திங்கள், 16 ஜூன், 2025

போயிங் Boing விமானங்களில் உள்ள பாதுகாப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜான் பார்னெட் உயிருடன் இல்லை.

May be an image of 2 people, aircraft and text that says 'QBOEING HASSSTE ABDEING Q BDEING'

 மருது பாண்டியன்.  :  Arunachalam R :  அகமதாபாத் விமான விபத்து உணர்த்தும் உண்மைகள்!
உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியான அமெரிக்காவை சேர்ந்த ராணுவ கார்ப்பரேட் நிறுவனமான போயிங் உலகின் விமான உற்பத்தி பணியிலும், ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் முன்னிலையில் உள்ளது.
தற்போது அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணம் செய்வதற்கு இருந்த விமானம் போயிங் ரக விமானம்தான். இத்தகைய போயிங் ரக விமானங்கள் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்று பல காலகட்டங்களில் அதன் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும், தொடர்ச்சியாக இந்திய ஒன்றிய அரசாங்கம் அது ஏற்கனவே ஆண்ட காங்கிரசானாலும் சரி, தற்போது ஆண்டு வருகின்ற பாசிச பாஜகவானாலும் சரி போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு ராணுவங்கள் தளவாட உற்பத்தி முதல் பயணிகள் விமானங்கள் வரை அனைத்தையும் வாங்கி குவிக்கின்றனர்.


போயிங் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை ஏற்கனவே அந்த ராணுவ கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வெளியேறிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பார்னெட் முன்வைத்துள்ளார்.
அவர் கடந்த 2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் வடக்கு சார்லஸ்டன் பகுதியில் அமைந்துள்ள போயிங் ஆலையில் தரக்கட்டுப்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வந்தார். அப்போதே அவர் போயிங் நிறுவனத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்ச்சியாக குறைந்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
போயிங் ரக விமானங்களில் உள்ள குறைபாடுகள் கவனிக்கப்படாமல் உற்பத்தி இலக்கை மட்டும் அடைய ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் போயிங் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
அது மட்டுமின்றி ஆபத்துக் காலத்தில் நான்கில் ஒரு ஆக்சிஜன் மாஸ்க் வேலை செய்யாமல் போகலாம் என்றும் தெரிவித்திருந்தார். போயிங் கட்டுமான பணியின் போது சில பாகங்கள் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்றும், இது மோசமான பாதுகாப்பு சோதனைகளை காட்டுவதாகவும் ஜான் பார்னெட் கூறியிருந்தார்.
இந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விமான ஒழுங்குமுறை ஆணையமான பெடரல் ஏவிகேஷன் நிர்வாகம் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைப்பிடம் அவர் புகார் செய்ததை தொடர்ந்து அந்த குறைபாடுகளை சரி செய்ய போயிங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
உலகின் மிகப்பெரிய ராணுவ கார்ப்பரேட் நிறுவனமான போயிங் நிறுவனத்திற்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜான் பார்னெட் தற்போது உயிருடன் இல்லை.
அவர் 2024 ஆம் ஆண்டு தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லஸ்டன் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு வெளியே வந்த நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
‘போயிங் 787 – 8 ட்ரீம் லைனர்’ ரக விமானங்கள் குறித்து மற்றொரு அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் உண்மையை முன் வைத்துள்ளார்.
◾போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும் என பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.
◾அதன் உற்பத்தியில் சில குறைபாடுகளை கவனித்தேன், 2 Fuselage எனப்படும் விமான பாகங்களை இணைக்கும்போது, சரியான இணைப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை.
◾பொருந்தாத பாகங்கள் மீது ஊழியர்கள் ஏறி குதித்து அவற்றை சரி செய்தனர். ஆயிரக்கணக்கான பயணங்களுக்குப் பின் இந்த குறைபாடு பேரழிவை ஏற்படுத்தும்.
◾மாசுபடிந்த குழாய்கள் விமானத்தின் ஆக்ஸிஜன் அமைப்பில் பொருத்தப்படுகின்றன, அவை முறையாக சுத்திகரிக்கப்படாவிட்டால் பெரும் வெடி விபத்துக்கு வழிவகுக்கும்” போன்ற அம்சங்களை சுட்டிக்காட்டி பாதுகாப்பு குறைபாடுகளை விமர்சித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
தற்போது அகமதாபாத் முதல் லண்டன் வரையிலான பயணத்தில் இருந்த ஏர் இந்தியா விமானமான போயிங் 787-8 ட்ரீம் லைனர் வகை விமானம். அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேரும் தீயில் கருகி இறந்தனர். அந்த விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திற்கு அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி ஒன்றில் மோதியதால் அந்த விடுதியில் தங்கி இருந்த பயிற்சி மருத்துவர்கள் 10 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஏஐ 171 அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட 3 நிமிடங்களில் நண்பகல் 1:38 மணிக்கு விமான பணியாளர்கள் மற்றும் 242 பயணிகளுடன் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் வகையைச் சேர்ந்த இந்த விமானத்தில் 169 இந்திய பயணிகளும், 53 இங்கிலாந்து பயணிகளும், போர்த்துக்கீச நாட்டைச் சேர்ந்த ஏழு பேரும், ஒரு கனடா நாட்டைச் சேர்ந்த பயணியும் பயணித்தனர்” என்கிறது அதன் அறிக்கை.
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி முதல் இந்தியா மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா பயணிகள் வரை பல்வேறு தரப்பினரும் பயணம் செய்த அந்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து நாம் வருந்துகிறோம்.
ஆனால் இத்தகைய விமான விபத்தில் இறந்தவர்களைப் பார்ப்பதற்கும், அவர்களுக்கு ஓடோடி சென்று உதவி செய்வதற்கும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் முதல் உள்துறை அமைச்சர் வரை முன்னணியில் நின்று செயல் புரிவது அவர்களின் வர்க்க புத்தியையும், பாசத்தையும் காட்டுகிறது.
இதே சமகாலத்தில் தான் பஸ்தாரில் காரேகுட்டலூ மலைத்தொடர் பகுதியில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும், மலைத்தொடரின் கீழே புதைந்து கிடக்கின்ற கனிம வளங்களை பாதுகாப்பதற்காகவும் போராடி வருகின்ற மாவோயிஸ்டுகள், அதன் பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் உட்பட 35 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் உடலை பெறுவதற்கு அவர்களது உறவினர்கள் ஆந்திராவில் இருந்து சத்தீஸ்கர் சென்றனர்.
அவர்கள் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இறந்து போனவர்கள் உடலை கூட அவர்களுக்கு கொடுக்காமல் ரகசியமான முறையில் எரித்து அதன் சாம்பலை மட்டுமே அவர்கள் உறவினர்களுக்கு கொடுத்தனர்.
நாட்டின் பெரும்பான்மை மக்களுக்காக போராடுகின்றவர்களின் உடல், அவர்களின் உயிர் அவ்வளவு மலிவானதாக பாசிச மோடி கும்பலுக்கு போய்விட்டது. அதேசமயம் வர்க்க ரீதியாக அவரது உடலும், மனமும் விமான விபத்தில் பலியிட்டவர்களுக்காக கண்ணீர் வடிக்கின்றது.
இதுவும் கூட மக்களுக்கு விடப்படும் கண்ணீர் அல்ல. போயிங் ரக விமானங்களின் மீது இந்தியர்கள் கேள்வி எழுப்பி விடக்கூடாது என்ற அச்சத்துடன், பதட்டத்துடன், போயிங் என்ற ராணுவ பகாசுர கார்ப்பரேட் நிறுவனத்தை பற்றி குறை கூறி விடக்கூடாது என்ற வர்க்க பாசத்துடன் வெளிவருகின்ற அக்கறை என்றே நாம் பார்க்க முடியும்.
பாசிச கூடாரமான ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முகாமிலிருந்து திருவாளர் சுப்ரமணியசாமி கீழ்க்கண்டவாறு முன்வைக்கின்றார். “1950 ஆம் ஆண்டு ரயில் தடம் புரண்ட போது லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே இதே தார்மீக அடிப்படையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் நாயுடு ஆகியோர் பதவி விலக வேண்டும். அப்போது தான் நியாயமான சுதந்திரமான விசாரணை நடைபெறும். மோடியும் அவரது சகாக்களும் இதுவரை சுற்றி சுற்றிதான் வருகிறார்கள். இது முதலில் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான சாகேத் கோகலே பாசிச மோடி கும்பல் வெளியிட்டுள்ள விமானத்தை பார்வையிடுவது போன்ற லோ ஆங்கிள் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “இவரிடம் ஏதோ பயங்கரமான மற்றும் அடிப்படை தவறு இருக்கிறது. இது போன்ற ஒரு பெரிய துயரம் நடந்திருக்கும்போது லோ ஆங்கிள் கோணத்தில் யார் போட்டோ எடுப்பார்கள்? பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஆனால் சாவு வீட்டில் கூட போட்டோ சூட் நடத்துகின்ற இழிந்த குணாம்சம் கொண்ட பாசிச மோடி கும்பலிடம் குற்ற உணர்ச்சியையும், நியாயமான விசாரணை தேவை என்பதற்காக தான் விலகிக் கொள்ள வேண்டும் என்ற நேர்மையும் சிறிதளவும் கிடையாது.
பொதுவாக போயிங் ரக விமானங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று விமர்சிக்கப்படுகின்ற போது தற்போது விபத்திற்குள்ளான விமானத்தைப் பற்றி விபத்து நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக டெல்லியில் இருந்து அகமதாபாத் வரை பயணம் செய்த பயணி ஒருவரின் விமர்சனம் இதுதான்.
“ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு இரண்டு மணி நேரம் முன் தான் அந்த விமானத்தில், நான் பயணம் செய்தேன். வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில் நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பகிர்ந்தேன் என்றும், விமானத்தில் உள்ள சிறிய திரையும் இயங்கவில்லை என்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளேன் என்றும், ஏசியும் சரியாக இயங்கவில்லை. விளக்குகள் கூட சரியாக எரியவில்லை. இதுதான் மிகவும் மோசமான ஏர்லைன்ஸ்” என்றும் விமர்சித்து ஆகாஷ் வத்சா. பதிவிட்டு உள்ளார்.
போயிங் ரக விமானங்கள் பாதுகாப்பு தரம் குறைவானது என்பது மட்டுமல்ல ஏற்கனவே போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்த வழக்குகள் மீதான விசாரணைகள் கொல்லப்பட்ட பயணிகளுக்கு தரப்பட வேண்டிய நிதி ஆகியவை மோசடியான முறையில் இழுத்தடிக்கப்படுகின்றன போன்ற விமர்சனங்களும் இந்த நிறுவனத்தின் மீது உள்ளது.
இந்திய அரசாங்கம் விமான நிறுவனத்தை நடத்த துப்பு கெட்ட நிலையில் ஏர் இந்தியா அதன் ஸ்தாபகரான டாடாவிடமே ஒப்படைக்கப்பட்டது என்பது அது ஒப்படைக்கப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த நேரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் தான்.
விமான விபத்திற்கான காரணங்களை விசாரித்து கண்டுபிடிப்பதற்கு காலதாமதம் ஆகலாம். ஆனால் சாவு வியாபாரத்தை தனது தொழிலாக கொண்டுள்ள அமெரிக்காவின் இராணுவ கார்ப்பரேட் நிறுவனமான போயிங் நிறுவனத்தின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படப் போவதில்லை என்பதும், இந்த செய்திகளை வைத்துக்கொண்டு மைய ஊடகங்கள் துவங்கி சமூக வலைதளங்கள் வரை சில காலத்திற்கு பல்வேறு கோணங்களில் செய்திகள் வெளியிட்டு கல்லாகட்ட துவங்கி விடுவார்கள் என்பதும் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டிய அம்சங்கள்.
◾மருது பாண்டியன்.

கருத்துகள் இல்லை: