சனி, 15 நவம்பர், 2025

புதுக்கோட்டை திமுக தூண் பெரியண்னன் நினைவு பகிர்வு

No photo description available.

 சுப.மோகன் ராஜ் : மரியாதைக்குரிய புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட கழக செயலாளர், தலைவர் கலைஞரின் புலிப்போத்து, 89ல் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், மீண்டும் 96லும் அங்கே வெற்றி பெற்று கழக அரசின் கொறடா வாக பொறுப்பு வகித்தவர்,
89 சட்டமன்ற தேர்தலில் பணபலத்தால் தேர்தலை எதிர்கொண்ட ஆர்எம்.வீ யை தன்னுடைய தொண்டர்கள் பலத்தால் வெற்றி கொண்டவர். 
91ல் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும் கழகம் அறிவித்த வேட்பாளர் மட்டையம்பட்டி விஎன்.மணி அவர்களுக்காக சுற்றி சுழன்று பணியாற்றியவர். கெடுவாய்ப்பாக அன்றைய சூழலில் ராஜீவ் மரணத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழல் கழக வேட்பாளரின் வெற்றியை பாதித்தது.
93ல் மதிமுக பிரிவினையின் போதும் கழகத்தை கட்டிக்காத்த பெருமை அமரர் பெரியண்ணன் அவர்களுக்கு உண்டு.
96 தேர்தலில் வெற்றிபெற்று கழக அரசின் கொறடாவாக பொறுப்பு வகித்த நேரத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.


இதில் இன்னொரு செய்தி உண்டு 96 உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமதுகனி அவர்கள் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்,
91 ராஜீவ் மரணத்தின் போது கழகத்தினருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் தொண்டர்கள் தேர்தல் வேலையை துவக்காமல் சுணக்கம் காட்டிய போது தனக்கு இருந்த உடல் நல கோளாறுகளையும் பொருட்படுத்தாமல் வார்டு வார்டாக சென்று கூட்டணி அறிவித்த வேட்பாளரை வெற்றி பெற வைத்தார். அவருக்கு இருந்த சர்க்கரை நோய் காரணமாக கால்களில் காயம் வந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அவரால் அரசியலில் பாலபாடம் பயின்றவர்கள் தான் அவருக்கு பின்னாட்களில் இயக்கத்தை நடத்தினார்கள். அத்தகைய வளர்ப்பு அவருடையது. அவர்களில் சிலர் அவருக்கு எதிராக போன சம்பவங்களும் உண்டு ஆனால் அனைவரையும் அரவணைத்து சென்ற மாவீரர் பெரியவர் பெரியண்ணன்.
கட்சி தொண்டன் உதவி என்று வந்தால் அதை செய்யாமல் ஓய மாட்டார், கழக தொண்டர் ஒருவர் தன் மகளுக்கு திருமணம் வைத்து உதவி தேடி வந்த போது அலுவலகத்தில் இருந்த பீரோ, மேசை நாற்காலிகளை எடுத்து கொடுத்தவர். இன்னும் அவரோடு உடன் பயணித்தவர்கள் சொல்கிற செய்திகள் எல்லாம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.
நெருக்கடி கால சிறைவாசம் அனுபவித்தவரை காண அவரின் தாயார் வந்து சென்ற பொழுது தவறி விழுந்து இயற்கை எய்தினார், மாவீரர் பரோலில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
பெரியண்ணன் மாவட்ட செயலாளராக இருந்து சொத்து சேர்க்கவில்லை தொண்டர்களை தான் சேர்த்து வைத்திருந்தார். சத்தியமூர்த்தி விடுதியில் அவர் அறைக்கதவு எந்நேரமும் தொண்டர்களுக்கு உதவ தயாராக திறந்திருக்கும்.
இத்தகைய போற்றுதலுக்குரிய மாவட்ட கழக செயலாளர் கட்சிப் பணி இங்கே தொடங்கியது கிடையாது, அது இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொழும்பு நகரில் லண்டன் கிராண்ட் பாஸ் பகுதியின் இலங்கை திமுக செயலாளராக தொடங்கியது. அங்கே திமுக தடை செய்யப்பட்டது சிங்கள காடையர்கள் அவர் மீது கொதிக்கும் தாரை ஊற்றினார்கள்.
பிறகு இந்தியா வந்து ஆலங்குடி பகுதியில் கழகப்பணியாற்றினார், இந்தியாவிலே பெரிய ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பு வகித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் 74ல் உருவாக்கப்பட்ட பிறகு முதல் மாவட்ட செயலாளர் அவர் இறக்கும் வரை அந்த பொறுப்பை செம்மையாக செய்தார்.
90 காலகட்டத்தில் மிகப்பெரிய சோதனைகள் அவரை நெருக்கிய காலத்திலும் மீண்டும் மாவட்ட கழக செயலாளராக வெற்றி பெற்றார்.
அவருடன் பணியாற்றிய மூத்த முன்னோடிகள் அய்யா அறந்தாங்கி ராசன், வைகோ ராஜன் போன்றவர்கள் இன்றும் நம்மிடையே வழிகாட்டிகளாக உள்ளனர்.
சொல்வதற்கு எவ்வளவோ செய்திகள் உள்ளன. நாம் காதில் மற்றவர்கள் சொன்ன செய்திகளை அனுபவங்களை கேட்கும்போதே அந்த பேருணர்ச்சியை விவரிக்க முடியாது. அவருடன் களத்தில் கழகத்தில் பணியாற்றியவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள்.
அமரர் மாவீரர் பெரியவர் பெரியண்ணன் அவர்களுடைய 29வது நினைவஞ்சலியில் நாம் எடுத்துக்கொள்கிற உறுதி என்பது இனமானம் காக்க இயக்கத்துடன் இணைந்து நிற்பது என்பதே.
வாழ்க மாவட்டம் பெரியண்ணன் புகழ்,
வளர்க அவர் ஈன்றதணைத்துமான புதுக்கோட்டை மாவட்ட கழகம்.

கருத்துகள் இல்லை: