
நித்தியானந்தன்: இப்போது எதார்த்தமான சண்டைகளை விரும்புகிறார்கள். அதாவது இரண்டு பேர் சண்டை போட்டால் ஒருத்தரை ஒருத்தர் பிடித்து தள்ளுவது, அடிப்பது போன்றவை. எதார்த்தமான இத்தகைய சண்டைதான் இப்போது ட்ரெண்ட்.
வினவு: பழைய கத்திச் சண்டை, சிலம்பமெல்லாம் இப்போது கிடையாதா?
நித்தியானந்தன்: அதெல்லாம் கிராம சினிமா சப்ஜெக்ட் என்றால் கட்டாயம் கம்பு சண்டை இருக்கும். இதற்கெல்லாம் தனித்தனி ஸ்பெஷலிஸ்டுகள் இருக்காங்க. கம்புச் சண்டை, கத்திச் சண்டை போன்றவற்றுக்கு எங்களுக்குள்ளேயே தனித்தனி சங்கங்கள் உள்ளன.
வினவு: கண்ணாடியை உடைப்பதில் இப்போது ஆபத்தில்லை, முன்னர் இருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விளக்குங்களேன்.
நித்தியானந்தன்: முன்னாடி ஒரிஜினல் கண்ணாடியை உடைப்பார்கள். அதில் ஸ்பெஷலிஸ்டு நமச்சி வாத்தியார். அப்புறம் டி.எஸ். மணி, கண்ணாடி வரதன்னு பல கில்லாடிங்க இருந்தனர். அப்போ உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு காயம் ஏற்படும். இப்போது வரும் சில்வர் கிளாஸ் சுக்குநூறாக உடைந்து விடும் என்பதால் ரத்த காயம் இருக்கலாமே தவிர உயிருக்கெல்லாம் ஆபத்து இல்லை. இது கடந்த 15 ஆண்டுகளாக அறிமுகமாகியிருக்கும் புதிய டெக்னாலஜி. அதாவது கார், பஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கண்ணாடி இது.
வினவு: கண்ணாடி, மேசைகளை உடைப்பது எல்லாம் எப்படி எடுக்கிறீர்கள்?
நித்தியானந்தன்: கண்ணாடியில் சில புள்ளிகளில் மறைவாக பட்டாசு மருந்துகளை வைத்திருப்பார்கள். கண்ணாடியின் எதாவது ஒரு புள்ளியில் அடித்தால் அனைத்து பட்டாசுகளும் வெடிக்கும் வகையில் செட்டப் செய்யப்பட்டிருக்கும். சில சமயங்களில் சுத்தியலை வைத்தும் உடைப்போம். கேமராவில் அதை மறைத்து விடுவார்கள். பட்டாசுகள் வெடிப்பதும், நாங்கள் உடைக்க கண்ணாடியில் கை வைக்கும் நேரமும் கரெக்டா இருந்தால் சரியா உடையும். நீங்கள் கவனித்து பார்த்தால் அப்படி உடையும் போது புகை வருவது தெரியும். அது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படுவது. சுவர்களை மோதி உடைக்கும் இடத்தில் உண்மையான செங்கற்களுடன் நாங்கள் மோதி உடைக்கும் இடங்களில் மாத்திரம் தெர்மோகோல் வைத்து டம்மியான செங்கற்களை வைத்திருப்பார்கள்.
வினவு: கார், பைக்குளில் பறந்து எகிறிக் குதிப்பது பற்றி கூறுங்களேன்.
நித்தியானந்தன்: அதற்கென ஜம்பர்கள் தனியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தனியாக பயிற்சியெல்லாம் கிடையாது. வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வேகத்தடைகளில் வீலிங் பண்ணி ஜம்ப் பண்ண பயிற்சி எடுப்பாங்க. மற்றபடி தைரியம்தான் வேணும். முன்னாடி அட்டைப் பெட்டிகளை வைத்து மோடி எடுக்கும் பயிற்சி கிடையாது. இப்போது எடுக்கிறார்கள். இதுபோக தண்ணீரில் குதிக்கும் கார், பைக் காட்சிகளை பயிற்சி செய்து பார்ப்பார்கள்.
கார் ஜம்பிங்கைப் பொறுத்தவரை, முதலில் காரை பக்காவாக வெல்டிங் எல்லாம் செய்து விட்டு, அதற்குள்ளே ஒரு கூண்டு போல செய்து டிரைவர் பாதுகாப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். டமால், டுமால் என தலைகீழாக பல்டி அடித்த பிறகு பார்த்தால் கார் வெளியே அப்பளமாக நொறுங்கியிருக்கும். ஆனால் உள்ளே இருந்த ஆளுக்கு ஒரு சிறு பிசிறு கூட காயமோ பாதிப்போ இருக்காது. ஏனெனில் அவர்தான் கூண்டுக்குள் இருக்கிறாரே.
வினவு: விபத்துக்கள் ஏதும் நடந்து விட்டால் பாதுகாக்க, மருத்துவர், ஆம்புலன்சு போன்ற வசதிகள் படப்பிடிப்பு தளத்தில் இருக்குமா?
நித்தியானந்தன்: வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் அதெல்லாம் கடைபிடிக்க மாட்டாங்க. ஆனால் விபத்தெல்லாம் நடக்காது. கூண்டு நல்ல பலமாக இருக்கும். அப்புறம் வண்டியில் தேவையான அளவுக்கு மட்டும் தான் பெட்ரோல் வைத்திருப்போம். இல்லாவிடில் தீ விபத்து ஏற்பட்டு விடும் இல்லையா. அதனால் பயப்பட தேவையில்லை. முதலுதவியும் பெரிதாக தேவைப்படுவதில்லை.
வினவு: இங்கே சென்னையில் ஜம்பர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?
நித்தியானந்தன்: ஒரு இருபது பேர் வரை இருப்பார்கள். வேறு மாநிலங்களில் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள். மும்பையில ரேசர் பைக் போன்ற ஆபத்தில்லாத உயர் ரக பைக்கில் மட்டும்தான் ஜம்ப் செய்வார்கள். நம்மவர்கள் மட்டும்தான் ரிஸ்க்கெடுத்து எல்லா வகை பைக்குகளிலும் ஜம்ப் பண்ணக் கூடியவர்கள்.
வினவு: – நீங்களும் அந்த ரேசர் பைக்கை வாங்க வேண்டியதுதானே?
நித்தியானந்தன்: – இல்ல. அது விலை அதிகம். நம்ம ஆளுங்க சாதா பைக்குலயே அதையெல்லாம் பண்றாங்க. நம்மளயும் சாதா பைக்ல ஜம்ப பண்ண இப்பவும் இந்தி படங்களுக்கு கூப்பிடத்தான் செய்றாங்க. மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு என நாம்தான் முன்னர் இங்கிருந்து சென்று வந்தோம். இப்போது அவர்களும் (கேரளா தவிர) கற்றுக் கொண்டு விட்டார்கள். இப்போ நம்ம மாஸ்டர்கள் அங்க போனால் சில ஸ்பெஷலான ஆட்கள் வேண்டும் என்பதற்காக இங்கிருந்து ஆட்களை அழைத்துக் கொண்டு போவார்கள்.
வினவு: ஜம்பர்களை எப்படி சேர்க்கின்றீர்கள்? அவர்கள் எந்த சமூகப் பின்னணியில் இருந்து வருகிறார்கள்?
நித்தியானந்தன்: ஜம்ப் அடிக்கத் தெரிகிறதா என்று ஓரளவு பார்த்து விட்டு சேர்த்துக் கொள்வோம். அவர்களுக்கென தனியாக இங்கு சங்கம் உண்டு. வெளியில் இருந்து வருபவர்கள், ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக இருப்பவர்களையும் வண்டி ஓட்டுவதைப் பார்த்து சேர்த்துக் கொள்ளலாமே என்று காலப் போக்கில் சேர்த்துக் கொள்கிறோம். முதலில் சினிமாவில் இவர்களுக்கு காட்சிகள் குறைவு. இப்போது தேவை அதிகரித்து விட்டதால் தனியாக சங்கம் அமைக்கப்பட்டு விட்டது.
வினவு: வயது இதற்கு ஒரு தடையா?
நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது. நாற்பது வயதிலேயே ஓய்வு பெற்று விடுபவர்களும் உண்டு. ஐம்பத்தைந்து வயதில் ஜம்ப் அடிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போது இருப்பவர்களில் சீனியர் கேப்டன் குமார், 59 வயசிலும் ஜம்ப் அடிக்கிறார். அவருக்கு இதுதான் தொழில் என்றாலும் இப்போது பகுதி நேரமாக கப்பல்களில் ஒட்டியிருக்கும் கிளிஞ்சல்கள், பாசிகளை அகற்றுவது, மூழ்கிய படகுகளை மீட்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மீனவ சமூகத்தை சேர்ந்தவர்.
வினவு: சண்டை நடிகர்கள், ஜம்பர்களுக்கு சம்பளம் எவ்வளவு?
நித்தியானந்தன்: – படத்துக்கு படம், மாஸ்டருக்கு மாஸ்டர் அது வேறுபடும். ஆட்டோவில் மீட்டர் போட்டு ஓட்டச் சொன்னாலும் மேலே போட்டுக் கேட்கலையா அது மாதிரிதான் இங்கும். குறைந்தபட்சம் என ஒரு தொகையை யூனியன் முடிவு செய்திருந்தாலும் அதனை விட அதிகமாக பேசி முடிவு செய்வதும் உண்டு. லோ பட்ஜெட்டுன்னா அது கிடைக்காது.
மாஸ்டர்களுக்கு இருபதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். காட்சி ஒன்றுக்கு பத்தாயிரம் குறைந்தபட்சம் என்று ஊதியம் யூனியனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறையக் கூடாது. அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். எந்திரன் படத்திற்கெல்லாம் ஒன்றரை கோடி வரை ஒப்பந்தமாச்சுன்னு நினைக்கிறேன்.
சண்டை போடுபவர்களுக்கு காட்சி ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தியில் ஆறாயிரம் ரூபாய். ஜம்பருக்கு மூவாயிரம் ரூபாய். இது மூன்று நாட்களுக்கானது. அதற்கு மேல் காட்சியை எடுக்க ஆகும் நாட்களுக்கு பாதி சம்பளம் தரப்படும்.
வினவு: ஒருவருக்கு மாதமொன்றுக்கு எத்தனை நாட்கள் வேலை கிடைக்கும்?
நித்தியானந்தன்: யூனியனில் இருக்கும் 600 உறுப்பினர்களுக்கு இருநூறு பேருக்கு தினசரி வேலை கட்டாயம் இருக்கிறது. மற்றவர்களுக்கு சொல்ல முடியாதுதான். உயரம், எடை, கட்டுமஸ்தான தோற்றம், திறமைகள் இருந்தால் நிறைய வேலை கிடைக்கும்.
வினவு: சராசரியாக ஒருவருக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?
நித்தியானந்தன்: – அதை துல்லியமாக சொல்ல முடியாது. சில சமயம் சூட்டிங் இருக்கும், சில சமயம் இருக்காது. சில நேரம் சூட்டிங் இருந்தாலும் சண்டை போடுபவருக்கு ஓய்வு தேவைப்படும். ஆனாலும் ஓரளவு நன்றாக வேலை கிடைப்பவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை கிடைக்கும். எப்போதும் பிசியாக இருப்பவர்களுக்கு இருபதாயிரம் வரை கூட கிடைக்கும்.
வினவு: வெளியே மற்ற துறைகளில் உள்ள சம்பளத்தை ஒப்பிடும் போது இது குறைவாக இல்லையா?
நித்தியானந்தன்: அதெல்லாம் ஒப்பிடவே கூடாது. இரண்டாவது வேலை குறைந்து விட்டது. சூட்டிங்கும் பெரிதாக நடக்கவில்லை.
வினவு: நீங்கள் அப்படியொன்றும் ஆகா ஓகோவென சம்பாதித்து விட்டது போல தெரியவில்லையே?
நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது சார். நானெல்லாம் சம்பாதித்ததை மிச்சம் பண்ணியிருந்தால் வசதியாக மாறியிருக்கலாம். தினமும் இரண்டு படம் சூட்டிங் போவேன். ஆனால் அன்றன்று சம்பாதித்த பணத்தை ஆடம்பரமாகவும், ஜாலியாகவும் செலவழித்தே தீர்த்து விட்டோம். அதனால் தான் முன்னேற முடியாமல் போய் விட்டது. அப்போதும் கூட எல்லோருக்குமே தண்ணி பழக்கம் இருந்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் இப்போது வரும் பசங்க மிகவும் உசாராக இருக்கிறார்கள். மாறி விட்டார்கள்.
வினவு: மாஸ்டர்கள் படத்துல வேலை செய்யும் நிலைமை பற்றி சொல்லுங்களேன்.
நித்தியானந்தன்: குறைந்தபட்சம் சண்டை ஒன்றுக்கு ரூபாய் இருபதாயிரம் வரை வாங்க வேண்டும் என்பது விதி. சண்டை ஐந்து நாட்கள் வரை கூட எடுக்கப்படும். படம் ஒன்றுக்கு முழுக்கவும் ஒரே மாஸ்டர்தான் இருப்பார். படத்தின் பிரமாண்டம், சந்தையின் வீச்சைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடக் கூடும். மாஸ்டருக்கு சண்டை காட்சியுடன் கூடவே படத்தில் லொகேஷன் பார்ப்பது, நிர்வாகம் போன்ற சில வேலைகளும் உண்டு. நமது சென்னையில் 60 மாஸ்டர்கள் வரை இருக்கின்றனர்.
வினவு: நீங்கள் எப்போதிருந்து மாஸ்டர் ஆனீர்கள்?
நித்தியானந்தன்: 2008ல் இருந்து மாஸ்டர் ஆனேன். இதுவரை 30 படங்கள் பண்ணியிருக்கிறேன்.
வினவு: பிற மாஸ்டர்கள் பிசியாக இருக்கையில் வேலையை எடுத்து உங்களிடம் தரும் க்ளாஸ் ஒர்க் (சப் காண்ட்ராக்ட் அல்லது உள் ஒப்பந்தம்) முறை உண்டா? நீங்கள் அப்படி பண்ணியிருக்கிறீர்களா?
நித்தியானந்தன்: தருவார்கள். பண்ணியிருக்கிறேன். அப்படி தருகையில் அவர்களது பெயருக்கு இணையாக டைட்டில் கார்டில் கீழே எனது பெயரும் இருக்கும்.
வினவு: தமிழகம் போலவே பிற மாநிலங்களிலும் மாஸ்டர்கள் இருக்கிறார்களா?
நித்தியானந்தன்: ஆந்திராவில் 20 பேர், கர்நாடகாவில் பதினைந்து பேர், ஒரிசாவில், பாம்பேயில் சிலர் என இருக்கின்றனர்.
வினவு: கேரளாவில் இல்லையா?
நித்தியானந்தன்: கேரளாவுக்கு இங்கிருந்துதான் சண்டை நடிகர்கள் போகிறார்கள். காரணம் அங்கு மிகவும் ஈகோ பார்ப்பார்கள். கதாநாயகனிடம் செருப்பால் அடி வாங்க வேண்டுமென்றால் ‘ஐயோ, அதை ஏன் நான் வாங்க வேண்டும்’ என்று பதிலுக்கு எகிறுவார்கள். எனவே அதற்கெல்லாம் ஆட்கள் இங்கிருந்துதான் செல்கிறார்கள்.
வினவு: – சண்டைக் காட்சிகளுக்கு எந்தெந்த மாவட்டங்களில் இருந்து அதிகம் வருகிறார்கள். சென்னை மீனவர்கள் அதிகமாக இத்துறைக்கு வரக் காரணம் என்ன?
நித்தியானந்தன்: தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் வருகிறார்கள். எனினும் மொத்தமுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்தான். அதிலும் பெரும்பான்மை மீனவர்கள்தான். காரணம் அவர்கள் தைரியமானவர்கள் என்பதோடு, கடற்கரையில் நிறைய நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்க முடிவது தான்.
வினவு: – மீனவர் தவிர வேறு என்ன சாதியினர் வருகிறார்கள்? பெண் சண்டை நடிகர்கள் உண்டா?
நித்தியானந்தன்: அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லா சாதியில் இருந்தும் இத்தொழிலுக்கு வருகிறார்கள். சௌராஷ்டிரா சாதியினரும் உண்டு. முன்னாடிதான் பிராமின்ஸ் அரசு வேலை, ஐ.ஏ.எஸ்ன்னு போனார்கள். ஜிம்னாஸ்டிக், சண்டை திறமைகளை வளர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம். பிராமின்சில் இருந்து கண்ணன் என்று ஒரு பையன் இருக்கிறான். எனினும் சிறுபான்மையாகத்தான் இவர்கள் இருக்கின்றனர். முஸ்லீம்கள் சிலரும் உண்டு. பெண்கள் கிடையாது.
வினவு: பெண்கள் சண்டை நடிகர்களாக முன் வருவதில்லையா?
நித்தியானந்தன்: அப்படியெல்லாம் இல்லை. பெண்களுக்கு அதிகம் வாய்ப்பில்லை. தேவைப்பட்டா ஆண்களே அந்த வேடத்தை டூப் போட்டு நடித்து விடுவோம். அந்தக் காலத்தில் வந்த லேடி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எல்லாம் அப்படித்தான். மார்பகங்களை மாத்திரம் வைத்து, ஸ்டிரெச் போட்டு பேண்டுடன் நடித்தால் வித்தியாசமாக தெரியாது. ஆங்கில படத்தில் கூட இதுதான் நிலைமை. அவர்களை விட ஆண்களுக்கு தான் தைரியம் ஜாஸ்தி.
வினவு: நீங்கள் சண்டைக் காட்சிகளில் நடிப்பதை உங்களது வீடுகளில் இருக்கும் பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
நித்தியானந்தன்: எப்போதும் ஆபத்தில் இருப்பதால் பயத்துடன் தான் இருப்பார்கள். ஆனால் போக கூடாது என்றெல்லாம் தடுக்க மாட்டார்கள். இத்தனை நாள் இதை வைத்து தானே குடும்பம் நடத்தி இருக்கிறார்கள்.
வினவு: உங்கள் அப்பாவைப் பார்த்து நீங்கள் சண்டை போடுபவராக வந்தது போல உங்கள் மகனையும் இந்த துறைக்கு கொண்டு வருவீர்களா?
நித்தியானந்தன்: என் மகனும் சண்டைக்காரனாகத்தான் இருக்கிறான். ஐந்து வருடம் படம் பண்ணினான். இப்போது பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேசன் படிக்க அனுப்பியிருக்கிறேன். அதில் கொஞ்சம் வாய்ப்பிருப்பதால் பார்க்கலாம் என்று. இல்லேன்னா சண்டைதான் வேலை.
வினவு: சண்டை நடிகர்கள் எல்லோரும் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களா?
நித்தியானந்தன்: எல்லோரும் டிகிரி படிக்க வைக்கிறார்கள். தினேஷ் மாஸ்டர் பசங்களையெல்லாம் இஞ்சினியரிங் படிக்க வைத்தார். அவரு பையன் தான் வேலையில்லா பட்டதாரி படத்தில் மாஸ்டர். அவன் படித்து முடித்து விட்டு, எளிதாக இருக்கும், ஜாலியாக இருக்கும், வெளிநாடு எல்லாம் போகலாம் என்பதால் சினிமா சண்டை வேலைக்கே வந்து விட்டான்.
வினவு: உங்க வருமானத்த பாத்தா ஜாலி மாதிரி தெரியலையே?
நித்தியானந்தன்: அப்படியில்லை. சில பேருக்குதான் வாய்ப்பு கிடைக்கும். சினிமாவையே எடுத்துக் கொண்டால் எல்லா நடிகர்களும் வெற்றி பெறுவதில்லையே? சிலருக்கு குடும்ப பொறுப்புகள் ஜாஸ்தியா இருக்கும். என்னையே எடுத்துக் கொண்டால் தங்கைக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டியிருந்தது, அம்மாவை காப்பாற்ற வேண்டியதாயிற்று. சில பேருக்கு அந்த கமிட்மெண்ட்ஸ் எல்லாம் இருக்காது.
வினவு: சில காட்சிகளில் தவறுதலாக நீங்கள் கதாநாயகர்களை அடித்து விட்டால் அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
நித்தியானந்தன்: மன்னிப்பு கேட்போம். நம்ம மேல தப்பு இருந்தால் மாஸ்டர் திட்டுவார். அவங்க மேல தப்புண்ணா சமரசம் பண்ணி வைப்பார். இதுபோல நிறைய முறை நடந்துள்ளது.
வினவு: உங்களது அனுபவத்தில் காட்சிக்கு உகந்த முறையில் நன்றாக சண்டை போடும் கதாநாயகன் யார்?
நித்தியானந்தன்: – பிரபு சார், சரத் சார், அர்ஜூன் சார் எல்லோரும் நல்லா பண்ணுவாங்க. இருந்தாலும் ஒரு ஆக்சன், கிக் போன்றவற்றில் ஒரு லைவ்வான அனுபவம் பிரபு சாரிடம் தான் இருக்கும். காரணம் அவர் முறைப்படி குத்துச்சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு அதன் பிறகு தான் சினிமாவுக்கு வந்தார். அதனால் அவரது சண்டைக்காட்சிகள் பார்க்க அழகாக இருக்கும். முன்னாடியெல்லாம் இப்படி கற்றுக்கொண்டு வருவது பெரும்பாலும் கிடையாது. இப்போது வரும் நடிகர்கள் ஒரு வருடம் குத்துச்சண்டை, ஒரு வருடம் நடனம் என கற்றுக் கொண்டுதான் பிறகு நடிக்க வருகிறார்கள்.
வினவு: ஒன்றுமே தெரியாமல் வரும் நடிகர்களை சண்டை காட்சியில் இயக்க நிறைய சிரமப்படுவீர்களே?
நித்தியானந்தன்: அவருக்கு ஏற்றது போல சின்னச் சின்ன காட்சிகளாக வைத்து எடுப்போம். நேரம் அதிகரிக்கும். வேறு வழி இல்லை. அவரால் ஒரு சின்ன குத்து விட முடியாதா. அதை வைத்து வைத்து கடைசியில் திறமையாக சண்டை போடுபவராக திரையில் பார்க்கையில் கொண்டு வந்து விடுவோம்.
வினவு: இரண்டு அடி, நான்கு அடி உயரத்திலிருந்து கூட கதாநாயகர்கள் குதிக்க மறுத்து அடம்பிடித்தால் என்ன செய்வீர்கள்?
நித்தியானந்தன்: முதலில் ஆபத்து இல்லை என மாஸ்டர் கதாநாயகர்களிடம் சொல்லுவார். அப்புறம் பெட் எல்லாம் போட்டு எடுக்க முயற்சி செய்வார். அதிலும் காலில் பிரச்சினை என்று எதாவது கதாநாயகன் சொல்லி மறுத்து விட்டால் வேறு வழியே இல்லை. டூப் போட்டு எடுத்து விட வேண்டியதுதான்.
வினவு: இப்படி உண்மையில் பயந்தாங்கொள்ளிகளாகவும், திரையில் வீரன் போலவும் கதாநாயகர்கள் தோன்றுவதற்கு யார் மூல காரணம்?
நித்தியானந்தன்: சண்டை போடுபவர்கள் மற்றும் மாஸ்டர்கள் தான் காரணம். ஒரு பயந்தாங்கொள்ளியை பெரிய மாஸ் ஹீரோவாக காட்டுவது அவர்கள்தான். ஒரு படத்தில் கூட இதைப் பற்றி ஒரு காட்சி வந்தது. உண்மையில் பயந்தாங்கொள்ளியாக இருப்பவர் படத்தில் மட்டும் மாட்டை அடக்குவார், தலையால் முட்டுவார், தீக்குள்ளே குதிப்பார்.
வினவு: சினிமாவின் பிற துறைகளில் தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாக தருவதில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. உங்களுக்கு எப்படி?
நித்தியானந்தன்: அதெல்லாம் சரியாக கொடுத்து விடுவார்கள். அடுத்த படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் பணம் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்று விதி இருக்கிறது. வரவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் யூனியனிலிருந்து புகார் கொடுப்போம். பெப்ஸியில் புகார் கொடுப்போம். பிறகு இரு தரப்பையும் கூப்பிட்டு பேசுவார்கள். முடியவில்லை என ஒரு மாத காலம் வரை அவகாசம் கேட்டார்கள் எனில் அட்ஜஸ்ட் பண்ணிப் போய்க் கொள்வோம். எப்படியானாலும் படத்தை வெளியிடுவதற்கு முன் பணத்தை வாங்கி விடுவோம்.
வினவு: சண்டை காட்சிகளில் எம்ஜிஆர் காலத்து கதாநாயகர்களுக்கும் இப்போதுள்ள கதாநாயகர்களுக்கும் என்ன வித்தியாசம்?
நித்தியானந்தன்: அப்போது சிலம்பம், ஜூடோ போன்ற சண்டைகள் இருந்தால் முறைப்படி கற்றிருக்க வேண்டும். தெரியாம பில்டப் கொடுக்க முடியாது. இப்போது சண்டையே தெரியவில்லை என்றாலும் சண்டை தெரிவது போல காட்ட முடியும். அந்தக் காலத்துல மெனக்கெட்டு அந்தக் கலைகளை கற்றுக்கொள்ள தேவை இருந்தது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் கதாநாயகன் கொஞ்சமா காலை தூக்கினால் கூட உயரத்தை உயர்த்தி காட்ட முடியும். துறைமுகங்களில் எப்படி வேலைகள் எல்லாம் தொழில்நுட்பத்தால் இப்போது எளிதாகியிருக்கிறதோ அது போலத்தான். முன்னர் தீயில் குதிப்பதென்றால் உண்மையிலேயே குதிப்பார்கள். அதையெல்லாம் இப்போது தொழில்நுட்பம் வந்து எளிதாக்கியிருக்கிறது.
வினவு: தீ சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பது பற்றி சொல்லுங்களேன்.
நித்தியானந்தன்: உடம்பெல்லாம் துணியை சுற்றிக்கொண்டு, தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உடைகளை அதற்கு மேல் அணிந்து கொள்வோம். தலைக்கு, கண்களுக்கு என பாதுகாப்பு கருவிகள் இருக்கும். உடம்பு முழுக்க தீப்பிடிக்காமல் இருப்பதற்கான சொல்யூஷனை தடவிக் கொள்வோம். படம் எடுக்கையில் தீ மட்டும் தான் தெரியும், போட்டிருக்கும் உடைகளெல்லாம் தெரியாது. வெளியே வந்த உடன் கோணிப்பை, சீஸ் பயர் கொண்டு தீயை அணைத்து விடுவோம். முகங்களில் ஆங்காங்கு காயம், கொப்புளங்கள் ஏற்படலாம். தீயணைப்பு உடைகள் அளவில் சிறியனவாக இருப்பதால் ஒல்லியாக இருப்பவர்கள்தான் இதற்கு போக முடியும். இதில் நம்மிடம் நான்கைந்து பேர் வரை உள்ளனர். ஆபத்து என்பதால் எல்லோரும் இதற்கு முன்வர மாட்டார்கள். ஒரு தீக்காட்சி பண்ணினால் ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் இருக்கும்.
வினவு: எம்ஜிஆர் காலங்களில் சண்டை போடுபவர்கள் பக்கவாட்டில் கைகளை வீசி சண்டை போடுவதால் டைமிங் அதிகமாக இருக்கும். இப்போது ஜாக்கி ஷான் போன்றவர்களது சண்டை காட்சிகளில் நேரடியாக குத்து விடுவது போலவும், ஆக்ஷன் நேரம் குறைந்திருப்பதாக தெரிவது உண்மையா?
நித்தியானந்தன்: எல்லாமே சினிமா லென்சோட ஒளி சிதறடிப்புதான். மற்றபடி அனைவரது சண்டையும் ஒன்றுதான். இப்போது இது ட்ரெண்ட். அப்போது நடிகர்கள் கொஞ்சம் சத்தமாக பேசி நடிப்பார்கள். ஏன்னா அவங்க நாடகத்தில் இருந்து வந்தவர்கள். கடைசியில் உட்கார்ந்து கேட்பவனுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக அப்படி பயிற்சி பெற்றவர்கள். தொழில்நுட்பம் வளர்ந்தப்புறம் அது தேவைப்படவில்லை இல்லையா. அது போல்தான் இதுவும்.
வினவு: சண்டை நடிகர்களிடம் நட்சத்திர நடிகர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?
நித்தியானந்தன்: – எல்லோருமே அன்பாகவும், மதிப்பாகவும் தான் நடத்துவார்கள். ரஜினி சார், பிரபு சார், அர்ஜூன் சார், விஜயகாந்த் சார் என எல்லோருமே ஒவ்வொரு விதமாக நன்றாக நடத்துவார்கள். எல்லோருக்குமே சண்டை நடிகர்கள் என்றால் ஒரு மதிப்பு மரியாதை இருக்கும், நன்றாக பேசுவார்கள், ஒரு அடி பட்டால் வந்து என்ன ஏது என்று பார்ப்பார்கள். மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ராஜ்குமார் சார் என எல்லோருமே நன்றாகத்தான் நடத்துவார்கள்.
வினவு: இவர்கள் தனியாக உங்களுக்கு ஏதாவது பணம், பரிசு எனத் தருவார்களா?
நித்தியானந்தன்: சிலர் விருப்பப்பட்டு ஒரு சண்டைக் காட்சி முடிந்தால் நடிகர்கள் இளைப்பாற கொஞ்சம் பணம் கொடுப்பார்கள். பாக்யராஜ், சத்யராஜ் போன்றவர்கள் கட்டாயம் ஒரு சண்டைக் காட்சி முடிந்தவுடன் ரூ.200 தருவார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் ரஜினி சாரும் தருவார்.
வினவு: – மலையாளத்தில் இப்போது நடிகர்கள் சண்டையெல்லாம் கற்றுக்கொண்டு விட்டார்களா? யார் நன்றாக சண்டை போடுவார்கள்?
நித்தியானந்தன்: மோகன்லால் நன்றாக பண்ணுவார். இப்போது நிறைய இளைஞர்கள் வந்துள்ளார்கள். அவர்களில் பிரிதிவிராஜ் சார் நன்றாக பண்ணுவார்.
வினவு: சண்டைக் காட்சிகளில் புதிய ட்ரெண்டுகள், தொழில்நுட்பம் போன்றவற்றை ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்வீர்களா?
நித்தியானந்தன்: ஆமாம். என்ன மாதிரியான காட்சிகள், எவ்வளவு தூரத்தை, காலத்தை வைத்து எடுத்துள்ளார்கள் என்பதை கவனித்துக் கொள்வோம். குண்டு வெடிக்க என்ன தொழில்நுட்பம் புதிதாக வந்துள்ளது என்பதெல்லாம் அவற்றைப் பார்த்துதான் தெரிந்து கொள்வோம். மற்றபடி நேரடியாக அவர்களுடன் எல்லாம் எனக்கு தொடர்பில்லை. சிலருக்கு இருக்க கூடும்
வினவு: நீங்கள் பார்த்த சண்டை நடிகர்களில் உலகிலேயே மிகச் சிறந்தவர் யார்?
நித்தியானந்தன்: ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் பெஸ்ட். புரூஸ் லி ஒரு பவர். ஜாக்கி ஷான் அதை கிமிக்சோடு சேர்த்து செய்தார். இப்போது டோனி ஜா வந்திருக்கிறார். ஒவ்வொருத்தரும் முன்னர் இருந்தவர்களைத் தாண்டி இன்னொருபடி மேலே போய்தான் பண்ணியிருக்கிறார்கள்.
வினவு: சண்டைக் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர்கள் ஹாங்காங், சீனர்கள் என்று சொல்லலாமா?
நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது. ஹாலிவுட்டில்தான் நிறைய ரிஸ்க் எடுக்கிறார்கள். சீனர்கள் செய்வது எல்லாம் கிம்மிக்ஸ்தான். பாலத்தில் இருந்து குதிப்பது, விமானத்தில் இருந்து குதிப்பது, அருவியில் மேலிருந்து குதிப்பது போன்றவற்றையெல்லாம் அங்கு உண்மையிலேயே செய்கிறார்கள். கிராபிக்சில் எல்லாவற்றையும் கொண்டு வர மாட்டார்கள். இப்போது கூட ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஒருவன் அருவியில் இருந்து குதித்திருக்கிறான். ஏனெனில் அவன் ஏற்கெனவே அதற்கு பயிற்சி பெற்றவன். அதனால் எளிதில் பண்ணி விட்டான். என்றாலும் அதில் ரிஸ்க் அதிகம் இல்லையா?
வினவு: அதெல்லாம் இங்கு பண்ணுவதற்கு என்ன தடையாக இருக்கிறது?
நித்தியானந்தன்: பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. அவ்வளவு சம்பளமும் இங்கு தர முடியாது. ஹாலிவுட் வேறு, இது வேறு.
வினவு: தமிழில் சண்டை நடிகர்களைப் பற்றி இதுவரை படம் ஏதும் வந்துள்ளதா?
நித்தியானந்தன்: சசிக்குமார் எடுத்த டிஷ்யூம் திரைப்படம். இதில் எங்களது பிரச்சினைகள், கஷ்டங்கள், ஆபத்துக்களைப் பற்றிப் பேசியிருந்தார். அதுபோக பம்மல் கே. சம்மந்தம் ஒரு காமெடி படமென்றாலும் ஒரு சண்டை மாஸ்டரைப் பற்றி எதார்த்தமாக எடுத்திருந்தார்கள்.
வினவு: சண்டை மாஸ்டர்கள் குணச்சித்திர நடிகராக மாறிப் போவது இப்போது அதிகரித்துள்ளதா?
நித்தியானந்தன்: குறைவுதான். தினேஷ், பொன்னம்பலம், மணவை சங்கர், நந்தா சரவணன், முத்துக்காளை, ராஜேந்திரன் என சிலர்தான் போயுள்ளனர். சிலர் டிவி சீரியல்களுக்கும் நடிக்கப் போயுள்ளனர். இப்போது யூனியனுக்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. செல்பேசி வந்து விட்டதால் அடுத்து என்ன வேலை, சம்பளம் எல்லாவற்றையும் அதிலேயே பேசி முடிவு செய்து விடுகின்றனர்.
வினவு: சண்டை நடிகர்களை ரவுடிகளும், சில அரசியல் கட்சிகளும் தங்களது நலனுக்காக பயன்படுத்திக் கொள்வதாக சொல்கிறார்களே. உதாரணம் அயோத்தி குப்பம் வீரமணி, கபிலன் போன்றவர்கள். அதுபற்றி உங்கள் கருத்தென்ன?
நித்தியானந்தன்: அதெல்லாம் உண்மை கிடையாது. உறுப்பினர்கள் யாராவது இப்படியான செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் உடனடியாக உறுப்பினர் அட்டையை ரத்து செய்து விடுவார்கள். வழக்கு ஏதாவது வந்தால் உடனடியாக நீக்க மாட்டார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாக வேண்டும்.
பத்திரிகைக்காரர்கள் இதில் குழப்புகிறார்கள். சினிமாவில் வரும் துணை நடிகர்கள் வேறு, சண்டை போடுபவர்கள் வேறு, ரவுடியாக வருபவர்கள் வேறு. சண்டை போடுபவர்கள் எல்லோருமே உண்மையில் எந்த குற்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்க முடியாது. அப்படி சம்பந்தப்படும் பட்சத்தில் உறுப்பினர் அட்டை பறிமுதலாகும் என்பதால் பயந்து போய்தான் இருப்பார்கள். ரவுடிகளாக நடிப்பவர்கள் தனியாக இருக்கிறார்கள். அதில் இருப்பவர்கள் முடியெல்லாம் வளர்த்துக் கொண்டு தனியாக ஒரு ரவுடி போன்ற தோற்றத்தில் கம்பீரமாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவர்கள் தனி குரூப்.
வினவு: துணை நடிகர்கள் சங்கம் தங்களது சங்கத்தில் இல்லாதவர்களை நடிக்க வைத்தால் அதை எதிர்த்து போராடுகிறார்களே. அது போல நீங்கள் ஏன் எதிர்த்து போராடவில்லை?
நித்தியானந்தன்: அது படத்தின் இயக்குநரோட விருப்பம். அதில் எப்படி தலையிட முடியும்? அப்படி வந்தவர்களில் சிலருக்கு முன்னரோ, அதன் பின்னரோ ஒருவித குற்றப்பின்னணி இருக்கும். அப்படி இருப்பவர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராக முடியாது.
வினவு: சண்டை போடுபவர்களது சங்கத்திற்கு இது ஒரு கட்டிடம் தானா? எப்போது இதை கட்டினார்கள்?
நித்தியானந்தன்: இது ஒன்றுதான். முதலில் இது ஒரு குடிசையாக இருந்தது. 1968-ல் இக்கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டு எண்பதுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வினவு: இப்போது வேலைகள் பிரிந்து மலையாளம், தெலுங்கு ஆகியவற்றுக்கு போய் விட்டதால் இங்கு வேலை குறைந்து விட்டது. அஜீத்தின் வீரம் படத்தில் கூட இங்கிருந்து போனவர்கள் திரும்ப வேண்டியதாகி பிரச்சினை ஆனது. இதனை எப்படி தீர்த்துக் கொள்கிறீர்கள்?
நித்தியானந்தன்: மேல ஐகர்ப் இருக்கு. அதுக்கு கீழே பெப்ஸி இருக்கிறது. அதற்கு கீழே சங்கங்கள் இருக்கின்றன. பிரச்சினை வந்தால் முதலில் ஐகர்ப்பில் புகார் செய்வோம். அது பெப்சிக்கு வரும். சம்பந்தப்பட்ட மாநில சங்கங்களை கூட்டிப் பேசி சமரசம் செய்து வைப்பார்கள்.
வினவு: ஆனால் பிற இடங்களில் வைத்திருப்பது போல தமிழ்நாட்டுக்கு தனியாக தமிழ் பெயரில் சங்கம் அமைக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்களே?
நித்தியானந்தன்: – அப்படி இயக்குநர்கள் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு மொழியில்தான் படம் பண்ணுகிறார்கள். நாங்கள் அப்படி கேட்கவில்லையே. நாங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, பெங்காலி எல்லாம் பண்றோம். இந்திய அளவில் சண்டைக்காட்சிகள் பண்ணுகிறோம். நமக்கு எதுக்கு மொழி? சண்டையில் திறமை இருந்தால் எந்த மொழியில் வேண்டுமானாலும் படம் பண்ண முடியும்.
வினவு: கர்நாடாகா போன்ற மாநிலங்களில் இங்கிருப்பதைப் போல மாஸ்டர்கள் இப்போது வந்து விட்டார்களா?
நித்தியானந்தன்: இப்போது கொஞ்சம் வந்து விட்டார்கள். பெங்காலிலும், இந்தியிலும் கூட வந்து விட்டார்கள். முன்னாடி படம் எடுக்க வேண்டுமானால் ஒரு இயக்குநரிடம் குறைந்தபட்சம் பத்து வருசமாவது குப்பை கொட்ட வேண்டும். இப்போது டிஜிட்டல் கேமரா வந்து விட்டதால் பத்து பேரு பத்து இடத்தில் அவனவன் படம் எடுக்க ஆரம்பித்து விட்டான். முன்னாடி படத் தொகுப்பாளராகணும்னா பிலிம் ரோலை அடுக்கி ரோலை சுற்றி வைக்க வேண்டும். இப்போது செல்பேசியிலும், கணிணியிலும் படத்தொகுப்பை எளிதாக செய்ய கற்றுக்கொண்டு விடுகிறார்கள். அதே போல்தான் சண்டைப் பயிற்சியிலும். முன்னாடி ஒரு மாஸ்டரிடம் சில ஆண்டுகளாவது இருந்துதான் ஆளாக முடியும். இப்போது சில ஹாலிவுட் படங்களைப் பார்த்தே ஆளாகி விடுகிறார்கள். இது ஒரு புதுமையான அறிவு வளர்ச்சிதான். விசயம், தொழில்நுட்பம் இருப்பதால் எளிதாக எல்லோரும் கற்றுக்கொள்ள முடிகிறது.
வினவு: நீங்கள் எடுத்த 30 படங்களில் நன்றாக ஓடியது எந்தப் படம்?
நித்தியானந்தன்: நன்றாக ஓடியது என்று சொல்ல மாட்டேன். ஆனால் சண்டைக் காட்சிகள் பலரும் பாராட்டும்படி பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த திருத்தணி படம் பேசப்பட்டது. நான் அவன் இல்லை பார்ட் 2, மலையாளத்தில் லக்கிஜா போன்ற படங்களெல்லாம் பண்ணியிருந்தாலும் பெரிதாக இவையெல்லாம் ஓடவில்லை. ஆனால் என்னோட வேலை அதில் சுத்தமாக இருந்தது.
வினவு: மாஸ்டர், உங்களது பெயர் திரைப்படங்களில் எப்படி வரும்?
நித்தியானந்தன்: நித்தியானந்தன்தான் பேரு. டைட்டிலில் தீப்பொறி நித்யா என்றிருக்கும்.
வினவு: நீங்கள் எப்போது ஆரம்பித்து எப்போது ஜிம்னாஸ்டிக் பயிற்சியை விட்டீர்கள்? ஏன் ஒரு காலகட்டத்துக்கு பிறகு சண்டைப் பயிற்சியாளர்களுக்கும், மாஸ்டர்களுக்கும் தொப்பையுடன் உடம்பு போட்டு விடுகிறது?
நித்தியானந்தன்: நான் 1978-ல் பள்ளிப்படிப்பு முடித்த பிறகு ஆரம்பித்து பத்து பதினைந்து ஆண்டுகள் வரை பயிற்சி செய்தேன். பெரியளவில் இல்லாவிடிலும் சம்மர் ஷாட், சில தாவிக்குதித்தல்கள் மட்டும் பண்ணினேன். முதலில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஆக ஆக உடம்பு போட்டு விடுகிறது. திருமணம், சாப்பாடு போன்றவையும் காரணங்கள்தான் சார்.
வினவு: சினிமா துறையிலேயே மற்றவர்கள் உங்களது சங்கத்தில் இருக்கும் ஒற்றுமையை ஒரு பொறாமையோடு பார்க்கிறார்கள்? இந்த ஒற்றுமைக்கு காரணம் என்ன?
நித்தியானந்தன்: இது மற்ற வெளியாள் யாரும் நினைத்தாலும் பண்ண முடியாத கலை. மற்றவற்றையெல்லாம் அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் இது உயிரை பணயம் வைப்பதாக இருப்பதால் அதைப் பார்த்து மிரளும் தயாரிப்பாளர் ‘ஏய் முதல்ல அவனுக்கு காசக் கொடுய்யா’ என்று சொல்வான். ஏனெனில் எந்த தயாரிப்பாளரும் சண்டை பயிற்சியாளரின் வயிற்றில் அடிக்க மாட்டான். தாமதமாக வேண்டுமானால் பணம் கிடைக்கலாமே தவிர அப்படியெல்லாம் தராமல் ஒரேயடியாக போய்விட மாட்டார்கள்.
வினவு: தமிழ் சினிமா சண்டைப்பயிற்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான, முக்கியமான, மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டை போடுபவர் மற்றும் மாஸ்டர் யார்?
நித்தியானந்தன்: மாஸ்டர் ராஜசேகர், (பிட்சா, இவன் வேற மாதிரி என்ற படங்களெல்லாம் பண்ணியவர்) சமீபத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து மூன்று கண்ணாடிகளை உடைத்தார். அடுத்து மாஸ்டர் குமார். இவர் எகிறி குதிப்பது, தீயில் குதிப்பது எல்லாம் பயப்படாமல் செய்யக் கூடியவர். அந்தக் காலத்தில் சாம்பு என்று ஒரு மாஸ்டர் இருந்தார். முஸ்தபா என்று ஒருவர். நிறைய பேர் இறந்து விட்டார்கள். சிலர் இருக்கிறார்கள். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் இப்போதும் இருக்கிறார். அவர் நிறைய ஆபத்தான காட்சிகளெல்லாம் பண்ணியிருக்கிறார். படம் எடுக்கையில் பாதி உடம்பு தீயில் பற்றிக்கொள்ளும் விதமாக எல்லாம் பண்ணியிருக்கிறார்.
வினவு: இப்படி ஆபத்தான காட்சிகளில் பயம் தெரியாமல் இருப்பதற்காக பான்பராக் போடுவது, மது சிறிது அருந்திக்கொள்வது, வேறு போதை எல்லாம் செய்வீர்களா?
நித்தியானந்தன்: கிடையாது. பயமெல்லாம் ‘ஸ்டார்ட் கேமரா’ சொன்ன பிறகு சுத்தமாக இருக்காது. கயிற்றின் மேல் நடப்பவனைப் பார்த்தால் நாம்தான் பயப்படுவோம். அவன் அநாயசமாக நடப்பான். எல்லாமுமே பயிற்சிதான். கீழே இருந்து பார்ப்பவனுக்கு இருக்கும் பயம் அதை செய்பவனுக்கு இருக்காது. நமக்கே திரும்ப வந்து திரையில் அல்லது வீட்டில் உட்கார்ந்து பார்க்கையில் இதை நாமா பண்ணினோம் என்று ஆச்சரியமாக இருக்கும்.
வினவு: உங்கள் சங்க கட்டிடத்திற்கு ஏன் விட்டலாச்சார்யா பெயர் வைத்துள்ளீர்கள்? அதிகமான இடங்களில் எம்ஜிஆர் படம் வைத்துள்ளீர்கள்?
நித்தியானந்தன்: சங்கம் வைப்பதற்கு விட்டலாச்சார்யா தான் மூல காரணம். அவர்தான் சங்கம் வைக்க தூண்டுதலாக இருந்தார். அதை வைத்து தான் சம்பளத்தை பேசி முடிவு பண்ண முடியும் என்று எங்களுக்கு வழிகாட்டினார். எம்.ஜி.ஆர் படங்களில் 85% சண்டைக்காட்சிகள் இருக்கும் என்பதால் அதிகமாக எங்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார். அதனால் தான் வைத்திருக்கிறோம்.
வினவு: தற்போது சண்டை யூனியனில் சேருவதற்கு எவ்வளவு கட்டணம்?
நித்தியானந்தன்: இப்போது மூணேகால் லட்சம் கட்டினால்தான் சேர முடியும். அதுவும் நிறைய சோதனை, பயிற்சிகள்ள செலக்ட் ஆனாத்தான் கொடுப்பாங்க. ஏதாவது மாஸ்டர் அல்லது உறுப்பினரோட சிபாரிசும் வேண்டும். இருக்கிறவங்களுக்கே வேல அதிகம் இல்லேங்கிறதால இந்த கட்டணத்த அதிகரிச்சிருக்கிறோம். மத்தவங்களும் விரும்பி வருவதில்லை.
வினவு: வெளிநாடு படப்பிடிப்புக்கு உங்களை கூட்டிக்கொண்டு போனால் அந்த நாட்டு சம்பளம், இன்சூரன்சு எல்லாம் செய்து தருவார்களா?
நித்தியானந்தன்: இங்கேயே பேசி முடிவு செய்து கொள்வோம். சம்பளம் பெரும்பாலும் இங்கு 3 நாட்களுக்கு என்று இருப்பதை அங்கு போனால் ஒரு நாளைக்கு என்று பேசி முடிவு செய்து கொண்டுதான் கிளம்புவோம். முறையாக அங்கிருக்கும் கம்பெனிகளுக்கு சொல்லி அனுமதி பெற்று விட்டுதான் படப்பிடிப்பு துவங்கும்.
வினவு: நமது மாஸ்டர்கள் அங்குள்ள சண்டை நடிகர்களை பயன்படுத்துவது உண்டா?
நித்தியானந்தன்: அதுவும் நடக்கத்தான் செய்கிறது. உதாரணமாக பார்கோ, சுவரில் எகிறி எகிறி குதித்து அடிப்பது போன்றவற்றில் அவர்கள் நம்மை விட நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளுக்கு அந்த துறையில் சிறப்பாக பயிற்சி பெற்ற வெளிநாட்டவர்களைப் பயன்படுத்தி நம்மவர்கள் இயக்குகிறார்கள்.
வினவு: – உங்களுக்கு கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் வரவில்லையா? ஏன்?
நித்தியானந்தன்: எனக்கு விருப்பம் எல்லாம் இல்லை. அதுல டயலாக் பேசணும், பாடி லேங்குவேஜ் வேணும். அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். கஷ்டம்கிறதுக்காக எல்லாம் முயற்சி பண்ணாம இருக்கவில்லை. இதுவே போதும்ணு இருந்துட்டேன்.
வினவு: அப்படி ஒருவேளை இதெல்லாம் கற்றுக்கொண்டு போயிருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்குமா?
நித்தியானந்தன்: கிடைத்திருக்கும். பத்தில் ஒன்றாவது வெற்றி பெறத்தானே செய்யும். ஆனால் நான் முயற்சியே செய்யவில்லை. அப்படியே சின்ன சின்ன வேடமாக கிடைத்ததால் பெரிதாக எதையும் நினைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக