Kalaignar Seithigal - Prem Kumar தமிழ்நாட்டில் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள முட்டிமோதும் நிலைமைக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தள்ளப்பட்டுள்ளார்.
குறிப்பாக, பா.ஜ.க மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை ஊடகங்களில் தன்னுடையே பெயர் எப்படியாவது வரவேண்டும் என்பதற்காக தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதையே தனது உத்தியாக கடைபிடித்து வருகிறார்.
ஐ.ஏ.எஸ் வரை படித்து பட்டம் பெற்ற அண்ணாமலை, தான் பேசுவதில் துளியும் உண்மை இல்லை என்பதை தெரிந்தும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி, ஊடகங்களில் பிரபலமானார்.
தமிழ்நாடு அரசு பல சிறப்புத் திட்டங்களை கொண்டுவந்தாலும் எதையாவது பேசி, தன்னுடையே இருப்பை காட்டிக்கொள்ள அற்ப அரசியலை மேற்கொள்ளும் நபராக அண்ணாமலை இருக்கிறார் என்ற எண்ணம் சொந்தக் கட்சிக்காரர்களிடமே உள்ளது.
அடுத்தடுத்து ஆபாச வீடியோ, ஆடியோ மற்றும் பாலியல் சர்ச்சை புகார்களில், பா.ஜ.க.வில் இருந்த பலரும் வெளியேறி வருகின்றனர். அந்தவகையில், பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கட்சியில் உளவு பார்க்கும் வேலை அதிகரித்துவிட்டதாகவும், சொந்த கட்சி பெண்களுக்கே கட்சியில் உள்ளவர்களால் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.கவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி வருகிறார்.
இதுபோல குற்றச்சாட்டுகள் ஏராளமாய் அண்ணாமலையின் மீது இருக்க அதற்கெல்லாம் பதில் அளிக்காத அண்ணாமலை, தனது வார்ரூம் மூலம் வீடியோவை வெட்டி ஒட்டி புரளிப்பரப்பும் வேலையை தொடங்கி செய்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் கூட தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கலந்துக்கொண்டு பேசிய நிகழ்ச்சியில் வீடியோ முழுவதையும் விட்டுவிட்டும், ஒருபாதியை மட்டும் வெட்டி ஒட்டி, தி.மு.க அரசுக்கு எதிராகவும், மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சித்தரித்து வீடியோ வெளியிட்டு, பின்னர் அம்பலப்பட்டுப்போனார்.
அதேபோல், மீண்டும் ஒரு மோசடி வேலையை அண்ணாமலை செய்திருக்கிறார். தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை பற்றிய போலி ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோ உண்மையில்லை என்றாலும், அண்ணாமலைக்கு தக்க பதிலடியை தனது அறிக்கையின் மூலம் கொடுத்துள்ளார் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
இந்நிலையில், உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரில் இதுதொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் பின்வருமாறு :- கேள்வி: நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில்: “இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப் பற்றி பேசி, மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக