இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது,'' என ஈரோட்டில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த சி.ஐ.ஐ., தொழிலதிபர்கள் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:ஈரோடு மாவட்டம் மஞ்சள் வணிகத்துக்கும், ஜவுளி மற்றும் கைத்தறி துணி உற்பத்திக்கும், விவசாயத்துக்கும் புகழ் பெற்றது. கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி ஆகியவற்றால் உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய வகையில், நாமக்கல் மாவட்டம் உள்ளது. பஸ்கள், லாரிகளுக்கு பாடி கட்டும் தொழில், ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு தேவையான நவீன ஆழ்துளை இயந்திரங்கள், வாகன பராமரிப்பு தொழில், மரவள்ளிக் கிழங்கை அடிப்படையாக கொண்ட உற்பத்தி பொருட்களின் மையமாகவும் நாமக்கல் மாவட்டம் உள்ளது.சேலம் மாவட்டம் கனிம வளம் அதிகமுள்ள மாவட்டம். இரும்பு, உருக்கு மற்றும் இரும்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் மக்னீசியம், சுரங்க தொழில், விவசாய உற்பத்தி என சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது. தொழில் வளர்ச்சியில், இந்தியாவில் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. தரமான போக்குவரத்து வசதி, குறைந்த செலவில் கிடைக்கும் சிறந்த மனிதவளம், அரசு அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும், முதல்வரையும் எளிதாக அணுகி தொழில் துவங்குவதற்கு ஏற்ற உதவிகளை பெறக்கூடிய சூழ்நிலை போன்றவற்றால், தமிழகம் முன்னேறி வருகிறது.ஈரோடு மஞ்சள் விவசாயிகள், வணிகர்கள் ஆகியோரின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் வணிக வளாகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், வேளாண் பொருட்கள் விற்பனை முனையம் ஒன்று பெருந்துறை சிப்காட் வளாகத்தில் தனியார் நிறுவனத்தின் நிதி பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சி மூலம் பெரியளவில் அமைக்கப்பட உள்ளது.
சிப்பம் கட்டுதல், மின்னணு எடை மேடை, குளிர்பதன சேமிப்பு கிடங்கி, இணையதளம் மூலம் விற்பனை வாய்ப்பு போன்ற நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள விற்பனை முனையத்தின் மூலம், ஈரோடு மாவட்ட விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை நல்ல விலைக்கும், லாபத்துக்கும் விற்பனை செய்யும் சூழல் ஏற்படும். ஈரோடு அருகே நஞ்சை ஊத்துக்குளியில் சிட்கோவின் இரண்டாவது கட்ட தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக