வியாழன், 2 மே, 2024

திருமாவளவன் : வாக்கு இயந்திர குளறுபடி '11 நாட்கள் கழித்து வெளியான தகவல் சந்தேகத்தை எழுப்புகிறது' - திருமாவளவன் பேட்டி

 nakkheeran.in :   '11 நாட்கள் கழித்து வெளியான தகவல் சந்தேகத்தை எழுப்புகிறது' - திருமாவளவன் பேட்டி
வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு வேலை நடைபெறவில்லை என உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என விசிக தலைவர்  தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
''வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது.
வாக்குப்பதிவான நாளன்று 7 மணி அளவில் வெளியிடப்பட்ட சதவீதமும் பிறகு சில மணி நேரம் கழித்து வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு சதவீதமும் நிறைய இடைவெளி கொண்டிருந்தது.
அரசியல் கட்சிகள் இதுதொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.



தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ ஆன்லைன் வழியாக பதிவு செய்வதில் சில வாக்குச்சாவடிகளில் காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாக தான் இந்த குளறுபடி நிகழ்ந்தது, மற்றபடி இதில் எந்த மேனிபுலேஷன் தவறான நடவடிக்கைகள் இல்லை என தெளிவுபடுத்தினார்.

இப்பொழுது மறுபடியும் 11 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கின்ற வாக்கு சதவீத விவரம் சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது. பெரிய அளவில் இடைவெளி இருப்பதை காண முடிகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும்;

ஆளுங்கட்சிக்கு சாதகமாக தில்லுமுல்லு செய்ய முடியும் எனவே இந்த முறை வேண்டாம். அல்லது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுமேயானால் 100% விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைத்தோம்.
அந்த கோரிக்கையை ஆளுங்கட்சி ஏற்கவில்லை. இப்பொழுது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மேலும் சந்தேகத்தை எழுப்பக் கூடிய வகையில் அல்லது ஆளுங்கட்சி தரப்பினர் மற்றும் தேர்தல் ஆணையத்தை சேர்ந்தவர்கள் மீது கூடுதலாக ஐயத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

தேர்தல் ஆணையம் அதை தெளிவுபடுத்த வேண்டும். அறிவியல் பூர்வமாக எந்த மாறுபாடும் இல்லை அல்லது தில்லுமுல்லு வேலை நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் முன் வரவேண்டும் என விசிக வலியுறுத்துகிறது'' என்றார்.

கருத்துகள் இல்லை: