செவ்வாய், 29 ஜூலை, 2014

Solar மின்சக்தி கூரைகளில் பொருத்த புதிய நிபந்தனைகள் ! தமிழக மின்வாரியம் அறிவிப்பு !

கட்டிட மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி கருவி பொருத்து வதற்கான நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒருவர் தனது மின் இணைப்பின் திறனுக்கு அதிகமாக சூரிய மின் சக்தி கருவியை பொருத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சூரிய மின்சக்தி கொள்கை 2012-ன் படி, தமிழகம் முழுவதும் வீடுகள், அரசு கட்டிடங்களின் மேற்கூரையில் சூரிய மின் சக்தி கருவி பொருத்தி, மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் வீட்டு மின் உபயோகதாரர்கள், கைத்தறி நெசவாளர்கள், ஊட்டச்சத்து மையங்கள், ரயில்வே, ராணுவக் குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், தெரு விளக்குகள், திரையரங்குகள் உள்ளிட்ட வணிக கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் கட்டிட மேற்கூரையில் சூரிய சக்தி கருவிகளை பொருத்த முடியும்.
சூரிய சக்தி கருவி பொருத்த விரும்புவோர், அந்தந்த பிரிவு மின் செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி, அதற்கான தனி விண்ணப்பத்தை கொடுத்து அனுமதி கோர வேண்டும். தொழில்நுட்ப ரீதியாகவும், நுகர்வோருக்கான மின் பகிர்மான டிரான்ஸ்பார்மரில் 30 சதவீதம் மின் திறன் சேர்க்க இடமிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு 10 நாட்களில் அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
சம்பந்தப்பட்ட நுகர்வோர் தங்களது மின் இணைப்பின் மின் திறனுக்கு அதிகமான திறனில் சூரிய சக்தி கருவிகளை பொருத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது. மேற்கூரை சூரிய சக்தி அனுமதி பெறுவோர், இரட்டை வழிக் கணக்கீட்டு மீட்டரை கண்டிப்பாக பொருத்த வேண்டும். கணக்கீட்டாளர்கள் மின் உற்பத்தி அளவையும் பயன்பாடு அளவையும் தனியாகக் கணக்கீடு செய்து, உற்பத்தி அளவை பயன்பாட்டில் கழித்து, மீதம் கட்டணம் செலுத்த அறிவுறுத் துவர். உற்பத்தி அளவு அதிகமாக இருந்தால், அடுத்த கணக்கீட்டின்போது, மீதமுள்ள யூனிட்கள் கழிக்கப்படும். இதேபோல் அதிக அளவு உற்பத்தி இருந்தால், ஒரு ஆண்டுக்குள் அவை கழிக்கப்பட்டு, ஆண்டு இறுதியில் மின் நுகர்வோருக்கான உற்பத்தி தொகை வழங்கப்படும். இதுகுறித்து பின்னர் விரிவான அறிவிப்பு வெளியாகும்.
சூரியசக்தி குறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர், சூரியசக்தி அமைப்புகள் பொருத்த அனுமதிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் தமிழக மின் வாரிய இயக்ககம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்களை அணுகலாம். இந்தத் தகவல்களை மின் வாரிய உயரதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.http://tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: