ilakkiyainfo.com : தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரே லிய--அமெரிக்க காட்டுமிராண்டி போரின் மீது உலகக் கவனம் திசை திரும்பியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி மற்றும் ஆயுத உதவிகளோடு சூடானில் அரங்கேறி வரும் இனப் படுகொலைகள் காரணமாக சூடான் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்ளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ஏப்ரல் 2023 இல் மோதல்கள் மூண்டதில் இருந்து 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள். அண்டை நாடான சாட், எகிப்து மற்றும் தெற்கு சூடானுக்கு தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியன்களுக்கும் அதிகமாகும்.
2021 ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு நிறுவப்பட்ட, இடைக்கால நிர்வாகத்திற்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் விளைவாக 2023 ஏப்ரல் 15 அன்று மோதல்கள் தொடங்கின.
RSF leader Mohamed Hamdan 'Hemedti' Dagalo, left, and army chief Abdel Fattah al-Burhan, right
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சூடான் அரசாங்கத்தின் படைகளான ஜெனரல் அடெல் ஃபத்தா அல்-புர்ஹானின் தலைமையிலான, சூடான் ஆயுதப் படைகள் (the Sudanese Armed Forces -SAF) மற்றும் இராணுவ துணைக் குழுவான ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ மூசா தலைமையிலான துரித ஆதரவு படைகள் (he paramilitary Rapid Support Forces -RSF) என்பனவே அதிகாரத்துக்காக மோதலில் ஈடுபட்டுள்ளன.
இன்றைய நிலையில் துணை இராணுவக் குழு தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அரசாங்கத்திற்கு எதிராகவே இந்த மோதல்கள் உள்ளன.
முன்னாள் சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரின் மூன்று தசாப்த கால ஆட்சிக்கு இராணுவம் முடிவு கட்டியதன் மூலம், முன்னாள் சர்வாதிகாரிக்கு எதிரான நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கம் ஓய்வுக்கு வந்தது. இருந்தாலும் சூடானின் தற்போதைய நெருக்கடி 2019 இல் இருந்தே அவதானிக்கத் தக்கதாக இருந்தது.
2021 ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து சூடான் இராணுவத்தோடு ஆர். எஸ். எவ். பிரிவை ஒருங்கிணைப்பது தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெற்றன. அதில் ஏற்பட்ட பல முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே தற்போது நடந்து வரும் மோதல்கள் மூண்டன. ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எவ். தாக்குதல்கள் தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற நகரங்களில் உள்ள அரசாங்க தளங்களை குறிவைத்தன. இந்த மோதல் கார்ட்டூம் பிராந்தியத்தில் தொடங்கி பின்னர் இன்னொரு முக்கிய இடமான டார்பர் பிராந்தியத்திற்கும் பரவியது.
குடியிருப்பு பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதால், மக்கள் நகரங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர். வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றின. மருத்துவமனைகள் மூடப்பட்டன. மற்றும் தலைநகர் கார்ட்டூம் முழுவதும் இறந்த உடல்கள் தெருக்களில் சிதறிக் கிடந்தன. 2025 பெப்ரவரி நிலவரப்படி, மோதல் 12 மில்லியன் மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைத்துள்ளது. 3.5 மில்லியன் பேர் நாட்டை விட்டு அகதிகளாக தப்பிச் சென்றனர். இது சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய இடப்பெயர்வு நெருக்கடிகளில் ஒன்றாகும்.
25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்லது சூடானின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
"இன்று சூடான் உலகின் மிகப் பெரிய இடப்பெயர்வு மற்றும் மோசமான மனிதாபிமான நெருக்கடி மிக்க நாடாக மாறி உள்ளது. கடந்த பல தசாப்தங்களாக நீடித்த மிக கடுமையான உலகளாவிய நிதி நெருக்கடியை அடுத்து இந்தப் பிரச்சினை தலை தூக்கியுள்ளது” என்று கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்காவுக்கான UNHCR இன் பிராந்திய இயக்குனர் மமடோ டியான் பால்டே, ஜெனிவாவில் நிருபர்களிடம் பேசும் போது கூறினார்.
ஐ.நா. அறிக்கைகள், பல்வேறு உளவுத்துறை மற்றும் மனித உரிமைகள் விசாரணைகள் மூலம் கிடைக்கப்பெரும் பல சான்றுகள், ஐக்கிய அரபு இராச்சியம் தான் (யூ.ஏ.ஈ) இந்த மோதலைத் தூண்டி வரும் ஒரு முதன்மையான வெளிப்புற ஆதரவாளர் என சுட்டிக்காட்டுகின்றன. துணை இராணுவ மற்றும் துரித ஆதரவு படைகளுக்கு அதி நவீன ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் தளவாட ஆதரவை ஐக்கிய அரபு இராச்சியம் முறையாக திட்டமிட்ட வகையில் வழங்கியுள்ளது.
இந்த ஆதரவுகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஆர்.எஸ்.எவ், குறிப்பாக டார்பூரில் உள்ள அரபு அல்லாத சமூகங்களுக்கு எதிராக, இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப் படுகொலைகளில் ஈடுபட்டதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது ஆதரவுக்கு ஈடாக, ஐக்கிய அரபு இராச்சியம் சூடானில் இருந்து கடத்தப்படும் தங்கத்தை பெற்றுக் கொள்ளும், முதன்மை இடமாக செயல்படுவதன் மூலம் மிகப் பெரிய அளவில் பொருளாதார ரீதியான பயன்களை அடைகின்றது.
2025 ஆம் ஆண்டில், தனது நாட்டில் இனப் படுகொலையில் உடந்தையாக இருந்ததாகக் கூறி சூடான், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் (ஐ. சி. ஜே) வழக்குத் தொடர்ந்தது. ஆனால், இந்த விடயத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், இந்த வழக்கு இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட இன்னும் சில அமைப்புகளின் அறிக்கைகள், சூடானில் ஆர்.எஸ்.எவ். உடன் இணைந்து போராட, கொலம்பிய கூலிப் படையினரை அபுதாபியை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனங்கள், எவ்வாறு பயிற்றுவித்து அனுப்பியுள்ளன என்ற விவரங்களை வெளியிட்டுள்ளன.
ஆர்.எஸ்.எவ் இன் யுத்த இயந்திரத்திற்கு நிதியளிக்கும் வகையில் சூடானில் இருந்து கடத்தப்படும் தங்கத்தை, பெருமளவில் இறக்குமதி செய்து, வர்த்தகம் செய்வதன் மூலம் ஐக்கிய அரபு இராச்சியம் பொருளாதார ரீதியாக பெரும் பயனடைகின்றது என்பதை விசாரணைகள் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
சூடானில், போர் புரிவதற்கான ஒரு முக்கிய உந்து சக்தியாக தங்கம் இருந்து வருகின்றது. ஆர்.எஸ்.எவ். தங்க வர்த்தகத்தில் மிகவும் ஆழமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால், இரு தரப்பினரும் தங்கள் போர் இயந்திரங்களுக்கு எரிபொருளாக பெரிய அளவிலான தங்கத்தை கடத்தி விற்பனை செய்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியம் தற்போது இந்த வர்த்தகத்தின் மூலம் பயனடைகின்றது.
2023 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், 2022 ஆம் ஆண்டின், தகவல்களின்படி அந்த ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் சூடானில் இருந்து 39 தொன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 2 பில்லியன் டொலருக்கும் அதிகமாகும். மேலும் சூடானிய தங்கத்தின் நேரடி ஏற்றுமதி இன்றும் தொடர்கின்றது. இந்த வர்த்தகத்தின் மோசமான பங்காளிகள் சூடானிய தங்கத்தை சாட், எகிப்து, எத்தியோப்பியா, தெற்கு சூடான் மற்றும் உகாண்டாவுக்கு கடத்துகின்றார்கள். இவை அனைத்தும் இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கே விற்கப்படுகின்றன.
ஐ.நா.வின் வர்த்தகத் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்த வழித்தடங்கள் வழியாக 60 டொன்களுக்கு மேலான தங்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தை வந்தடைந்துள்ளது. மே 2023 வணிக தரவு ஆலோசனை அறிக்கை படி, சூடானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் "கிட்டத்தட்ட அனைத்து" தங்கத்தையும் இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியமே பெற்றுக் கொள்கின்றது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
சூடானில் இனப்படுகொலைக்கு ஐக்கிய அரபு இராச்சியம் நிதியுதவி மற்றும் ஆயுதம் என்பனவற்றை வழங்குகின்றது என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் குவாடியன் கட்டுரையாளர் நெஸ்ரைன் மாலிக் இந்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நிலையில் சூடானில் உள்ள எல்-ஒபீட் நகரத்தைத் தாக்க துணை இராணுவப் படைகள் தயாராகி வருகின்றன என்ற அச்சம் அதிகரித்து வருவதால், "அட்டூழியங்களைத்" தடுக்க சர்வதேச நடவடிக்கைக்கு சிவில் சமூகக் குழுக்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.
துரித ஆதரவு படைகள் (ஆர்.எஸ்.எவ்.) எல்-ஒபீட் நகரின் மீது தாக்குதல் நடத்தப் போகின்றன என்ற அச்சம் அதிகரித்து வருவதால், 38 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் "அட்டூழியங்களைத் தடுப்பதற்கும் பொறுப்புக் கூறலுக்கும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு" ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளன. ஒரு திறந்த கடிதத்தின் மூலம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளினால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், எல்-ஒபீட் நகரம் 18 மாதங்களாக "முற்றுகை போன்ற இடர் நிலைமைகளை" எதிர் கொண்டுள்ளதால், "... ஆர்.எஸ்.எவ். மற்றும் அவர்களின் நட்பு படைகளால், இந்த நகரின் மீது உடனடி தரைவழி தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது" என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
"ஒரு சுயாதீனமான ஐ.நா. உண்மையை கண்டறியும் குழு ஒன்றை நியமித்து, இந்த நிலைமை குறித்து அவசர விசாரணைகளை நடத்துமாறு" மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.
"மேலும் அட்டூழியங்களைத் தடுப்ப தற்காக", தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட மனித உரிமை ஆணைக்குழுவில் உள்ள, போரிடும் தரப்புகளை ஆதரிக்கும், ஏனைய எல்லா நாடுகளையும் பாரபட்சமின்றி கண்டிக்க வேண்டும் எனவும் அவை அழைப்பு விடுத்துள்ளனன.
அதேபோல் ஆர்.எஸ்.எவ், அல்லது சூடானின் இராணுவம் அல்லது ஏனைய போரிடும் தரப்புகளை ஆதரிக்கும் சகல வெளிப்புற சக்திகளும் "அவர்கள் செய்த அல்லது செயல்படுத்திய உரிமை மீறல்களுக்காக கண்டிக்கப்பட வேண்டும், அவற்றில் சில சர்வதேச சட்டத்தின் கீழ் யுத்தக் குற்றங்களுக்கு சமனானவை" என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
லத்தீப் பாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக