hindutamil.in :: பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், ‘‘அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது’’ என்று திமுக எம்.பி. கனிமொழி சோமு தெரிவித்திருப்பது, கூட்டணி குறித்த யூகங்களை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.
கூட்டணியில் இருந்து பிரதான கட்சிகள் அனைத்தும் விலகிய நிலையில், பாஜகவுடன் திமுக திடீர் நெருக்கம் காட்டி வருவதாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக முதல்வர் விஜய் தலைமையில் 8-ம் தேதி நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தையும் திமுக புறக்கணித்ததால், அந்த மசோதா மற்றும் மத்திய பாஜக அரசின் ஆதரவு மனப்பான்மைக்கு திமுக மாறி வருவதாக கருத்து பரவி வருகிறது.
இந்நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 8-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை துறைமுகம் தொகுதியில் நேற்று நடைபெற்ற ரத்ததான முகாமை திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரு எம்.பி.கூட இல்லாத தவெகவுக்கு தொகுதி மறுவரையறை குறித்து பேசவோ, ஆலோசனைக் கூட்டம் நடத்தவோ எந்த முகாந்திரமும் இல்லை.
இந்த விஷயத்தில் திமுகவிடம் அவர்கள் ஆலோசனை கேட்பதிலும் தவறு இல்லை. கூட்டணியில் கலந்துபேசி, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து, என்ன பேச வேண்டும் என அலசி ஆராய்ந்து பேசியிருந்தாலும் பரவாயில்லை. அப்படி எதுவும் அவர்கள் செய்யவில்லை.
மேலும், தமிழகத்துக்கு அதிகப்படியான நாடாளுமன்றத் தொகுதிகள் வரவேண்டும் என்பதுதான் எப்போதுமே திமுகவின் கொள்கையாக இருந்தது.
இன்று நேற்று அல்ல, தொகுதி மறுவரையறை என்பதை கொண்டுவந்த காலகட்டத்தில் இருந்து இன்றுவரை தமிழகத்துக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதில் திமுக மிக தெளிவான நிலைப்பாட்டில்தான் உள்ளது.
அதேநேரம், அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது. தமிழகத்துக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதை கண்டிப்பாக ஆமோதிப்போம், வரவேற்போம்.
தொகுதி மறுவரையறையில் நமக்கு எவ்வளவு அதிகப்படியான இடம் வாங்க முடியுமோ அதை நிச்சயமாக கேட்டு வாங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
கனிமொழி சோமு இவ்வாறு கூறியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைதளத்தில், ‘அப்படியா, நேற்று எம்.பி.க்கள் கூட்டத்துக்கு ஏன் வரவில்லை என்ற உண்மை இப்போதான் வெளியே வருது’ என்று பதிவிட்டுள்ளார்.
அதற்கு கனிமொழி சோமு, ‘கூட்டம் கூட்டினால் யார் வருவார்கள் என்ற புரிதல் இல்லாமல் கூட்டப்பட்ட கூட்டம்’ என்று விமர்சித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக